Tuesday, December 2, 2014

ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு!

அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். (காண். எசாயா 11:1-10)

இன்று மாலை கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். இரண்டு பேர் ஒரு மரத்தடியில் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தனர். எனக்கே எதிரே மற்றொருவர் தன் நாயோடு வந்து கொண்டிருந்தார். இரண்டு தரப்பினரிடம் இருந்ததும் நன்று பழக்கி வைக்கப்பட்ட, தினமும் பயிற்சி கொடுக்கப்படுகின்ற வீட்டு நாய்களே. ஆனால் இரண்டு நாய்களும் ஒன்றுக்கொன்று சந்தித்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று பாய ஆரம்பித்துவிட்டன. அவைகள் சண்டையிடும் உக்ரத்தைப் பார்த்து நாய் உரிமையாளர்களும் கைகளில் பிடித்திருந்த கயிறுகளை உதறிவிட்டனர். நாய்ச்சண்டை நமக்கெதுக்கு என்று நானும் இல்லம் திரும்பினேன்.

என்னதான் செல்லப்பிராணி என்று வீட்டில் வளர்த்தாலும் நாயின் இயல்பு மாறுவதில்லை. தன்னை வளர்த்த யானைப் பாகனையே யானை கொன்று போட்ட நிகழ்வுகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். மனிதர்களாகிய நாமும் என்னதான் ஆளுமை வளர்ச்சி, படிப்பு என்று இருந்தாலும் சமயம் கிடைக்கும் போது நம் இயல்பும் வெளிப்பட்டு விடுகிறது. நாம் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமையும், யாரையும் சுடலாம் என்று சட்டமும் இருந்தால் நாமும் இந்நேரம் நிறையப் பேரைச் சுட்டுத் தள்ளியிருப்போம். இல்லையா?

மேலே குறிப்பிட்டுள்ள எசாயா வாசகப்பகுதியில் ஒரு விநோதம் இருக்கின்றது. அதாவது, மெசியாவின் வருகையின் போது துன்பம் எதுவும் இருப்பதில்லை. பிறருக்குத் துன்பம் தருவதை தங்கள் இயல்பாகக் கொண்ட பாம்பு, சிங்கம், சிறுத்தையின் இயல்புகள் கூட மாறிவிடும் என்று முழங்குகின்றார் எசாயா.

சிங்கம் எப்போது மற்றொரு விலங்கை வேட்டையாட மறுக்கும்? தன் வயிற்றுக்கு உணவு கிடைக்கும் போது. தன் வயிறு நிறைந்து விட்டால் அது மற்ற உயிருக்கு தீங்கிழைக்காது.

மனிதர்கள் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் - பசி. பசி வந்தவுடன் கொஞ்சம் எடுக்க, பின் அதுவே ஆசையாக மாற தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் நாம் அந்த இயல்பை விட்டுவிட நினைத்தாலும் அந்த இயல்பு நம்மை விட்டுவிடுவதில்லை.

இன்று நம்மிடம் நாம் விரும்பாத இயல்பு ஒன்று இருந்தால் அதன் காரணத்தை ஆராய்ந்து அதை விட்டுவிடும் மனப்பக்குவம் பெறலாமே!


1 comment:

  1. ஆண்டவருக்குரிய நாள் வரும்போது பல நல்ல விஷயங்கள் ...அவை இயற்கைக்கு முரண்பாடாக இருப்பினும் நடக்கும் என்று கூறுகிறது விவிலியம்.மனிதனோ,மிருகமோ..தங்கள் தேவைகள் நிறைவடையும் போது அடுத்தவரைத் துன்புறுத்துவதில்லை.இதற்கு விதி விலக்கும் உண்டு.ஆனால் தேவைகள் நிறைவடையாத போது மனிதன் மிருகத்திற்கும் கீழாக இறங்கி விடுகிறான்.தேவை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் தப்பில்லை...ஆனால் பேராசைகள்?! சிந்திப்போம்....செயல்படுவோம்.அந்தந்த நாளின் மூலத்தை வாசிக்கத் தூண்டும் தந்தைக்கு நன்றிகள்!...,

    ReplyDelete