Monday, September 18, 2023

எழுந்திடு!

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 19 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் செவ்வாய்

1 திமொ 3:1-13. லூக் 7:11-17.

எழுந்திடு!

1. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை உயிர்பெற்றெழச் செய்கிறார். நயீன் கைம்பெண்ணின் மகன் உயிர்பெறுதல் என்று நாம் வாசிக்கும்போதே நம் உள்ளம் சாரிபாத்துக் கைம்பெண் மகன் இறைவாக்கினர் எலியாவால் உயிர்பெற்றதையும், சூனேம் நகரச் செல்வந்தப் பெண்ணின் மகன் இறைவாக்கினர் எலிசாவால் உயிர்பெற்றதையும் எண்ணிப்பார்க்கிறது. இலக்கிய அடிப்படையில் பார்க்கும்போது, நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவை முதல் ஏற்பாட்டுப் பெரிய இறைவாக்கினர்களின் வரிசையில் பதிவு செய்ய விரும்புகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆகையால்தான், நிகழ்வின் இறுதியில், கூடியிருந்த மக்கள் கூட்டம் அச்சமுற்றவர்களாக, 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்துள்ளார்' என முழக்கமிடுகிறார்கள். எலியா, எலிசா என்னும் பெரிய இறைவாக்கினர்களின் வரிசையில் இயேசுவும் ஓர் இறைவாக்கினராக அறிமுகம் செய்யப்படுகிறார். 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் ஆன்மிகப் பொருள் என்ன?

(அ) நயீன் நகரத்துக் கைம்பெண் அழுதுகொண்டிருக்கிறார். நம் வாழ்வில் ஈடுசெய்ய முடியாத இழப்பு அல்லது வருத்தம் நேரும்போது நம் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. இந்த இளவல் தன் கணவரையும் தன் ஒரே மகனையும் இழந்தவராக இருக்கிறார். தன் கையறுநிலையில் அவர் கண்ணீர் வடிக்கும்போது இயேசு அவர்மீது பரிவு கொண்டு அவரை நோக்கி, 'அழாதீர்!' என்கிறார். இயேசு நிகழ்த்தவிருந்த வல்ல செயலை இது முன்குறிக்கிறது. நம் வாழ்வின் கையறுநிலையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டே வழிநடக்கும்போது, வழியில் நம்மைத் திடீரென எதிர்கொள்கிற கடவுள் நம்மேல் பரிவுகொள்கிறார்.

(ஆ) அடுத்து இயேசுவின் பார்வை இறந்தவரைத் தூக்கிச் செல்கிற பாடையின்மேல் படுகிறது. பாடையைத் தொடுகிறார். தூக்கிச் சென்றவர்கள் நிற்கிறார்கள். இறந்தோர் எடுத்துச்செல்லப்படுகிற பாடை நிறுத்தப்படுவதை எந்தக் கலாச்சாரமும் ஏற்பதில்லை. அதை ஒரு பெரிய எதிர்அடையாளமாகவே பார்ப்பார்கள். நின்றவர்கள் உள்ளத்தில் குழப்பமும் எரிச்சலும் ஒருசேர எழுந்திருக்கும். இவர்களைப் பொருத்தவரையில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட வேண்டியவர். அவ்வளவுதான்! ஆனால், இயேசுவைப் பொருத்தவரையில் இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட முடியும். நாமும் சில நேரங்களில், 'நான் இவ்வளவுதான்! என் வாழ்க்கை இவ்வளவுதான்!' என நம் இறந்தகாலத்தைத் தூக்கிச் சுமக்கிறோம். ஆனால், நமக்கு ஒரு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு.

(இ) 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திடு!' என்று இறந்த இளைஞனைப் பார்த்துச் சொல்கிறார் இயேசு. இறந்த இளைஞனுடைய காதுகளில் இச்சொற்கள் விழுகின்றன. 'ஒளி உண்டாகுக!' என்று சொல்லும்போதே ஒளி உண்டானதுபோல, 'எழுந்திடு!' என்று இயேசு சொல்லும்போதே எழுகிறான் இளைஞன். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்குகிறார். அதாவது, அவருடைய முழு உடலும் உடனடியாக இயக்கம் பெறுகிறது. பாடையில் எடுத்துக்கொண்டு வரப்பட்டவர் தானே எழுந்து செல்கிறார் தன் தாயோடு. கடவுள் நம் அருகில் நின்று, 'எழுந்திடு!' என்கிறார். நாமாகவே அக்கட்டளைக்குப் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.

2. இன்றைய முதல் வாசகத்தில், சபைக் கண்காணிப்பாளர் ('எபிஸ்கோபோஸ்', ஆயர்) மற்றும் திருத்தொண்டர் ('டியாகோனோஸ்') கொண்டிருக்க வேண்டிய பண்புநலன்களைப் பற்றி திமொத்தேயுவுக்கு எடுத்துரைக்கிறார் பவுல். இவர்களுடைய பணி நம்பிக்கையை அறிக்கையிடுவதும், அதற்குச் சான்றுபகர்வதுமே ஆகும்.

3. ஆண்டவராகிய கடவுள் நமக்கும் தன் பரிவுள்ளத்தைக் காட்டுகிறார். அவருடைய திருமுன்னிலையில் கண்ணீர், அச்சம், குழப்பம், எரிச்சல், இறப்பு, இழப்பு அனைத்தும் மறைந்துவிடுகின்றன. திடீரென நம்மை எதிர்கொள்கிற அவர் நம் வாழ்க்கைப் பயணத்தின் திசையையும் போக்கையும் மாற்றிப் போடுகிறார். நாம் அழைக்கப்பட்ட நிலையில் நம்பிக்கையை அறிக்கையிடவும் அதற்குச் சான்று பகரவும் நம்மைத் தூண்டுகிறார்.


1 comment:

  1. Anonymous9/18/2023

    ஆமென் அல்லேலூயா!

    ReplyDelete