Saturday, December 13, 2014

நெய்ல் பாலிஷ் நீங்க போடுவீங்களா?

நாளைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் எலியா இறைவாக்கினரைப் பற்றி இருக்கின்றது. எலியா இறைவாக்கினர் பற்றி எழுதினால் அது ரொம்ப இறையியலாகப் போய்விடும். அதனால இன்னைக்கு ஒரு சின்ன பிரேக்.

நெய்ல் பாலிஷ் நீங்க போடுவீங்களா?

இன்னைக்கு நெய்ல் பாலிஷ் கடைக்கு என் நண்பன் ஒருவனோடு சென்றிருந்தேன். உணவு இடைவேளை கொஞ்சம் கூடுதலாக இருந்தது. 'சும்மா ஒரு வாக் போவோம்!' என்றான் அவன். 'கடைக்குப் போவோம்!' என்றேன் நான். 'சரி!' என்றான்.

போகும் வழியில் ஒரே கூட்டம். என்னவென்று பார்த்தால் இன்று இத்தாலியில் ஸ்டிரைக். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இது நடக்கிற ஒன்று என்பதனால் அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை. மக்களும் கண்டுகொள்வதில்லை. என்ன பஸ், மெட்ரோ சரியா ஓடாது. மத்தபடி வாழ்க்கை ரொம்ப சகஜமாக இருக்கும்.

கடைவீதியில் ஒரே கூட்டம். மதுரை டவுண்ஹால் ரோட்;டில் தீபாவளிக்கு முன்தினம் இருக்கும் கூட்டம் போல இருந்தது. எங்கும் விழாக்கோலம். கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்ஸ். பொருட்களையும், இடத்தையும் வடிவமைப்பதில் இத்தாலியர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு கடையாய் ஆ...வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம்.

'என்ன வாங்க வேண்டும்?' என்றான் அவன்.

'நெய்ல் பாலிஷ்!' என்றேன்.

'யாருக்கு?' என்றான்.

'எனக்கு' என்றேன்.

'நீ நெய்ல் பாலிஷ் போடுவியா?' என்றான்.

'இல்லை. அதன் ஸ்மெல் எனக்குப் பிடிக்கும்!' என்று முறைத்துப் பார்த்தேன்.

கேள்விகளை நிறுத்திக் கொண்டான்.

ஒரு தெருவின் முனை வரை சென்றுவிட்டு ஒரு கடையும் இல்லை எனத் திரும்பிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்தக் கடை.

'லா கார்டினியா' என்பது கடையின் பெயர். இந்தக் கடையின் கேரி பேக்கை நிறையப் பேர் மெட்ரோவில் கொண்டு சென்று பார்த்திருக்கிறேன். இந்தக் கடையை அடிக்கடி எஃப் டிவியிலும் காட்டுவார்கள்.

சின்ன வயசுல எங்க ஊருல யாராவது சரவணா ஸ்டோர்ஸ் பை கொண்டு போனாலே...டே இந்தக் கடைக்குத் தான் டா நம்ம ஸ்நேகா அக்கா 'ஜொலிக்குதே! ஜொலிக்குதே!'னு ஆடுது!' என்று சொல்லிக் கொள்வோம்.

இந்தக் கடையில் வாங்குவது ரொம்பப் பெருமையாக இருந்தது.

கறுப்பு கலர் டாப்ஸ், கறுப்பு கலர் ஸ்கர்ட், கறுப்பு கலர் எல்லாம் என அணிந்தவளாய் ஒரு இளவல் வந்தது எங்கள் முன்னால். நாங்க குளிர் தாங்க முடியாம மூணு ஸ்வெட்டர் போட்டுட்டுப் போக பாதி உடம்போடு நின்றிருந்த அவளைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. 'பொண்ணுங்களுக்கெல்லாம் குளிராதா?' என்றேன் நண்பனிடம்.

'வாங்க! என்ன வேணும்!' என்று கேட்டாள்.

கேட்டது அவ்வளவுதான். எனக்கு என்னவோ, 'உங்க வீட்டுல சொத்து எல்லாம் வித்தாச்சா!' னு கேக்குற மாதிரி இருந்துச்சு.

சுற்றி ஒட்டப்பட்டிருந்த விலை டேக் அதை உறுதி செய்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 'உங்கி ஜெல்' என்றேன். இத்தாலியனில் 'நெய்ல் பாலிஷ்'.

'வெனித்தே!' என்று சிரித்துக் கொண்டே அழைத்துச் சென்றாள்.

'பம்பினா! ரகாட்ஸா! ஓ தோன்னா!' என்றாள். குழந்தைக்கா! இளம்பெண்ணுக்கா! பெரியவங்களுக்கா!

இதற்குப் பதில் சொன்னால் நான் கூட வந்தவனிடம் மாட்டிக் கொள்வேனே. பொத்தாம் பொதுவாக 'எல்லாருக்கும்!' என்றேன்.

எதை விற்றால் அவளுக்கு லாபம் கிடைக்குமோ அதைத் தேடி தேடி எனக்குக் காட்டினாள்.

