Monday, December 8, 2014

எப்படி எப்படி நடக்கணுமோ

எப்படி எப்படி நடக்கணுமோ அப்படி அப்படித்தான் நடக்கும்!

இது என்ன பெரிய தத்துவமா என்று கேட்காதீங்க!

ஒரு கோயில்ல மணி அடிக்கிற வேலைக்கு ஒருத்தர் இருந்தாராம். அவர் சரியா வேலையை செய்யவில்லை என்பதற்காக அந்தக் கோவிலின் சாமியார் ஒருநாள் அவரை வேலையைவிட்டு நீக்கி விட்டார். 'இனி என்ன வேலை செய்யலாம்? நமக்கு வேறு ஒன்றும் தெரியாதே!' என்று புலம்பிக் கொண்டிருந்தவர் இளநீர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த இளநீரை வெளிநாட்டிற்கும் அனுப்பினால் என்ன என யோசித்தவர் அதற்கான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து ஆஸ்திரேலியா வரை ஆர்டர் எடுக்கும் அளவிற்கு வளர்கிறார். ஒருநாள் ஒரு ஊரில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு களைப்பாகத் திரும்பும் சாமியார் ஒரு இளநீர் கடைக்குச் செல்கிறார். அங்கு அந்தப் பெரியவரைக் கண்டதும் மனதுக்குள் ஒரு நெருடல். 'ஐயா! உங்களை அன்னைக்கு ஏதோ கோபத்துல வெளியேத்திட்டேன்!' என்கிறார். 'பரவாயில்லை சாமி! அன்னைக்கு நீங்க என்னை வெளியேத்துனதுனால தான் இன்னைக்கு நான் இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறேன். இல்லைன்னா இன்னும் கோயில்ல மணி தான் அடிச்சிட்டு இருந்திருப்பேன்' என்றாராம்.

வாழ்வின் சில இக்கட்டடான நேரங்களில் நாம் துணிச்சலோடு எடுக்கும் முடிவுதான் வாழ்வையே மாற்றி விடுகிறது.

எனக்குத் தெரிந்த என் நண்பன் ஒருவனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தன் மகனுக்கு ஏற்ற துணையை தான் அவனுக்கு முடித்து வைக்கவில்லையே என்ற சோகத்தில் அவனின் தாயும் இறந்துவிட்டார். அடுத்தடுத்த வலிகளால் அடிக்கப்பட்ட நண்பன் ஒரு முடிவெடுக்கிறான். இனி எனக்காக மட்டும் வாழ்வேன்! தான் வாங்கும் நல்ல சம்பளத்தில் தனக்குப் போக அனைத்தையும் அநாதை இல்லத்திற்குக் கொடுத்துவிடுகிறான். 'ஏன்டா! இப்படி எல்லாத்தையும் கொடுத்துட்டால் உன் எதிர்காலம் என்ன ஆகும்?' எனக் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னான்: 'எது எது எப்படி எப்படி நடக்கணுமோ! அப்படி அப்படி நடக்கும்!'


1 comment:

  1. பல நேரங்களில் மாதக்கணக்கில்,வாரக்கணக்கில் திட்டமிட்டு சில செயல்களைச் செய்கிறோம்.சொதப்பலாகி மண்ணைக.கௌவுகிறோம்.ஆனால் சில நேரங்களில் எந்த முயற்சியுமின்றியே நாம் நினைத்ததற்கும் மேலே அமைந்துவிடுகிறது' எல்லாமே நான்தான்; என்கையில்தான்' என்ற ம்மதையைப் பல நேரங்கள் இது நம்மைவிட்டு நீக்கி விடுகிறது.முயற்சி செய்வது மட்டும்தான் நாம்;அதன் விளைவு, முடிவு ??!! நிர்ணயிப்பது நாமல்ல;எது வரினும் 'நம் நன்மைக்கே' என்ற பக்குவம் வரவேண்டும். ஏனெனில் நமக்கும் மேலிருந்து எல்லாவற்றையும் திட்டமிடுபவர் 'அவர்'...அனைவருக்கும் அன்னை மரியாளின் திருவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete