Monday, September 11, 2023

கை நலமடைந்தது!

இன்றைய இறைமொழி

திங்கள், 11 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் திங்கள்

கொலோ 1:24-2:3. லூக் 6:6-11.

கை நலமடைந்தது!

ஓய்வுநாள் ஒன்றில் தொழுகைக்கூடத்தில் ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. சூம்பிய கை உடைய ஒருவருக்கு நலம் தருகிறார். இந்த நிகழ்வை லூக்கா மற்றும் மாற்கு பதிவு செய்கிறார்கள். இந்த நிகழ்வு இயேசுவின் எதிரிகளாகத் திகழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் கோபத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது. 

இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாள் அனுசரிப்பு என்பது முதன்மையான சமயக் கடமையாகப் போற்றப்பட்டது. இந்த நாளில் எந்தவித வேலையும் தடைசெய்யப்பட்டது. வல்ல செயல் நிகழ்த்தி நலம் தருதல் என்பது வேலையாகக் கருதப்பட்டதால் அதுவும் தடைசெய்யப்பட்டதாக இருந்தது. 

நிகழ்வில் அமர்ந்திருக்கிற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவையும் அவருடைய சொற்களையும் செயல்களையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அல்லது குற்றம் காணும் நோக்குடன் அவ்வாறு செய்கிறார்கள். இவர்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளை மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்கிறவர்கள். இயேசுவோ சட்டத்தின் எழுத்தைப் பொருட்படுத்தாமல், அதன் உயிர் அல்லது ஆன்மாவை நேசிப்பவர். அன்பு, இரக்கம், கனிவு போன்றவை திருச்சட்டத்தைவிட மேலானவை எனக் கருதுபவர்.

'ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?' என்னும் கேள்விகளை எழுப்புகிறார் இயேசு. இக்கேள்விகள் வழியாக தம் எதிரிகளைத் தன்னாய்வு செய்துபார்க்க அழைக்கிறார். ஆனால், அவர்கள் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இலக்கியக்கூற்றின் அடிப்படையில், இக்கேள்விகள் விடை வேண்டிக் கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல. ஏனெனில், இக்கேள்விகளுக்கான விடைகள் கேள்விகளிலேயே அடங்கியுள்ளன: 'ஓய்வுநாளில் நன்மை செய்ய வேண்டும், உயிரைக் காக்க வேண்டும்.' 

சூம்பிய கை உடையவரைப் பார்த்து இயேசு, 'உம் கையை நீட்டும்!' எனச் சொல்ல, அவர் கையை நீட்டுகிறார். கை நலம் பெறுகிறது. ஒரே நேரத்தில் இயேசு நோய்களின்மேல் தமக்கு உள்ள அதிகாரத்தையும், ஓய்வுநாளை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த முடியும் என்னும் போதனையையும் அருள்கிறார் இயேசு. 

இந்நிகழ்வைக் காண்கிற பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் உள்ளங்கள் கடினமாகின்றன. கடின உள்ளம் நம்ப மறுக்கிறது. கடின உள்ளம் மற்றவர்களுக்குத் தீங்கை நாடுகிறது. 

இயேசு ஓய்வுநாளின் தலைவர் என்னும் செய்தி இங்கே கற்பிக்கப்படுகிறது. தொடக்ககாலத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இதன் பின்புலத்தில் பார்க்கும்போது, இயேசு தொழுகைக்கூடத்தையும் விட மேலானவர் என்னும் செய்தியும் இங்கே கற்பிக்கப்படுகிறது.

முதல் வாசகத்தில், தான் நற்செய்தியின் தொண்டன் என்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிடுகிறார் பவுல். நற்செய்திக்குத் தொண்டாற்றுதல் என்பது ஊக்கம் தருவதிலும் அன்பினால் ஒருங்கிணைக்கப்படுவதிலும் அடங்கியுள்ளது என்பது பவுலின் கருத்து.

இன்று நாம் சட்டங்கள் மற்றும் மரபுகளை எப்படிக் காண்கிறோம்? இயேசுவின் கண்கள் கொண்டா? அல்லது பரிசேயர்களின் கண்கள் கொண்டா?

நமக்கு முன்னால் நடக்கும் நன்மைகளைக் காணும்போது நம் உள்ளம் கடினப்படுவது ஏன்? நாம் பொறாமையாலும் கோபத்தாலும் ஆட்கொள்ளப்படுவது ஏன்?

நாம் பெற்றுள்ள நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டர் பணி பற்றி நாம் அறிந்துள்ளோமா? அப்பணியைச் செய்கிறோமா?


No comments:

Post a Comment