Saturday, July 1, 2023

பிளவுபடாத அன்பு – மறுக்காத சிலுவை – மறுக்கப்படாத கைம்மாறு

2 ஜூலை 2023 ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

2 அர 4:8-11, 14-16. உரோ 6:3-4, 8-11. மத் 10:37-42

பிளவுபடாத அன்பு – மறுக்காத சிலுவை – மறுக்கப்படாத கைம்மாறு

முதல் வாசகப் பகுதி எலிசாவும் சூனேம் பெண்ணும் என்னும் பிரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு எலிசா உதவி செய்கின்றார். அதைத் தொடர்ந்து வரும் பகுதியில் சூனேம் நகரில் உள்ள செல்வந்தப் பெண் எலிசாவுக்கு உதவி செய்கிறார். எலிசா ஓரிடத்தில் செய்த உதவிக்கு அவருக்கு இன்னோர் இடத்தில் கைம்மாறு கிடைக்கிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் செய்த உதவிக்கான கைம்மாறு இன்னொருவருக்கு என பிரபஞ்சம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொண்டே நகர்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூனேம் பெண் எலிசாவுக்கு விருந்தோம்பல் செய்கிறார். உணவு தருவதுடன் அவர் தங்குவதற்குத் தன் வீட்டில் மேலறை ஒன்றைக் கட்டிக் கொடுக்கிறார். எலிசா அதற்குக் கைம்மாறாக குழந்தையில்லாத அப்பெண்ணிடம், 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி கொடுக்கிறார்.

முதல் ஆதாமுக்கும் இரண்டாம் ஆதாமுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிப் பதிவு செய்த பவுல், தொடர்ந்து பாவத்தை விட்டு கிறிஸ்துவோடு வாழ்தல் பற்றி உரோமை நகர மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பாவத்தை விடுகிற எவரும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர் ஆகிறார். பாவத்திற்கு இறந்த ஒருவர் கிறிஸ்துவில் வாழத் தொடங்குகிறார். இது தானாக நடக்கிற நிகழ்வு அல்ல. மாறாக, ஒருவர் தம் செயல்கள் வழியாகத் தொடர்ந்து அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும். 

திருத்தூதுப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவைப் பின்பற்றுதல் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்துகிற பிளவையும், பிளவையும் பொருட்படுத்தாமல் சீடத்துவத்தில் நிலைத்திருக்க வேண்டிய அவசியத்தையும், சீடர் பெறுகிற கைம்மாற்றையும் எடுத்துரைக்கிறது. சீடத்துவத்திற்கு அடிப்படையாக இருத்தல் சிலுவை ஏற்றல் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது.

இந்நாளின் இறைவார்த்தைப் பகுதிகளை, 'பிளவுபடாத அன்பு,' 'மறுக்காத சிலுவை,' 'மறுக்கப்படாத கைம்மாறு' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்துகொள்வோம்.

(அ) இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்.

(ஆ) சிலுவையை விரும்பி ஏற்றல்.

(இ) கடவுள் தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்.

அ. இயேசுவின்மேல் பிளவுபடாத அன்பு கொண்டிருத்தல்

மனிதர்களாகிய நாம் அனைவரும் சமூக விலங்குகள். அதாவது, ஒருவர் மற்றவரோடு உறவு ஒன்றிப்பை ஏற்படுத்திக்கொள்கிற விலங்குகள். உறவு ஒன்றிப்பு அடிப்படையாக இருப்பது அன்பு. நாம் மற்றவர்களுக்குக் காட்டும் அன்பு ஆள்கள், இடம், நெருக்கம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள்மேல் காட்டும், பிள்ளைகள் பெற்றோர்கள்மேல் காட்டும் அன்பு, கணவன்-மனைவி அன்பு, சகோதர அன்பு உறவு என அன்பில் பல படிநிலைகள் உள்ளன. நாம் ஒரே நேரத்தில் பலரிடம் அன்பு உறவில் இருக்கிறோம். பெற்றோரிடம், பிள்ளைகளிடம், இணையரிடம், உடன்பிறந்தவர்களிடம், நண்பர்களிடம், உடன்பணிபுரிபவர்களிடம் என நிறைய நபர்களோடு நம் அன்பில் நிலைத்திருக்கிறோம். இயேசுவை அன்பு செய்ய ஒருவர் தொடங்கும்போது மற்ற அன்புறவுகளும் பிணைப்புகளும் சில நேரங்களில் இடையூறாக அமையலாம். ஆக, ஒருவர் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இறைவனை மட்டும் பிடித்துக்கொண்டு மற்றவர்களை மற்றவற்றை விட்டுவிடுதலே அத்தெரிவு. இத்தகைய தெரிவை மேற்கொள்வதற்குத் துணிவும் மனத்திடமும் விடாமுயற்சியும் அவசியம். கடவுளை அன்பு செய்ய வேண்டுமெனில் மற்றவர்களை அன்பு செய்யக் கூடாதா? மற்ற அன்பு உறவுகளும் கடவுள் நமக்குக் கொடுத்ததுதானே? என்னும் கேள்விகள் எழலாம். இதற்குப் புனித அகுஸ்தினார் இவ்வாறு பதில் கூறுகிறார்: 'நாம் அன்பு செய்கிற அனைவரையும் கடவுளில் அன்பு செய்யும்போது, அன்பு தூய்மையாக்கப்படுவதுடன் நீடித்த தன்மையையும் பெறுகிறது.'

