Saturday, December 6, 2014

நீங்கள் இனி அழமாட்டீர்கள்!

'...நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்.
அவர் உங்கள் மேல் திண்ணமாய் அன்புகூர்வார்.
உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்...'
(காண்க எசாயா 30:19-21,23-26)

இந்த இறைவாக்குப் பகுதியை வாசிக்கும் போது 'அன்று வந்ததும் அதே நிலா!' என்ற திரைப்படப் பாடல் தான் நினைவிற்கு வருகிறது. பழைய ஏற்பாட்டு நூலை வாசிக்கும் போது என்னுள் அடிக்கடித் தோன்றும் உணர்வு என்னவென்றால் நம் வேர்கள் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதுதான். இந்த இறைவாக்குப் பகுதியை எழுதிய ஒருவர் கண்ட நிலவைத் தான் இன்று நாம் காண்கின்றோம். மனிதர்கள் வருவார்கள். போவார்கள். ஆனால் பூமி என்றென்றும் நிலைத்து நிற்கிறது. என்னவொரு ஆச்சர்யம்! இன்று நாம் காணும் நிலவை இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து மற்றொரு மனித இனம் காணும். லைஃப் இஸ் கிரேட்!
மேற்காணும் இறைவாக்குப் பகுதியை எழுதியவர் இரண்டாம் எசாயா. எசாயாவின் நூலை மூன்று பேர் எழுதியிருக்கலாம் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதல் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு முன்பும், இரண்டாம் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்தின் போதும், மூன்றாம் எசாயா பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னும் தங்கள் நூல்களை எழுதுகின்றனர்.

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ராயேல் மக்களுக்காக எழுதப்பட்ட பகுதியே இன்றைய இறைவாக்கு.

இந்த இறைவாக்கு மூன்று வாக்குறுதிகளை உள்ளடக்குகிறது:

அ. நீங்கள் இனி அழமாட்டீர்கள். அதிக மகிழ்ச்சி என்றாலும் சரி, அதிக துன்பம் என்றாலும் சரி நம் உடல் பேசும் மௌனமொழி கண்ணீர் - அழுகை. அழுகையில் பல வகை உண்டு. நான் கண்டவரை பெண்கள் சீக்கிரம் அழுதுவிடுகிறார்கள். ஆண்களுக்கு அழுகையே வருவதில்லை. அவர்களின் அழுகை மௌனமாக உள்ளே பதுங்கிக் கொள்கிறது. ஒரு ஆண் மௌனமாக இருக்கிறார் என்றால் அவர் அழுது கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அழுகை நிலை வரும்போதும் பெண் கண்ணீரால் தன் மனதைக் கழுவிக் கொள்கிறாள். ஒரு ஆண் தன் உள்குகைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு 'எனக்கு யாரும் வேண்டாம்!' என முடிவெடுத்து விடுகிறான். குழந்தை பிறந்தவுடன் அழும் அழுகை தான் அதன் உடலியக்கத்துக்கான தூண்டுகோலாக இருக்கின்றது. எசாயா குறிப்பிடும் அழுகை அந்நிய நாட்டில் சிறைக்கைதிகளாகக் கிடந்த மக்களின் அழுகை. இனிமேல் அவர்கள் அத்தகைய அழுகையை அழப்போவதில்லை.

ஆ. அவர் உங்களை அன்பு கூர்வார். யார்? கடவுள்?

இ. உங்கள் போதகரை நீங்கள் காண்பீர்கள். நாம ஒருசிலரைப் பார்த்து 'உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்!' என்று சொல்வோம். ஒருவரை நாம் பார்க்கிறோம் என்றால் அவரின் பிரசன்னத்தை நாம் உள்வாங்குகிறோம் என்றே அர்த்தம். தன் தாயைக் காணவில்லை என்றால் குழந்தை அழுவதற்குக் காரணமும் இதுவே. தன் தாயின் பிரசன்னம் தன்னைவிட்டு அகன்றுவிட்டதாக அது நினைக்கத் தொடங்கி விடுகிறது.

மெசியாவின் வருகை அழுகை நீக்கும் அருமருந்து என்பதே இன்றைய நாளின் மையக்கருத்து.


1 comment:

  1. மெசியாவின் பிறப்பிற்காக்க் காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏசாயாவின் வழியாக பல ஆசீர்வாதங்களைப் பொழிகிறார் இறைவன்.'அழுகை'...இந்த வார்த்தையையே பலவீனமானதொன்றாக நினைப்பவர் பலர்.ஆனால் அழுவதற்கும் கூட ஒரு மனம் வேண்டும்.ஆனால் அதே சமயம் அழக்கூடியவரெல்லாம் இளகிய மனம் படைத்தவரென்றும்,அழ முடியாதவரெல்லாம் இறுகிய மனம்படைத்தவரென்றும் கூறிவிட முடியாது.அதை அவரவர் இயல்புக்கே விட்டுவிடுவோம்..
    இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் தந்தையை இறைவன் தன் அன்பாலும், அருளாலும் நிரப்பி,தன் ஆசீரையும்,அருட்கொடைகளையும் அவர்மேல் பொழிவாராக! தந்தையே..தங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் இவ்வேளையில் இறைவன் தாங்கள் மேற்கொண்டிருக்கும் படிப்பையும்,தாங்கள் ஈடுபடவிருக்கும் அனைத்துக் காரியங்களையும் தம் திருக்கரத்தால் வழிநடத்த வேண்டுகிறோம்...தங்களுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete