Monday, January 30, 2023

மனித அவசரம் இறைத் தாமதம்

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 31 ஜனவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 12:1-4. மாற் 5:21-43.

மனித அவசரம் இறைத் தாமதம்

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், விந்தையாக, இந்த நிகழ்வில் இயேசுவோடு உடனிருந்த யோவான் (காண். மாற் 5:37) இந்நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. இந்நிகழ்வில் இரண்டு கதைமாந்தர்கள் இருக்கின்றார்கள்: (அ) யாயிர் - இவர் தொடக்கமுதல் இறுதி வரை இருப்பவர், (ஆ) இரத்தப்போக்குடைய பெண் - இவர் பாதியில் வந்து, பாதியில் சென்றுவிடுகிறார். இவரை, நற்செய்தியாளர், நிகழ்வின் வேகத்தைக் குறைக்கும், வாசகரின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஓர் இலக்கியக் கூறாகப் பயன்படுத்துகிறார். 

நம் பாடப்பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) யாயிர் தன் மகளைக் காப்பாற்ற இயேசுவை அழைத்தல் (5:21-23), (ஆ) இயேசுவின் பயணம் - பயணத்தின்போது நடைபெறும் முதல் புதுமை (5:24-34), (இ) நலம் பெற வேண்டிய மகள், உயிர் பெறுதல் (5:35-43).

இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. மேலும், நற்செய்தியாளர்(கள்) இங்கே பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (காண். மாற் 5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (காண். மாற் 5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

இயேசு தனிநபராகத்தான் புறப்படுகிறார். ஆனால், அவர் புறப்பட்டவுடன் பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டு பின்தொடர ஆரம்பிக்கின்றனர் (காண். மாற் 5:24). யாயிரும் இயேசுவோடு அவருக்கு நெருக்கமாகவே உடன் சென்றிருப்பார். ஏனெனில் யாயிரின் பணியாளர்கள் சிறுமியின் இறப்பு செய்தியைக் கொண்டுவந்தபோது இயேசுவின் காதுகளில் அது எளிதாக விழுகின்றது (காண். மாற் 5:16). 

இயேசுவின் பயணம், (அ) மனித அவசரம், (ஆ) இறை தாமதம் என்ற இரண்டு நிலைகளில் நடக்கிறது.

முதலில் இறைத் தாமதத்தை புரிந்து கொள்வோம். இயேசு புறப்பட்டவுடன், அவரை நெருக்கும் கூட்டம் தாமதத்தின் முதல் காரணியாக இருக்கிறது. இயேசு பயணம் செய்த பாதை மிகக் குறுகியதாகவோ, அல்லது கூட்டம் மிகுதியானதாகவோ இருந்திருக்கலாம். எனவே, இயேசு மிக மெதுவாக பயணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார். அவரின் வேகம் தடைபடுகிறது. தாமதத்தின் இரண்டாவது காரணியாக, இரத்தப்போக்குடைய பெண்ணின் வருகையும், அவர் இயேசுவைத் தொடுதலும், அந்தத் தொடுதல் தரும் நலமும், அந்த நலம் பெற்றதைக் குறித்த இயேசுவின் மறுமொழியும் அமைகிறது. 'நான் அவருடைய மேலுடையைத் தொட்டாலே மீட்பு பெறுவேன்' என்று சொல்லிக்கொண்டு வந்த அந்தப் பெண் இயேசுவின் மேலாடையைத் தொட்டவுடன் நலம் பெறுகிறார். தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை இயேசு உணர்கின்றார். ஆக, எவ்வளவு பெரிய கூட்டத்தின் அல்லது இரைச்சலின் நடுவிலும் தன் இருப்பு மற்றும் இயக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக இருக்கிறார் இயேசு. 'யார் தொட்டது?' என இயேசு கேட்க, சீடர்களோ, 'இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கிறது தெரியவில்லையா?' என்று வேறு தளத்தில் இயேசுவிடம் எதிர்கேள்வி கேட்கின்றனர். ஆக, இயேசுவின் உடலை நெருக்கியவர்கள் நலம் பெறவில்லை. ஆனால், ஆடையைத் தொட்டவர் நலம் பெறுகிறார். இதற்கிடையில் அந்தப் பெண் இயேசுவின் காலடிகளில் வந்து விழ, இயேசுவும், 'மகளே, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று. அமைதியுடன் போ! நோய் நீங்கி நலமாயிரு!'  (காண். மாற் 5:34) என்று அந்தப் பெண்ணை அனுப்பிவிடுகிறார். யாயிர் தன் மன்றாட்டில் பயன்படுத்திய 'நலம்' என்ற அதே சொல்லை இயேசுவும் பயன்படுத்துகிறார். இந்த 'இடைச்செருகல் பெண்ணால்' தங்கள் பயணம் தாமதம் ஆகிறது என்று யாயிர் வருந்தினாலும், 'நம்பிக்கை கொண்டால் நம் குழந்தைக்கும் நலம் கிடைக்கும்' என்ற உறுதி அவருக்கு இப்போது கிடைத்திருக்கும். இப்போது, தாமதத்தின் மூன்றாவது காரணி வருகிறது. தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து வந்தவர்கள், 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?' (காண். மாற் 5:35) என்று யாயிரிடம் சொல்கின்றனர். ஆக, அவர்களின் செய்தி குழந்தையின் இறப்பு செய்தியை தெரிவித்த தகவலாக இருப்பதோடு, இனி இந்தப் போதகரால் ஒரு பயனும் இல்லை என்று யாயிரின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் இருக்கிறது. ஆனால், இயேசு யாயிருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். தொடர்ந்து யாயிரின் வீட்டிற்குள் இயேசு செல்வதற்கு அவரின் வீட்டின் முன்னிருந்த கூட்டமும், கூட்டம் எழுப்பிய அமளியும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. 'ஐயோ, ஆண்டவரே, அவங்க எப்படியும் அழுதுட்டு போறாங்க, நீங்க உடனே வாங்க!' என்பதுதான் யாயிரின் உள்ளத்து அவசரமாக இருந்திருக்கும். இயேசு உள்ளே செல்கிறார். இவ்வாறாக, இயேசுவின் பயணம், (அ) சாலையோரக் கூட்டம், (ஆ) இரத்தப்போக்குடைய பெண், (இ) வீட்டாரின் செய்தி, மற்றும் (ஈ) வீட்டிற்கு வெளியே கூட்டம் என நான்கு காரணிகளால் தாமதம் ஆகின்றது.

