Saturday, September 2, 2023

திரும்பிப் பார்த்து!

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு

எரே 20:7-9. உரோ 12:1-2. மத் 16:21-27.

திரும்பிப் பார்த்து!

இன்றைய முதல் வாசகப் பகுதி (காண். எரே 20:7-9), 'எரேமியாவின் கெத்சமனி' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கூர் என்ற குருவுக்கும் எரேமியாவுக்கும் எழும் வாக்குவாதத்தில், பஸ்கூர், எரேமியாவைத் தாக்கிச் சிறையில் அடைக்கின்றார் (காண். எரே 20:1-2). எரேமியா எருசலேமுக்கும் அதன் ஆலயத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்ததற்காக பஸ்கூர் அவரைத் தண்டிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையாலும், உடன்படிக்கை மீறுதலாலும் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதாலேயே எரேமியா அவ்வாறு இறைவாக்குரைக்கின்றார். ஆனால், பஸ்கூர் அதை விரும்பவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கருதி அன்பு செய்த நகரமும் ஆலயமும் அழிந்துபோகும் என்ற செய்தியை, தெய்வநிந்தனையாகவும், நாட்டிற்கு எதிரான சதியாகவும் கருதினார் பஸ்கூர். தான் பிறந்த ஊருக்கு எதிராக தானே இறைவாக்குரைக்கின்ற நிலைக்கு ஆளான எரேமியா, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ளாததோடு தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதையும் உணர்ந்து, ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்! நானும் ஏமாந்து போனேன்!'

எருசலேம் நகரையும், நகரின் மக்களையும், ஆலயத்தையும் எரேமியா மிகவே விரும்பினார். ஆனால், தன் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராக சிலைவழிபாடு செய்து, உடன்படிக்கையை மீறியதால் வந்த தீங்கைத் தடுக்க அவரால் இயலவில்லை. மாறாக, அந்தத் தீங்கை அவரே அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றார். நகரின் அழிவைச் சொன்னாலாவது மக்கள் மனம் மாறுவார்கள் என நினைக்கிறார் எரேமியா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவருடைய பணி தோல்வியில் முடிவதோடு, அவர் நிந்தைக்கும், அவமானத்திற்கும், சிறைத்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் ஆளாகின்றார். இந்தத் தோல்வியில்தான் ஆண்டவராகிய கடவுள்முன் முறையிடுகின்றார் எரேமியா.

சிறு பிள்ளையாக இருந்தபோதே, எரேமியாவைத் தன் பணிக்கெனத் தெரிவு செய்கிறார் கடவுள். ஆனால், இளவலாக இருக்கின்ற எரேமியாவுக்கு இறைவாக்குப் பணி இப்போது கடினமாக இருக்கிறது: 'நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.' 'அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்' என்று இறைவாக்குப் பணியைத் துறக்க நினைக்கின்றார். ஆனால், அவருடைய கிணறு வறண்டுபோன அந்தப் பொழுதில் தன் உள்ளத்தில் எழும் போராட்டத்தைக் கண்டுகொள்கின்றார்: 'உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.'

ஆக, வலியும் துன்பமும், ஏமாற்றமும், சோர்வும், விரக்தியும் தன்னைச் சூழ்ந்தாலும், சட்டெனத் திரும்பிப் பார்த்து இறைவனின் உடனிருப்பு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்கிறார். தொடர்ந்து இறைவாக்கினர் பணி ஆற்றுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 12:1-2), உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலின் இறுதிப் பகுதியான அறிவுரைப் பகுதி தொடங்குகிறது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, பவுல் இரண்டு வகை வாழ்க்கை நிலைகளை ஒப்பிட்டு, நம்பிக்கையாளர்கள் மேன்மையானதைத் தெரிவு செய்ய அழைப்பு விடுக்கின்றார். உலகப் போக்கிலான ஒழுக்கம் ஒருவகை, உடலைப் பலியாகப் படைத்தல் இன்னொரு வகை. 'உங்களைக் கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்' என்கிறார் பவுல். 'பலியாதல்' என்பது மிக முக்கியமான வார்த்தை. பலியாகின்ற ஒன்று தனக்கென எதையும் வைத்துக்கொள்ள இயலாது. பலியாக்கப்பட்ட ஒன்றை நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆக, செல்வம், பெருமை, புகழ் என உரோமை அலைந்து திரிந்த அந்தக் காலத்தில், அவற்றுக்கு மாறாக, 'பலியிடுதல்' என்னும் செயலை முன்வைக்கிறார் பவுல். மேலும், தூய்மை அல்லது புனிதத்தில் வளர்வது என்பது, தானாகவே நடக்கிற ஒரு செயல் அல்ல, மாறாக, ஒருவர் தானே தெரிவு செய்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று என்பது பவுலின் கருத்து. இப்படி, ஒருவர் தன்னையே பலியாகத் தருவதன் வழியாகவே, அல்லது துன்பம் ஏற்பதன் வழியாகவே, அல்லது கடவுளிடமிருந்து தப்பி ஓடாமல் இருப்பதன் வழியாகவே, 'உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை' அறிந்துகொள்ள இயலும்.

நற்செய்தி வாசகம் (காண். மத் 16:21-27) கடந்த வார வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. இயேசுவை மெசியா என அறிக்கையிட்ட பேதுரு, அந்த மெசியா நிலையானது துன்பத்தின் வழியாகவே வரும் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதலில், இயேசு தம் பாடுகள்-இறப்பு-உயிர்ப்பை முதன்முறை முன்னுரைக்கிறார். இரண்டாவதாக, பேதுரு இயேசுவையும் இயேசு பேதுருவையும் கடிந்துகொள்கிறார்கள். மூன்றாவதாக, சீடத்துவத்தின் விலை பற்றிய போதனையை இயேசு வழங்குகிறார்.

இந்த நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு சொல்லாடல் நம் சிந்தனையைத் தூண்டுகிறது: 'இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து!'

நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருவோம். பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக்கொண்டு சென்று, 'ஆண்டவரே, இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது' எனக் கடிந்துகொள்கிறார். பேதுரு இயேசுவுக்கு நேரே நின்று உரையாடுகிறார். அல்லது மரியாதையின் பொருட்டு அவரின் பின்னால் நின்றுகொண்டு உரையாடுகிறார். இப்போது இயேசு திரும்பிப் பார்க்கிறார். அப்படி என்றால், இயேசுவின் பின்னால் பேதுரு நின்றுகொண்டிருக்கிறார். திரும்பிப் பார்க்கிற இயேசு, 'என் கண்முன் நில்லாதே!' என்கிறார். அப்படி என்றால், இயேசுவின் முன்னால் பேதுரு நின்றிருந்தாரா? என்னும் குழப்பம் இங்கே வருகிறது. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இயேசுவுக்குப் பின்னால் பேதுரு நின்றதால்தான் இயேசுவின் பார்வையை அவர் பெறவில்லை. ஆனால், அவரைத் திரும்பிப் பார்க்கிற இயேசு அவருடைய பார்வையை மாற்றிப் போடுகிறார். சீடத்துவம் பற்றிய போதனை பேதுருவுக்கு விரைவில் பொருந்தும். ஆக, தமக்கு நேர்வது தம் சீடர்களுக்கும் நேரும் எனச் சொல்லி அவருடைய புரிதலைத் தெளிவுபடுத்துகிறார். 

ஆக, கடவுள்முன் முறையிடுகிற எரேமியா சற்றே திரும்பிப் பார்த்ததால் இறைவனின் உடனிருப்பைக் கண்டுகொள்கிறார்.

உரோமை நகர மக்கள் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு விட்டுச் சற்றே திரும்பிப் பார்ப்பதால், 'எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது' என்பதைக் கண்டுகொள்கிறார்கள். 

பேதுருவைத் திரும்பிப் பார்க்கிற இயேசு, சீடத்துவத்தின் பரிமாணத்தை அவருக்குக் காட்டி, அவருடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறார்.

திரும்பிப் பார்த்தல் நம் வாழ்வில் நிகழ நாம் என்ன செய்ய வேண்டும்?

(அ) பொறுமை காத்தல்

வாழ்வின் எந்த நிலையிலும் நம் உணர்வுகள் நம் சிந்தனையை ஆட்சிசெய்ய நாம் அனுமதித்தல் கூடாது. நிதானமும் பொறுமையும் நமதாக இருந்தால், நம் உணர்வுகளை நம்மால் ஆட்சி செய்ய இயலும். தன் சகஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் கோபம், கையறுநிலை, பதற்றம் ஆகியவற்றால் கடவுளிடம் ஓடுகிறார் எரேமியா. கடவுளின் திருமுன்னிலையில் அவர் அமர்ந்திருக்கும்போது பொறுமையைக் கற்றுக்கொள்கிறார். திரும்பிப் பார்த்தல் அந்த நொடியில் அரங்கேறுகிறது.

(ஆ) புதுப்பிக்கப்பெற்ற உள்ளம்

நம் உடல் செல்கள் அன்றாடம் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்கின்றன. ஆனால், உள்ளம் புதுப்பிக்கப்பெறுவதற்கு நம் முயற்சி அவசியம். பழையதை அகற்றிவிட்டு, புதியதைப் பற்றிக்கொள்ள நம் உள்ளத்தைப் பழக்க வேண்டும். பரந்த மனப்பான்மை, தாராள உள்ளம் ஆகியவை புதுப்பிக்கப்பெற்ற உள்ளத்தின் வெளிப்பாடுகள்.

(இ) ஆண்டவர் நம் பக்கம் திரும்புதல்

ஆண்டவரின் பார்வை நம் பக்கம் திரும்பும்போதும் நம் வாழ்க்கை திரும்புகிறது. பேதுருவை இயேசு கடிந்துகொண்டாலும், அவருடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறார். நம் வாழ்விலும் ஆண்டவர் நம்மைப் பல்வேறு நபர்கள் வழியாகக் கடிந்துகொள்கிறார். கடிந்துரைகள் அனைத்தும் நம்மை நாமே ஆய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்புகள். அடிக்கடி நாமும் நமக்கு வெளியே நின்று நம்மைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அப்போது வாழ்வின் உண்மைகள் நமக்குப் புரியத் தொடங்கும்.

திருப்பாடல் ஆசிரியரோடு நாமும், 'கடவுளே! நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்! உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகிறேன். நான் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன். உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' என்று சொல்வோம். அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டவர்கள் தங்கள் வாழ்வைத் திரும்பிப் பார்த்து மீண்டும் அதை உரிமையாக்கிக்கொள்பவர்கள்!


No comments:

Post a Comment