Wednesday, December 3, 2014

இந்தியாவில் இந்தியருக்காக!

நேற்று (திங்கள்) காலை இந்தியத் தலைநகர் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியில் புனித செபஸ்தியார் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மத்திய அமைச்சர் சாத்வி 'கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ராமரின் பிள்ளைகள்' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை தருகின்ற ஒரு நாட்டில் இந்த மாதிரி தீயிடும் சம்பவங்கள் நடப்பதும், ஆட்சியாளர்களே இப்படிப் பேசுவதும் ஏற்புடையது அல்ல.

'நாம் எல்லாரும் இயேசுவின் குழந்தைகள்' என்று சொல்வது எந்த அளவிற்குத் தவறோ, அந்த அளவிற்குத் தவறு 'எல்லாரும் ராமரின் பிள்ளைகள்' என்பது.

இன்று கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்டது எப்படி தவறோ, அதே போல காலனியவாதிகளாலும், கிறிஸ்தவ மறைபோதகப் பணியாளர்களாலும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதும் தவறே.

என்னைப் பொறுத்தவரையில் ஒருவரின் மத நம்பிக்கை என்பது நாம் குளியறையில் குளிப்பது போன்றது. நாம் எப்படிக் குளிக்கிறோம் என்பதை யாரிடமும் தம்பட்டம அடிப்பது கிடையாது. 'நீ இப்படிக் குளிப்பது சரியல்ல!' என்று சொல்வதும்,
'நீ இப்படித்தான் குளிக்க வேண்டும்!' என்றும் சொல்வது சால்பன்று. அவரவர் நம்பிக்கை அவரவரின் படுக்கையறைச் செய்தி போல ரகசியமாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது. கடவுளின் பெயரால் நாம் இன்று ஒருவரை மற்றவர் அடித்துக் கொண்டிருக்கும் போது எந்தக் கடவுளரும் நம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை தானே. ஒருகாலத்தில் கடவுளர்கள் தான் மனிதர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இன்று நிலை மாறிப்போய், கடவுளர்களைக் காப்பாற்றுவதே பெரும்பாடாகிவிட்டது.

இந்தப் பின்புலத்தில் நாளை நம் தாய்த்திருநாட்டில் நாம் கொண்டாடும் ஒரு புனிதரைப் பற்றி இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

தூய பிரான்சிஸ் சேவியர். சேவியர் என்பது இவர் பிறந்த ஸ்பெயின் நாட்டு கோட்டையின் பெயர். பிரான்சிஸ் என்பதுதான் இவரது பெயர். 1506ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தபோது இவருக்கு வயது வெறும் 46 மட்டுமே. 18 ஆண்டுகள் அருட்பணியாளராக இருந்தவர். தன் 36ஆம் வயதில் கோவா கடற்கரையில் கால் பதித்தவர். தன் மறைபரப்புப் பணியில் சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான காய்ச்சல் கண்டு இறக்கின்றார். தன் சமகாலத்துக் காலனியவாதிகளோடு இணைந்து இவர் மறைபரப்புப் பணி செய்த போது 'பேய்களின் கோவில்கள்' என்று பல கோயில்கள் தீயிலிடப்பட்டதற்கு இன்றும் வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அதையெல்லாம் இன்று நாம் மன்னித்துவிடுவோம். இவரைப் புனிதர் என்று பார்ப்பதை விட ஒரு மனிதர் என்றும், ஒரு அருட்பணியாளர் என்று மட்டும் இன்று பார்க்கலாமே.

