Thursday, December 11, 2014

சும்மா மரம் மாதிரி நிக்காத!

பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன். சித்திம் மரம், மிருதச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன். பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். (காண்க. எசாயா 41:13-20)

இரண்டு நாட்களுக்கு முன்பாக சமுத்திரக்கனி மற்றும் நட்சத்திரங்கள் நடித்த 'காடு' திரைப்படம் பார்த்தேன். மரங்கள் வெட்டப்படுதலையும், அதைக் காப்பாற்றுவதற்கான தேவையையும் முன் வைத்து படம் எடுக்கப்பட்டிருந்தாலும், ஊர் ஒற்றுமை, சிறையில் நடைக்கும் கொலைகள், லஞ்சம், போட்டித் தேர்வு என அனைத்தையும் பற்றிப் பேசுகின்றது 'காடு'. சமுத்திரக்கனியின் புரட்சிகரமான வசனங்கள் நம்மைத் தூண்டி எழுப்புவதாக உள்ளன.

இன்றைக்கு எல்லாரும் காடு வளர்க்கிறத பற்றிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் வத்தலக்குண்டுல இருந்து கொடைக்கானல் போகும் போது மரங்களின் அடர்த்தியும், வளர்த்தியும் ஆச்சர்யத்தைத் தரும். இன்று அடர்த்தியான காடெல்லாம் வெறும் கட்டாந்தரையாகவும், செங்குத்துப் பாறையாகவும் மட்டுமே காட்சி தருகின்றது. சாலைகள் அகலப்படுத்துதல் என்று இருந்து கொஞ்ச மரங்களும் வெட்டப்படுகின்றன.

நம் இலக்கியங்களில் மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

அகநானூற்றில் ஒரு பாடல் உண்டு.

ஒரு தலைவன் தன் தலைவியைச் சந்திக்க எங்கு வர வேண்டும் என்று கேட்பான்? அதோ அங்கே தெரியும் புன்னை மரத்தடியில் சந்தித்து நாம் உரையாடுவோமா என்று கேட்பதற்கு தலைவி சொல்வாள். அந்த புன்னை மரத்தடியில் மட்டும் வேண்டாம். ஏனென்றால் என் சின்ன வயதில் ஒருமுறை நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது இந்த புன்னை சிறு செடியாக இருக்கக் கண்டேன். அதை என் அன்னையிடம் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து, 'இந்தப் புன்னை மரமே இனி உன் தங்கை. உன் தங்கையைப் போல இதைப் பேணி வளர்' என்றாள். அன்று முதல் நான் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் புன்னைச் செடிக்கும் நீர் ஊற்றி வந்தேன். இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. வளர்ந்து நிற்பது மரமல்ல. என் தங்கை. என் தங்கையின் முன்னே நாம் காதல்மொழி பேசுவது தகுமா? என்று வெட்கத்துடன் கேட்பாள் தலைவி.

'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொன்ன பாரதிவரை மரங்களும், அவைகளைச் சார்ந்து வாழும் பறவை, விலங்குகளும் மனிதர்களிடமிருந்து ஒருபோதும் பிரித்துப்பார்க்கப்படவே இல்லை.

இன்று எல்லா மரங்களையும் அழித்துவிட்டு பால்கனியில் ரோஜாச் செடிக்குத் தண்ணீர் ஊற்றி மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் மரங்களை வழிபட்டனர். ஒவ்வொரு மரத்திலும் இறந்த நம் முன்னோர்களின் ஆன்மா குடியிருக்கிறது என்பதும் நம் நம்பிக்கை. மரங்களும் பேசும். மரங்களும் பாடும். மரங்களுக்கும் உயிர் உண்டு.

விவிலியத்தில் படைப்பின் தொடக்கத்திலிருந்து மீட்பு வரலாறு வரை மரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மரத்தால் வந்த பாவத்தை சிலுவை மரத்தால் துடைத்தெடுக்கின்றார் இயேசு.

எசாயாவின் இறைவாக்கு இன்று நமக்கு இயற்கையையும், காடுகளையும், மரங்களையும் பேணிக்காக்க அழைப்பு விடுக்கிறது.

