Tuesday, December 16, 2014

எந்தக் கடவுள்னு தெரியலையே!

கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
(காண்க செப்பனியா 31:1-2, 9-13)

நேற்று காலை எங்கள் பங்கில் உள்ள ஒரு பெண் (வயது 40 இருக்கும்) தான் பேசும் பொய் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். குவால்கே வோல்த்தா தீகோ லெ புஜ்ஜியே பியான்கே! என்றார். அதாவது, ஒரு சில நேரங்களில் நான் வெள்ளைப் பொய்கள் சொல்வதுண்டு. புஜ்ஜியா என்றால் பொய், பியான்கா என்றால் வெள்ளை. எனக்கு சுருக்கென்றது. அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்தாலும் அந்தப் பெண்மணியிடம் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டேன். 'மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காத பொய்கள் தான் வெள்ளைப் பொய்கள்!' எனக்கு சுருக்கென்று இருந்ததற்குக் காரணம் புரிகிறதா. ஆக, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கவில்லையென்றால் அது வெள்ளை. தீங்கிழைத்தால் அது கறுப்பு.

இது மட்டுமல்ல, தெம்ப்போ நேரோ என்றால் கறுப்பு நேரம். இதன் பொருள். இக்கட்டான நேரம். நல்ல நேரம் என்றால் தெம்ப்போ பியான்கோ. கெட்ட நேரம் என்றால் நேரோ.

நாம் பிரிண்ட் எடுக்கும் போது பயன்படுத்தும் வார்த்தை 'பிளாக் அண்ட் ஒயிட்' அல்லது 'கறுப்பு வெள்ளை'. ஆனால் இத்தாலியனில் மட்டும் தான் 'பியான்கோ நேரோ' அவர்கள். நேரோ பியான்கோ என்று அழைப்பதில்லை.

இன்று எல்லா இடத்திலும் பேசப்படும் ஒரு வார்த்தை ரேஸிஸம். இது இல்லையென்று போப்பாண்டவர் அடிக்கடி சொன்னாலும், அவர் சொல்லிக்கொண்டிருக்கும் வத்திக்கானிலேயே நிறைய இருக்கிறது என்பதுதான் கன்னத்தில் அறையும் உண்மை.

நாம் பேசும் வார்த்தைகள் நம்மை ரேஸிஸ்;ட் எனவே காட்டுகின்றன.

இரண்டு வாரங்களாக நம் நாட்டில் ஒரு செய்தி. அதாவது அலிகார் மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு திருவிழா அன்று 4000 கிறிஸ்தவர்கள் தங்களின் தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்புகின்றார்களாம். மேலும் ஒரு செய்தி இன்று மாநிலங்களவையில் எழும்பிய ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் இப்போதுள்ள மத்திய அரசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு விடுதலை மறுப்பது. இனத்தில் மட்டும் வெறி இருப்பது இல்லை. மதங்களிலும் வெறி இருக்கின்றது. அந்த 4000 பேரும் கிறிஸ்தவ மதத்தை விட்டுவிட்டு எந்த மதமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கு நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுவேன். ஆனால் ஒரு வெறியிலிருந்து மற்றொரு வெறிக்கு மாறுவதால் எந்தப் பயனும் இல்லையே.

இன்று மாலை எங்கள் கல்லூரியில் கவுன்சில் மீட்டிங் நடந்தது. அதில் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டு வரும்போது மேற்கத்திய வெள்ளைக் குருக்களின் பகிர்வு எல்லாம் என்னவாக இருந்தது என்றால் அவர்கள் படித்து முடித்தவுடன் உலகெங்கும் சென்று, குறிப்பாக வளரும் நாடுகளுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதாகச் சொன்னார்கள். நம்ம வாய் சும்மா இருக்குமா? 'ஏன் தம்பி! உங்க ஊருப் பிரச்சினையே டிப்பர் லாரி வச்சி அள்ளுற மாதிரி இருக்குல. அதைப் பார்க்காம நீங்க ஏன் மத்தவங்களுக்குப் பஞ்சாயத்து பண்ணனும் னு நினைக்கிறீங்க! இந்த வெள்ளைத் தோல்களுக்கு எப்பவும் ஒரு காம்ப்ளக்ஸ். நாங்கதான் மெசியா. நாங்கதான் உலகைக் காப்பாத்துவோம். எங்களுக்கு தான் எல்லாம் தெரியும். இது மாற வேண்டுமென்றால் நாம் சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.