உறவுகளில் உள்ள முதன்மைகளைச் சரி செய்வது சீடத்துவத்தின் அடிப்படையான கூறு. சொத்து மற்றும் பணம் எப்படி சீடத்துவத்துக்கு இடையூறாக இருக்குமோ, அவ்வாறே உறவுகளும் இடையூறாக அமையலாம். அன்பில் முதன்மைகள் தெளிவானால் அது பிளவுபடாத அன்பாக இறைவன்மேல் கனியும்.

ஆ. சிலுவையை விரும்பி ஏற்றல்

'தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்' என்கிறார் இயேசு. அன்பின் முதன்மைகளைச் சரி செய்வதும், பிறழ்வுபட்ட அன்புநிலைகளுக்கு மறுப்புச் சொல்வதும் சீடருக்குச் சிலுவையாக மாறிவிடும். முதல் வாசகத்தில், எலிசா என்னும் இறைவாக்கினர் தன் ஊருக்கு வந்து செல்வதைக் காண்கிற சூனேம் பெண், அதைப் பற்றித் தன் கணவரிடம் எடுத்துச் சொல்கிறார். அந்தப் பெண்ணைப் பொருத்தவரையில் அது ஒரு சிலுவை. மற்றவர்கள்போல எனக்கென்ன? என அவர் ஓய்ந்திருப்பதற்குப் பதிலாக, எலிசாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். வெறும் விருப்பமாக அதை நிறுத்திக்கொள்ளாமல் அச்செயலைச் செய்தும் முடிக்கிறார். இரண்டாம் வாசகத்தின் பின்புலத்தில், பாவத்திலிருந்து விடுபட நினைக்கும் எவருக்கும் பாவத்தை விட்டுவிடுவது சிலுவை போலப் பாரமாகவே இருக்கும். இருந்தாலும் அவர் அதை விரும்பி ஏற்கிறார். நமக்குச் சுமையாக இருக்கிற ஒன்று, நாம் மேற்கொள்கிற தெரிவு, எடுக்கிற செயல் என நிறையச் சிலுவைகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன.

சிலுவையை விரும்பி ஏற்றல் என்பதும் ஒரு தெரிவே. முணுமுணுக்காமலும் தாராள உள்ளத்தோடும் செயல்படும் ஒருவரே சிலுவையை ஏற்றுக்கொள்ள முடியும்.

இ. கடவுள்தரும் கைம்மாறு பெற்றுக்கொள்தல்

'இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்' என மொழிகிறார் இயேசு. இறைவாக்கினர் எலிசாவை ஏற்றுக்கொண்டு விருந்தோம்பல் செய்ததால் அதற்குரிய கைம்மாறு பெறுகிறார் சூனேம் பெண். 'உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என வாக்குறுதி தருகிறார் எலிசா. அப்பெண் எந்தவொரு கைம்மாற்றையும் எதிர்பார்க்காமலேயே விருந்தோம்பல் செய்கிறார். சீடர்கள் கடவுளைத் தெரிவுசெய்யும்போது கடவுள் அவர்களுடைய தேவைகளைக் கரமேற்கிறார் என்பது இங்கே தெளிவாகிறது. அதே வேளையில், சீடர்கள் மற்றவர்களிடம் உள்ள அனைத்தும் தங்களுக்கானது என்றும் எண்ணுதல் கூடாது. 

எதிர்பார்ப்பு இல்லாத விருந்தோம்பல் கைம்மாறு தரும்போது நம் இறைவன் வியப்புகளின் இறைவனாக நமக்குத் துணைநிற்கிறார்.

நிற்க.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 89), 'ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்' என மொழிகிறார் ஆசிரியர். ஆண்டவரின் பேரன்பை அனுபவிக்கும் ஒருவர் தாம் பற்றிக்கொண்டிருக்கும் சிறிய அன்புநிலைகளை விட்டுவிடும் துணிச்சல் பெறுகிறார். நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகிறது (காண். 1 கொரி 13:10). சிறிய அன்புநிலைகளை விட்டுவிடுதல் சிலுவைபோலப் பாரமாகத் தெரிகின்றன. சிலுவையை ஏற்றுக்கொள்ளும்போது, அதற்குரிய கைம்மாறு கடவுளிடமிருந்து வருகிறது.


No comments:

Post a Comment