1. 'ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்து விட்டால் அதனால் என்ன பயன்?' - இந்த இறைவாக்குப் பகுதி தான் பேராசிரியப் பணி செய்து கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியரின் மனதை மாற்றுகின்றது. வாழ்வில் நாம் எவ்வளவு உறவுகளை, பணத்தை, பொருளை சம்பாதித்தாலும், இவையனைத்தோடும் சேர்ந்து ஒரு வெற்றிடம் ஒட்டிக் கொண்டே வருகின்றது. இந்த வெற்றிடத்தின் வழியாக நம் ஆன்மா நம்மிடம் இருந்து ஓடிவிடுகின்றது. இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? கடவுள் தான் நிரப்ப முடியும் என்று கடவுள் பணி ஏற்கின்றார் சேவியர். மேற்கத்திய பின்புலத்தில் ஒருவர் தன் வாழ்வை ஏறக்குறைய தன் 21 வயதிலேயே நிர்ணயித்துவிடுகிறார். 'நான் இதைப் படிப்பேன். இந்த வேலை செய்வேன். இந்த ஊரில் வாழ்வேன். திருமணம் செய்து கொள்வேன் அல்லது இணைந்து வாழ்வேன்' என அனைத்தும் இந்த வயதிலேயே திட்டமிடப்பட்டுவிடுகின்றன. அதற்குப் பின் மாற்றம் என்பதே கிடையாது. அப்படி மாறியவர்கள் பலர் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றனர். ஆனால் சேவியர் துணிந்து மாறியிருக்கின்றார். அந்த மாற்றத்தை வெற்றியாகவும் ஆக்கியிருக்கின்றார்.

2. தன்னை முன் பின் தெரியாத ஒரு ஊருக்கு, தன் உணவுப்பழக்கம், உடைப்பழக்கம், மொழி தெரியாத ஒரு நாட்டுக்குப் பயணம் செய்கிறார். வருடத்தின் ஒன்பது மாதங்கள் 18 டிகிரி தட்பவெப்பநிலையில் வாழ்ந்துவிட்டு, வருடம் முழுவதும் 25-30 டிகிரி தட்பவெப்பநிலை நிலவும் நாட்டில் வாழ்வது பெரிய சவால். நம்மள திடீர்னு சைனீஸ் பேசச்சொன்னால் பேச முடியுமா? தன் மொழியின் உருவம் வேறு. நம் நாட்டின் மொழி உருவம் வேறு. மேலும், தென்னிந்தியா முழுவதும் அவர் பயணம் செய்த போது கொங்கனி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளைப் பேசியிருக்க வேண்டும். காடும், மேடும் நிறைந்த பகுதி. மின்சார வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி என எதுவும் இல்லாத இடத்தில் அவர் செய்த பணியை நினைத்துப் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது. இன்று எல்லாம் இருந்தும் பணி செய்வது கடினமாகத்தான் இருக்கிறது.

3. தான் சென்ற இடத்தையும், தான் சந்தித்த மக்களையும் அன்பு செய்தார். 'நான் வெள்ளைக் காரன்! நீங்க வேற கலர் காரங்க!' என்ற ஒரு மனநிலை இருந்திருந்தால் அவர் இத்தனை உள்ளங்களை சம்பாதித்திருக்க முடியாது. இன்றும் தூத்துக்குடி, கோட்டாறு பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார். வாழ்க்கை மிகப் பெரியது என்று நமக்குக் காட்டியவர்கள் இந்த வெளிநாட்டுக்காரர்கள் தாம். ஒருவேளை இந்த வெள்ளைத் தோல்களையே நாம் பார்த்திராவிடில் நாமும் கிணற்றுத் தவளைகளாகத் தான் இருந்திருப்போம்.

நான் திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்படுவதற்கு முன்னும், அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட பின்பும் கோவாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு முறைகளும் இவரின் அழியா உடல் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றேன். என் அருட்பணி வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டேன்.

இவரின் திருநாளில் இன்று என் நினைவிற்கு வருவது தூய பவுலடியாரின் வார்த்தைகள் தாம்: 'நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்'.