இன்றைய முதல்வாசகப் பகுதியில் மற்றவர்களை ஒடுக்கும் நகருக்குக் கேடு என்கிறார் செப்பனியா இறைவாக்கினர்.

நாமும் இன்று எவ்வளவோ வகையில் மற்றவர்களை ஒடுக்குகிறோம்.

இவங்க இப்படித் தான் இருக்கணும். அவங்க அப்படித்தான் இருக்கணும் அப்படின்னு ஒரு இலக்கணம் எழுதிடுறோம். அந்த இலக்கணத்துப் படி அவங்க நடக்கணும். அப்படி நடக்கலனா நாம அவங்களுக்கு முத்திரை குத்துவோம்.

இன்று ஆண்டவர் இந்த முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு தரும் வாக்குறுதி இதுதான்: நீங்கள் என் மேய்ச்சலைக் காண்பீர்கள்.

பங்குத் தளத்தில் சில நேரங்களில் மக்கள் அருட்பணியாளர்களுக்கு வெகு எளிதாக முத்திரையைக் குத்தி விடுவார்கள். எனக்கு அடிக்கடி ஒரு யோசனை வரும். நமக்குன்னு ஒரு வீடோ, பிள்ளையோ, உறவோ இல்லாததால் தான் போற வாரவங்க எல்லாம் ஒரு குத்து குத்திட்டுப் போறாங்கண்ணு. இந்த மாதிரி நேரத்துல எங்க அம்மா நினைவு தான் எனக்கு வரும். அம்மாவுக்கு மட்டும் தான் தன் மகன் ஃபாதரா இருந்தாலும், தன் மகள் சிஸ்டரா இருந்தாலும் தனக்கு மகன் மற்றும் மகள். மற்ற எல்லாருக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை தான்!' 'நீ இப்படி இருக்கணும்!' 'நீ அப்படி இருக்கணும்!'

அருட்பணி நிலையின் அர்த்தம் புரியும் முன் வாழ்க்கை முடிந்துவிடும் போலவே தோன்றுகிறது.

எங்கோ தொடங்கி எங்கோ சென்றுவிட்டேன்.

சிம்பிள் மெசேஜ் தான் இன்றைய இறைவார்த்தை.

யாரையும் நாம கஷ்டப்படுத்தக் கூடாது. அப்படியே கஷ்டப்பட்டாலும் நமக்குக் கடவுள் இருக்கார்.

கடவுள் இருக்கார்னா...எந்தக் கடவுள்னு தெரியலையே!


1 comment:

  1. தந்தையே! மகிழ்ச்சியின் நேரமிது. ஏன் இத்துணை சோகம்? அருட்பணியாளர்கள் எல்லாம் எடுப்பார் கைப்பிள்ளை என்று யார் சொன்னது? அவர்கள் ' எல்லோருக்குமே கைப்பிள்ளை'.எந்த முத்திரை உங்கள்மேல் குத்தப்பட்டால் என்ன? அதான் " நீங்கள் என் மேய்ச்சலைக்காண்பீர்கள்" என்ற ஆசீர்வாதம் உங்கள் மேல் பொழியப்பட்டிருக்கிறதே! கடவுள் இருக்கார் என நம்புவதோடு விட்டு விடுங்கள்.எந்தக் கடவுள் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகாதீர்கள்...உங்களுக்கு விடை கிடைக்காது......

    ReplyDelete