Sunday, July 23, 2023

தண்ணீர் அடையாளம்!

இன்றைய இறைமொழி

திங்கள், 23 ஜூலை 2023

பொதுக்காலம் 16-ஆம் வாரம்

விப 14:5-18. மத் 12:38-42.

தண்ணீர் அடையாளம்!

1. எகிப்தியர்களின் தலைப்பேறு அழிக்கப்பட்டவுடன், பார்வோன் இஸ்ரயேல் மக்களைத் தங்கள் நாட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். மக்கள் வெளியேறிய சில மணிநேரங்களில் அவருடைய மனம் மீண்டும் கடினமாகிறது. தங்களுடைய உழைப்பு வங்கி வெளியேறிவிட்டால் தங்கள் நாடு எப்படி முன்னேறும் என்ற எண்ணத்தில் தேர்களைப் பூட்டி அவர்களை விரட்டிச் செல்கிறார். பார்வோனுக்கும் செங்கடலுக்கும் இடையே நின்ற இஸ்ரயேல் மக்கள், இரண்டு பக்கமும் தங்களுக்கு ஆபத்து எனக் கண்டு மோசேக்கு எதிராகவும் (கடவுளுக்கு எதிராகவும்) முறையிடுகிறார்கள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! ... ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்!' என்கிறார் ஆண்டவர். இவ்வளவு நாள்கள் செங்கற்கள் செய்துகொண்டிருந்தவர்களுக்குப் போரிடுதல் என்பது பழக்கப்பட்டது அல்ல. ஆக, அவர்கள் சும்மாயிருக்குமாறு சொல்கிற ஆண்டவர், தாமே அவர்களுக்காகப் போரிடுகிறார். பத்து அடையாளங்களை எகிப்தில் கண்ட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நம்பாமல் தங்கள் உள்ளங்களைக் கடினப்படுத்திக்கொள்கிறார்கள். செங்கடலின் தண்ணீர் ஓர் அடையாளமாக அவர்களுக்குத் திகழ்கிறது. ஏனெனில், இத்தண்ணீர் எகிப்தியர்களின் கல்லறையாக மாறியது. தண்ணீர் பிரிந்த உலர்ந்த தரையில் கால் நனையாமல் இஸ்ரயேல் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

2. இயேசுவிடம் வருகிற பரிசேயர்கள் ஓர் அடையாளம் காட்டுமாறு வேண்டுகிறார்கள். இயேசுவின் போதனைகளும் அவருடைய வல்ல செயல்களும் அவர்களுக்குப் போதுமானவையாக இல்லை. அடையாளங்கள் நிகழ்த்தினாலும் அவர்கள் இயேசுவை நம்பப்போவதில்லை. யோனா அடையாளத்தை முன்மொழிகிறார் இயேசு. யோனா தண்ணீருக்குள் மீனின் வயிற்றில் மூன்று நாள்கள் இருக்கிறார். மானிட மகனும் நிலத்தின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். மேலும், நினிவே மக்கள் மற்றும் சேபா நாட்டு அரசி என்னும் புறவினத்தார் யோனாவின் மனமாற்ற அறிவிக்கையையும், சாலமோனின் ஞானத்தையும் ஏற்றுக்கொண்டவர் எனக் குறிப்பிட்டு, தம் இனத்தார் தம்மை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

3. ஆண்டவராகிய கடவுளின் அரும்பெரும் செயல்களை நாம் அறிந்திருந்தாலும் அவற்றை அனுபவித்திருந்தாலும் ஆபத்துக்காலத்தில் நாம் அவற்றை மறந்துவிடுகிறோம். நம் கண்முன் நிற்கிற பிரச்சினை நமக்குப் பெரிதாகத் தெரியத் தொடங்கி, கடவுள் மறையத் தொடங்குகிறார். சில நேரங்களில் பொறுமை இழந்து நாமே எதையாவது செய்து சமாளித்துக்கொள்ள நினைக்கிறோம். அது இன்னும் பெரிய பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. இம்மாதிரியான நேரங்களில் சும்மாயிருத்தலே நலம். இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த யோனா மீனின் வயிற்றில் சும்மாயிருக்கிறார், அமைதியாக இருக்கிறார். அதுவே அவருடைய மனமாற்றத்தின் காலமாகவும் இருக்கிறது. நிலைகுலையாமல் சும்மாயிருக்க நிறைய நம்பிக்கையும் துணிவும் தேவை. தண்ணீரின் அமைதியான நிலை நமக்கும் அடையாளமாக இருக்கட்டும்!


No comments:

Post a Comment