Thursday, December 18, 2014

கொஞ்சம் கொஞ்சமாய்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான நவநாளை நேற்று நாங்கள் தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் பாடல், வாசகம் என தயாரிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

கடவுள் தன் ஒரே மகனை இந்த உலகத்திற்குக் கொடுத்த நிகழ்வே கிறிஸ்து பிறப்பு.
இன்று மாலை ஒரு வீட்டிற்குப் போனேன். மாதம் ஒருமுறை சந்தித்து நற்கருணை கொடுக்கும் இல்லம். ஒரு அம்மா. இரண்டு மகள்கள். அம்மாவுக்கு வயது 64. பிள்ளைகளுக்கு வயது 42, 36. இரண்டுமே பெண் குழந்தைகள். இரண்டு பேருக்குமே திருமணம் நடக்கவில்லை. அண்ணன் ஒருவரும் உண்டு. வயது 45. அவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். இளைய பொண்ணுக்கு கொஞ்சம் மனவளர்ச்சி குறைவு. ஆனாலும் எல்லாருடைய முகத்திலும் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.

இன்று நற்கருணை கொடுத்து முடித்தவுடன் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து சொன்னேன். கையில் ஒரு கேக்கும், ஒயின் பாட்டிலும் கொண்டு சென்றேன். கொடுத்தவுடன் அந்தத் தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி. எங்க வீட்டுக்கு யாருமே வரமாட்டாங்க! ஆனா நீங்க வந்தது மகிழ்ச்சி என்றார். வீட்டுல எல்லாரையும் கேட்டதாகச் சொல் என்றார். அவர் ஒரு கணிதப் பேராசிரியை. இந்தியர்கள் பூஜ்யத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் உலகத்தில் எந்தக் கணிதமும் இன்று சாத்தியமில்லை. எந்தக் கம்ப்யூட்டரும் கண்டுபிடித்திருக்க முடியாது என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.
எனக்கு இன்று மிஞ்சிய கொஞ்ச நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி.

இன்னைக்கு நம் கிட்ட இருக்கும் பெரிய பிரச்சினையே இதுதான். நம்ம மத்தவங்களுக்கா நம்மைக் கொடுப்பது கிடையாது. அதுக்கு சப்போர்ட்டா நாம சில சித்தாந்தங்களையும் வேறு உருவாக்கிக் கொள்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுக்கத் துவங்குதலே கிறிஸ்துபிறப்பு. இல்லையா?



2 comments:

  1. " கொடுத்தலின் இன்பம் பெறுவதில் இல்லை" என்று பாடுகிறோம்; " இறைக்கிற கிணறே சுரக்கும்" என்று கூறுகிறோம்.ஆனால் பல சமயங்களில் கொடுக்க வேண்டிய நேரம் வரும்போது நம் கைகளை சுருக்கிக் கொள்கிறோம்.கொடுத்தல் எனில் 'பொருட்கள்' என்றுதான் அர்த்தமில்லை.நமது நேரம், ஒரு ஆறுதலான வார்த்தை, புன்முறுவல், கைகுலுக்கல்,ஆறுதலான ஒரு அணைப்பு...எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.இவை அத்தனைக்கும் ஏங்குபவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்.தன் நிலை துறந்து நமக்காக இறங்கி வந்த 'குழந்தை'யைக் கொண்டாடும் இந்நாட்களில் கொடுத்தலைப் போற்றுவோம்; அதன் 'சுகத்தை' அனுபவிப்போம்.தக்க நேரத்தில் வந்த தந்தையின் தூண்டுகோளான வார்த்தைகளுக்கு நன்றி!!

    ReplyDelete