Wednesday, July 19, 2023

நுகத்தடித் துணை

இன்றைய இறைமொழி

வியாழன், 20 ஜூலை 2023

பொதுக்காலம் 15-ஆம் வாரம்

விப 3:13-20. மத் 11:28-30.

நுகத்தடித் துணை

1. எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் துயரத்தால் எழுந்த குரலுக்குப் பதில்தரும் விதமாக இறங்கி வந்த கடவுள் தாம் யார் என்பதையும், தாம் கொடுக்கிற பணி எப்படிப்பட்டது என்பதையும் மோசேக்குத் தெளிவுபடுத்துகிறார். கடவுளின் பெயர் இரு வடிவங்களில் தரப்பட்டுள்ளது: ஒன்று, 'ஆண்டவர்' ('இருக்கிறவராக இருக்கிறவர்'). இரண்டு, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்.' முந்தைய பெயர் கடவுளின் நீடித்த இருத்தலைக் குறிப்பதாகவும், பிந்தைய பெயர் குலமுதுவர்களுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியைக் குறிப்பதாகவும் உள்ளது. இஸ்ரயேல் மக்கள் சுமக்கிற துன்பம் என்னும் அடிமைத்தன நுகத்தைச் சேர்ந்து சுமக்க இறங்கி வருகிறார் கடவுள். தம் பணியில் மோசேயை நுகத்தடித் துணையாக இணைத்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவது மோசே மற்றும் ஆரோனின் தலைமைத்துவத்தால் அல்ல, மாறாக, ஆண்டவரின் உடனிருப்பால்தான் என்பதை பின்னர் வாசகர் அறிவார். ஏனெனில், பாரவோனின் உள்ளத்தை இறுகச் செய்பவராகவும், உருகச் செய்பவராகவும் அவரே இருக்கிறார்.

2. சமயத்தில் நிகழ்ந்த சடங்குமுறைகள், பொருளாதார அடக்குமுறைகள், அரசியல் தளத்தில் உரோமைக்கு அடிமைப்பட்ட நிலை, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் எனச் சுமைகள் பல சுமந்து சோர்ந்து போன தம் சமகாலத்தவரை நோக்கி உரையாடுகிற இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்!' என அழைக்கிறார். சுமை இல்லாத வாழ்க்கையை அவர் உறுதியளிக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய சுமைகளை இயேசுவின் நுகத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார். இயேசுவை நுகத்தடித் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. ஆண்டவராகிய கடவுள் தம் பணியைச் செய்வதற்கு மனிதத் துணையை நாடுகிறார். இவ்வாறாக, மனிதர்கள் தங்கள் சக மனிதர்கள்மேல், குறிப்பாக வலுவற்றவர்கள்மேல், ஒடுக்கப்படுபவர்கள்மேல் காட்ட வேண்டிய பரிவையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். கடவுளின் நுகத்தடித் துணையாக இருக்க விரும்புபவர்கள் அவருடைய அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்தல் அவசியம். நம் வாழ்வின் சுமைகளை நாம் எளிதாகச் சுமக்க வேண்டுமெனில் கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்தல் நலம். கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்ளும் நாம் ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்தல் அவசியம்.


No comments:

Post a Comment