Thursday, December 4, 2014

டே! கோழி முட்டை!

'இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை. அவன் முகம் வெளிறிப் போவதில்லை.' (காண்க. எசாயா 29:17-24)

மனவியல் நிபுணர்கள் ஒரு மனிதர் நன்றாகக் கையாள வேண்டிய ஒரு மனநிலை எனச் சொல்வது எதுவென்றால் 'சென்ஸ் ஆஃப் ஷேம்'. நாம் ஆடை உடுத்தத் துவங்கும் அன்றே உடல் சார்ந்த மான உணர்வு தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதும் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த போது விடுதி மாணவர்கள் உடை மாற்றக் கொடுக்கப்பட்ட இடம் 'பாக்ஸ் ரூம்' எனப்படும் பெட்டிகள் வைக்கும் அறை. எனக்குத் தெரிந்து சில மாணவர்கள் இடுப்பில் துண்டணியாமல் வெகு இயல்பாக உடை மாற்றுவர். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியவேயில்லை. ஏன்! புனே குருமடத்தில் தனியறை இருந்த போதும் துண்டு உடுத்தி உடைமாற்றம் பழக்கமே தொடர்ந்தது. இப்போ எப்படின்னு கேட்காதீங்க! உடல் சார்ந்த மான உணர்வு ஒருவரின் இல்லத்திலேயே, சிறு வயதிலேயே புகுத்தப்படுகிறது. மேலும், யார் ஒருவர் தன் உடலை இருப்பது போல ஏற்றுக்கொள்ளத் துணிகிறாரோ அவர்தான் உடல் சார்ந்த மான உணர்வை நன்றாகக் கையாள முடியும்.

இரண்டாவதாக, மனம் சார்ந்த மான உணர்வு. அதாவது நம்ம ஊரில் பேசப்படும் மானமா, உயிரா பிரச்சினை. ஒரு சிலருக்கு உயிரை விட மானம் தான் பெரியது என நினைப்பார்கள். தன் வெற்றுடலை மூன்றாம் நபர் பார்த்ததற்காக தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மானத்தைவிட உயிர்தான் பெரிது. ஏன் நம்ம உடலை டாக்டர் பார்க்க அனுமதிப்பதில்லையா? அதைப் போல எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே. தலைப்பிரசவத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும் புதியதொரு உடல் சார்ந்த உணர்வைப் பெறுகிறார் என்றும், அதற்குப் பின் அவருக்கு உடல் சார்ந்த மானம் பெரிதாகத் தெரிவதில்லை என்றும் சொல்வார்கள்.

மூன்றாவதாக, தன்மானம். இது மேற்சொன்ன இரண்டையும் தாண்டியது. தனி மனித உரிமை, மதிப்பு சார்ந்தது இது. அதாவது நம் சுய மதிப்பிற்கு பங்கம் விளைந்தால் நாம் தன்மானம் இழக்கிறோம். உதாரணத்திற்கு, தெருவில் போகும் போது நம் சாதி பெயரைச் சொல்லி ஒருவர் நம்மை அழைக்கிறார் என்றால் அங்கே நம் தன்மானம் போகிறது. அதாவது, நாம் பிறந்த சாதி ஒருபோதும் நாமாக இருக்க முடியாது. அல்லது ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்றதற்காக, 'டே! கோழி முட்டை!' என்று சொல்வது தன்மானத்திற்கு எதிரானது.

இந்த மூன்றாவது வகை மானத்தைப் பற்றியே இன்றைய இறைவாக்குப் பகுதி பேசுகின்றது.

யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை.

அந்நியர்களின் படையெடுப்பில் இஸ்ராயேல் மக்கள் அனுபவித்த பெரிய வேதனை என்னவென்றால் அவமானம். அதாவது, தங்களுக்காகப் போரிட ஒரு கடவுள் இருந்தும் தாங்கள் தோற்கிறோமே என்ற நினைப்பும், அந்நியர்களின் கேலிப்பேச்சும் தான். இதிலிருந்து விடுதலை தருவதாக இருக்கிறது மெசியாவின் வருகை.

தன்மானத்தை நாம் வெறும் உடல் மானத்தோடு சேர்த்துக்கொள்ளத் தேவையில்லை. நம் மேல் நாம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதை, அறிவைக் நம் தன்மானத்தின் அளவுகோல்.

'வெ மா சூ சொ' இருந்தால் வாழ முடியாது என்று சொல்வார்கள் சிலர். அதாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் வாழ முடியாதாம்.

இதைப்பற்றிய ஒவ்வொருவரின் கருத்து மாறுபடக்கூடியதே!




1 comment:

  1. 'மானம்'..இது உடல் சார்ந்ததாயினும், மனம் சார்ந்ததாயினும் அவரவர் இயல்பைப் பொறுத்தது.இன்று இவ்வார்த்தைகளுக்குள்ள அர்த்தமும்.முக்கியத்துவமும் மிக மிக்க் குறைந்து வருகிறது. நேற்று தவறென்று நினைத்த பல விஷயங்கள் இன்று சரி என்று நினைக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம்." மயிரினும் உயிர்நீத்த கவரிமான்கள் " எல்லாம் நேற்றையக் கதாபாத்திரங்களாகி விட்டன.ஆனாலும் கூட இந்தத் தன்மானம்,சுயமரியாதை போன்ற வார்த்தைகள் தான் இன்று மனிதனை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன. இதையே நாம் விவிலியத்தின் துணை கொண்டு பார்க்கும்போது "அவரை ஏறெடுத்துப்பார்ப்பவர்கள் அவமானத்தினால் தலைகுனிய மாட்டார்கள்" என்று அறிகிறோம்.அவமனம் இல்லையெனில் நம்மிடமிருப்பது 'மானம்' தானே! அதை நம்மிடம் தக்கவைத்துக்கொள்ள 'அவரை' ஏறெடுத்துப்பார்ப்பதில் என்ன கஷ்டம்?!

    ReplyDelete