எதை வாங்கினால் எனக்கு லாபமோ அதைத் தேடி தேடி நானும் பார்த்தேன்.

நெய்ல் பாலிஷ் வாங்கிய இடத்தில் இன்னொரு சர்ப்ரைஸூம் வாங்க முடிந்தது.

நெய்ல் பாலிஷ் வாசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலாக நெய்ல் பாலிஷ் ஸ்மெல் நுகர்ந்தது ரோட்டில் கிடந்த ஒரு காலி பாட்டிலில் இருந்துதான்.

ஐந்தாம் வகுப்பு வரை ஆண் ஆசிரியர்தான். பவுடர் வாசனை தவிர வேறு வாசனை அறியாதவர்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்து அறிவியில் வகுப்பு எடுத்த எஸ்தர் கமலா டீச்சரைப் பார்த்தபின் தான் நெய்ல் பாலிஷின் அர்த்தம் புரிந்தது. தினமும் ஒரு கலரில் இருக்கும் அவரின் நகம். அவர் வரைந்த  டயாகிரம் நினைவிருக்கிறதோ இல்லையோ நீண்ட விரலில் அவர் இட்டு வரும் நெய்ல் பாலிஷ் நினைவிருக்கிறது.

நம்ம ஊர்ல மருதாணி விரலுக்குதான் என்றாலும், அது நகத்துக்கு என யாரும் சொல்வதில்லை.

நெய்ல் பாலிஷ் போட்ட முதல் பெண் யாராக இருக்கும்?

நான் எல்லீஸ் நகரில் பணியாற்றிய போது அன்பியக் கூட்டத்திற்கு சென்ற இடத்தில் ஒரு குழந்தை 'நான் ஃபாதருக்கும் நெய்ல் பாலிஷ் போடுவேன்' என்று அடம்பிடித்து என் வலது கை பெருவிரலில் போட்டும் விட்டது. கொஞ்ச நாளா அந்த நெய்ல் பாலிஷ்க்கே பதில் சொல்ல முடியவில்லை.

சின்ன வயசுல ஏதோ ஒரு டிராமாவுக்காக நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் போட்ட ஞாபகம் இருக்கிறது.

ஆனா ஒரு நல்ல ஃப்ளாஷ்பேக் இருக்கு.

ரெக்கார்ட் டான்ஸ் கேள்விப்பட்றீக்கிங்களா? 'ராஜ்டிவி புகழ்' அல்லது 'ஏதோ ஒரு டிவி புகழ்' என்று சொல்லிக் கொண்டு கிராமத்திற்கு வந்து முழு இரவும் ஆடல் பாடல் என இருக்கும். நாங்கள் சர்வே எடுக்க ஒரு ஊருக்குச் சென்றோம். போன நேரம் அங்கே ஒரு இந்துக் கோவில் திருவிழா. ஸ்பெஷல் ஆடலும் பாடலும். இரவு 10 மணிக்கு என்று சொல்லி தொடங்க 12 ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக ஆட்டத்தின் சூடு கூடும். இரண்டு மூன்று மணிக்கு திடீரென ஆண்கள் கூட்டம் அதிகமாகியது. எல்லாரிடமும் காசு வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்னடா காசு கேட்குறாங்கனு நினைச்சிகிட்டே நானும் என் நண்பர்கள் இருவரும் நகன்றோம். ஆனால் மடக்கி விட்டார்கள். நில்லுங்க தம்பி! என்று சொல்லி எங்களிடம் ஒரு தீக்குச்சி கொடுத்தார்கள். ஒரு தீக்குச்சிக்கு பத்து ரூபாய். ஆளுக்கு ஒன்று என மூன்று வாங்கினோம். 'இது எதுக்குண்ணே!' என்றேன். அந்த மேடைக்குப் பின்னால ஒரு ரூம் இருக்குல. அங்க இப்ப ஆடுண பொண்ணு இருக்கும். லைட் இருக்காது. இந்த தீக்குச்சி வெளிச்சத்துல உன் லக்குக்கு என்ன தெரியுதோ அதைப் பார்க்கலாம். போய் வரிசையில் நின்னு! என்றார். கைகால் எல்லாம் நடுங்கியது. 'நம்ம என்ன கொலையா பண்ணப் போறோம்! வாடா வரிசையில் நிப்போம்!' னான் என் நண்பன்.

தீக்குச்சி எரியுமா? எரியாதா? உரசும் போது ஒடிந்திடுமா! னு நடுங்கிக் கொண்டே வரிசையில் போனேன்.

என் தீக்குச்சி நேரம் வந்தது. உரசினேன். எரிந்தது.

வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன்.

அவள் நெய்ல் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள்.

1 comment:

  1. என்ன தந்தையே! இதையும் கூட 'மெசியா' வின் வருகைக்குத் தயாரிப்பு( புற) என எடுத்துக்கொள்ளலா மா? படித்துப் படித்து அலுத்துப் போன களைப்புக்கு நல்ல ப்ரேக் தான் போங்க.....

    ReplyDelete