சின்ன வயசுல எங்க ஊர்ல லீவு விட்டா நாங்க விளையாடுறது மரத்தடி நிழலில் தான். வேப்பமர முத்து எடுத்தல், விறகுக்குச் செல்லல், ஆடுகளை அவற்றில் கட்டிப் போடுதல் என கலர்புல்லாக இருந்தது இளம்பருவம். இன்று எங்கள் ஊரில் கருப்பசாமி கோயில் மரம் மட்டும் தான் எஞ்சியிருக்கின்றது. வேகமாக வாழ்க்கை நிலையை மாற்றிக்கொண்டு விட்டோம்.
பசுமையான மரங்களெல்லாம் அழிந்து இன்று கான்ங்ரீட் மரங்களாகிவிட்டன.

'இந்தப் பூமிப் பந்தின் கடைசி மரமும் வெட்டப்பட்டு,
கடைசி மீனும் பிடிக்கப்பட்டபின் தான் நமக்குத் தெரியும்
வெறும் பணத்தைத் திண்ண முடியாதென்று...'
என சொல்வார் ஒரு எழுத்தாளர்.

இன்று மரங்களை நாம் வளர்க்கவில்லையென்றாலும் நமக்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தை நின்று வேடிக்கை பார்க்கலாம். முடிந்தால் தொட்டுப் பார்க்கலாம்.

'சும்மா மரம் மாதிரி நிக்காத! போய் வேலையைப் பாரு!' என்று யாரோ எங்கேயோ திட்டுவது என் காதில் விழுகின்றது.


2 comments:

  1. 'மரம்' எனும் வார்த்தை நம் வாழ்வோடு இரண்டிறக் கலந்ததுதான்...அது நமக்கு மீட்பைக் கொண்டுவந்த 'சிலுவை' மரமாயினும்,புத்தருக்கு ஞானம் புகட்டிய 'போதி' மரமாயினும்,நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்த்துடிப்போடு இருக்க நமக்கு 'பிராணவாயு'வை அளவின்றித் தரும் எந்த மரமாயினும் அவை போற்றுதற்குரியவையே! இவற்றை வளர்க்க இயலாது போயினும் அழிக்கத்துணை போக வேண்டாமே! தலைவி தலைவனிடம் தான் அன்பு செய்யும் புன்னை மரத்தைத் தன் தங்கையாகப் பாவித்துக்குக் கூறுவது தந்தையின் கற்பனாசக்திக்கு நல்ல எடுத்துக்காட்டு." இந்த பூமியின் கடைசி மரமும் வெட்டப்பட்டு,கடைசி மீனும் பிடிக்கப்பட்டபின் தான் நமக்குத்தெரியும் வெறும் பணத்தைத் தின்ன முடியாதென்று" ....சாட்டையடிகள்.மரங்களைக் காப்பதும்,மனிதனைக்காப்பதும் ஒன்றுதான்.இன்றையப் பதிவின் ஒவ்வொரு வரியுமே இரசிக்கும்படியாக இருந்தன.தந்தைக்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. பகற்குறி வந்த தலைமகனைத் தோழி
    வரைவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்


    பகலில் தலைவன் தலைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டின் அருகே உள்ள புன்னை மர நிழலில் வந்து காத்திருந்தான். தோழியோ அவன் இதுவரை காதலித்தது போதும் தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தூண்டவேண்டும் என எண்ணினாள்..

    அதனால் தலைவனிடம் தோழி கூறுவாள்........

    நீயோ தலைவியைச் சந்தித்து மகிழ்வதற்காக இங்கு வந்திருக்கிறாய். ஆனால் தலைவியோ இவ்விடத்தில் உன்னுடன் மகிழ்ந்து உறவாட விரும்பவில்லை. ஏனென்றால்....

    யாரவது தம் தங்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா?
    ஆம்... நீ நிற்கும் இந்த புன்னை மரம் எங்களுக்குத் தங்கை உறவாகும். அதனால் நீ வேறு மர நிழல் உண்டா என்று பார் என்கிறாள்....

    இதுவே தலைவனிடம் தோழி கூறியது....

    ReplyDelete