ஒரு டாக்டர் மற்றவரிடம் டாக்டராகவே தொடர்பு கொள்கிறார். ஒரு வக்கீல் மற்றவரிடம் வக்கீலாகவே தொடர்பு கொள்கிறார். ஒரு ஆசிரியர் மற்றவரிடம் ஒரு ஆசிரியவராகவே தொடர்பு கொள்கிறார். ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றவரிடம் ஒரு சாப்ட்வேர் இன்ஜனியராகவே தொடர்பு கொள்வார். ஆனால், ஒரு அருட்பணியாளர் மட்டுமே எல்லாருக்கும் எல்லாமாக மாறுகின்றார். குழந்தைகளுக்குக் குழந்தையாக, இளையோருக்குத் தோழராக, வயது வந்தோருக்கு மகனாக, பங்குத் தளத்தில் தந்தையாக, ஆசிரியராக, ஆலோசகராக அவர் மட்டுமே மாற முடியும். இந்த அருட்பணி நிலை தான் தூய பிரான்சிஸ் சேவியரை நம் மண்ணைத் தேடி வர வைத்தது. நம்மோடு கரம் கோர்த்துக்கொள்ள வைத்தது.

அருட்பணி நிலையில் தனிமை, விரக்தி, வஞ்சகம், ஏமாற்றம் எல்லாம் இருக்கும் தான். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்து வரும் துணிவும் இருக்கும். இவர்களுக்கென்று எந்த இல்லமும் இருப்பதில்லை. ஆனால் இவர்களில் எவரும் 'இல்லம் இல்லை' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று சில நேரங்களில் தெரியாது தான். ஆனால் என்றும் இவர்கள் வயிறு பசியால் சுடப்படுவதில்லை. எல்லாருக்கும் எல்லாமாய் மாறி நிற்பதுதான் என் அருட்பணி நிலையின் உச்சகட்டம் என்று நினைக்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது.

இவரின் உயிர் இன்று பிரிந்தாலும், இந்த மண்ணுக்கு இவரின் உடலைப் பிரிய மனமில்லை போல். ஆகையால் தான் இன்றும் காலத்தால் அழியாப் புகழுடலோடு நம் மண்ணில் நிலைத்திருக்கின்றார்.

இவரின் துணிச்சல், தியாகம், பிறரன்பு என்னைப்போன்ற அருட்பணியாளர்களுக்கு ஒரு வாழ்வியல் பாடம்.

பிரான்சிஸ் சேவியர் - இந்தியாவில் இந்தியருக்காக!


2 comments:

  1. புனித.பிரான்சிஸ் சவேரியார்...இயேசு சபைத்தூண்களில் ஒருவர்.அந்நிய மண்ணில் பிறந்து கிறித்துவத்தைப் பரப்பும் நோக்குடன் இந்திய மண்ணை மிதித்து உயிர் நீத்தவர்.இவரை நினைவு கூறும் இன்று தந்தைத் தன் குருத்துவ நிலையையும்,எல்லோருக்கும் எல்லாமுமாய் இருக்கும் அனைத்து அருட்பணியாளர்களையும் பற்றி அலசி இருப்பது அழகான பதிவு.அருட்பணி நிலையில் இருப்பவர்களைத் தனிமை, விரக்தி, வஞ்சகம் போன்ற எதிர்மறை உணர்வுகள் சமயங்களில் ஆட்கொண்டாலும் இறைவன் உடன் பயணிக்கிறார் என்ற உண்ர்வு இவர்களுக்கு ஊக்கமும்,ஆக்கமும் தரவேண்டும் என்பது இன்றைய நம் செபமாக இருக்கட்டும்.அனைத்து அருட்பணியாளர்களுக்கும் திருநாள் வாழ்த்துக்கள்! பி.கு.தந்தையே! வெள்ளைத்தோலுக்குப் பரம எதிரியான தாங்கள் " நாம் வெள்ளைத்தோல்களைப் பார்த்திராவிட்டால் நாமும் கிணற்றுத்தவளைகளாகவே இருந்திருப்போம் " என்று பதிவு செய்திருப்பது தாங்களும் அப்பப்ப உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் எல்லாமாய் மாறி நிற்பதுதான் என் அருட்பணி நிலையின் உச்சகட்டம் என்று நினைக்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது.Yesu very excellent .

      Delete