Tuesday, December 9, 2014

ஆண்டவரின் வார்த்தையோ

புல் உலர்ந்து போம். பூ வதங்கி விழும். நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். (காண்க எசாயா 40:1-11)

எங்கள் கல்லூரியின் விருதுவாக்கும் இதுதான்: 'ஆண்டவரின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்'.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தலைவர்களின்  தேவையற்ற பேச்சுக்களால், ஒவ்வாத வார்த்தைகளாலும் சர்ச்சைகள் எழும்பிய வண்ணம் உள்ளன.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் தொடக்கத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். நம்ம கலிங்கப்பட்டி வைகோ அவர்கள் நம் பிரதமரை அவன்-இவன் என்று பேசிய பேச்சு எதிர்ப்புக்களை உருவாக்கி இன்று பாஜகவோடு கூட்டணியையும் முறித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். இலங்கை அதிபரோடு நம் பிரதமர் கைகுலுக்கியது தவறாம். என்ன பாஸ் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சட்டமன்றக் கூட்டத்தில் 'பினாமி' முதல்வர், மக்கள் முதல்வரைப் பற்றி புகழாரம் சூட்டி மூன்று நாளை முத்தாய்ப்பாக முடித்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நம்ம கேப்டன் இரண்டாம் நாள் கையெழுத்துப் போட்டதோட சரி. ஸ்டாலின் குருப் என்ன பேசினாலும் வெளிநடப்பு. இவங்க ஆக மொத்தம் எதுவும் பேசல இந்த மூணு நாளும்.

ஆக, சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்வதாலும் பிரச்சினை. சொல்ல வேண்டிய வார்த்தைகளை சொல்லாததாலும் பிரச்சினை.

வார்த்தைகள் மனித உரையாடலிலும், உறவுகளிலும் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
'விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்' என்கிறார் சே குவேரா. இன்றைக்கு நம்ம ஒருவர் மற்றவரோடு உரையாடும் போதும் வார்த்தைகளில் கவனம் தேவை. 'தேவையில்லாம வார்த்தையை விடாத' என்பார்கள். மேலும், 'அதிக மகிழ்ச்சியின் போது வாக்குறுதி கொடுக்கவும், அதிக கோபமாய் இருக்கும் போது அடுத்தவரோடு பேசவும் கூடாது!' என்பார்கள். ஆக,
வார்த்தைகளால் நாம் மாட்டிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. 'வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!' என்பார்கள். ஆனால் வாயால் கெட்ட பிள்ளைகளும் அதிகம்.

'மனித வார்த்தைகள் வெறும் சோப்பு நுரை போல. கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்' என்று அடிக்கடி சொல்வார் என் பேராசிரியர் ஒருவர்.

இன்றைக்கு நாம பேசும் போது எப்படிப் பேசணும்? நாம் புல்லைப் போல் உலர்ந்தும், பூவைப் போல
வதங்கியும் போவோம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் நம் வார்த்தைகள் இனிமையாக மாறிவிடும் எனவே நினைக்கிறேன். 'எனக்கு எல்லாம் தெரியும்! நான் தான் சகலகலா வல்லவன்!' என்ற தொனியில் பேசும்போது வார்த்தை கசந்தே வெளிவருகிறது.


1 comment:

  1. 'புல்லும் உலர்ந்து போம்; பூவும் வதங்கிடும்' மனித வாழ்வின் அநித்தியத்தைக்குறிக்கும் இவ்வார்த்தைகள் நம் வாயிலிருந்து வரும் சொற்களுக்கும் பொருந்துபவைதான்.ஒரு மனிதனின்,நம்பகத்தன்மையை அவன் வாயினின்று உதிரும்சொற்கள் தான் நிர்ணயிக்கின்றன.' அரஜுணனுக்கு வில்; அரிச்சந்திரனுக்கு சொல்' என்பார்கள்.இதை வைத்துப்பார்த்தால் நம் அரசியல்வாதிகள் 'மனிதர்கள்' என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்க மாட்டார்கள்." மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், கோபமாய் இருக்கும்போது அடுத்தவரோடு பேசவும் கூடாது" ...தந்தையின் வார்த்தைகள் அனைவருமே கடைப்பிடிக்க வேண்டியவை.நாம் பேசும் வார்த்தைகள் நம்மை 'மனிதர்' என்று உறுதி செய்யட்டும்....

    ReplyDelete