யாயிரின் அவசரம், 'அச்சம்' என்ற ஒற்றைச் சொல்லால் பதிவுசெய்யப்படுகிறது (காண். மாற் 5:36). வீட்டார் சிறுமியின் இறப்புச் செய்தியை அறிவித்தபோது, 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' (காண். மாற் 5:36) என்று யாயிருக்கு அறிவுரை கூறுகின்றார் இயேசு. தன் மகளின் இறப்பு செய்தி கேட்ட யாயிர், ஒட்டுமொத்த கூட்டம், அந்தப் பெயரில்லாப் பெண், இயேசுவின் சீடர்கள் என அனைவரையும் ஒரு நொடி தன் உள்ளத்தில் சபித்திருப்பார். 'இவர்களால்தான் போதகர் சரியான நேரத்திற்கு என் வீட்டிற்கு வரமுடியவில்லை' என மனதிற்குள் புலம்பியிருப்பார். அல்லது, 'ஒரு வார்த்தை சொல்லும், என் மகள் நலமடைவாள்' என்றாவது தான் இயேசுவிடம் மன்றாடியிருக்கலாமே என அங்கலாய்த்திருப்பார். இயேசு சற்றுநேரத்திற்கு முன் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவருக்கு நலம் தந்தது இன்னும் தன் கண்முன் இருந்தாலும், இறந்த மகள் உயிர்பிழைப்பாளா? என்ற அச்சம் மேலிடவே செய்கிறது அவருக்கு. அவசரம் கொள்கின்ற மனம் நம்பிக்கை இழக்கும். அவசரம் கொள்கின்ற மனம் அச்சம் கொள்ளும். அல்லது அச்சம் கொள்கின்ற மனம் அவசரப்படும். யாயிரின் மனித அவசரத்தை முதலில் குணமாக்குகிறது இயேசுவின் இறை தாமதம்.

தன் மகளின் உடல்நலத்திற்காக இயேசுவிடம் வந்தார் யாயிர். இப்போதோ, தன் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி தனக்கு வந்துவிட்டது. பாதிக்குறையோடு வந்தவர் இப்போது முழுவதும் இழந்து நிற்கின்றார். தன் மகளை இழந்த அநாதையாக இருக்கின்ற யாயிர், 'நான் என் மகள் இறக்கும் நேரம் அவள் அருகிலாவது இருந்திருப்பேனே!' என்று கொஞ்சம் ஏங்கித்தான் போயிருப்பார். ஆக, ஒரு குறையோடு வந்தவருக்கு, இப்போது இரு குறைகள். நோய் சரியாகவில்லை என்றால் மருந்து எடுத்துக்கொள்ளலாம். மருந்து பலன் தரவில்லை என்றால் மருத்துவரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உயிர் இல்லை என்றால் எங்கு செல்வது? மருந்துகளால் உயிரைக் கூட்ட முடியுமா? அல்லது 'என் உயிரில் கொஞ்சம் வைத்துக்கொள்' என்று உயிரை இரவல் கொடுக்க முடியுமா? - இப்படியெல்லாம் எண்ணியிருக்கும் யாயிரின் மனம். 'ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்' (காண். மாற் 5:39) என்று இயேசு சொன்னபோது, 'ஐயோ! இது அப்படியே உண்மையாயிருக்கக் கூடாதா? என் மகள் உறங்கத்தான் செய்கிறாள். அவள் இறக்கவில்லை. செய்தி சொன்னவர்கள்தாம் தவறாகச் சொல்லிவிட்டார்கள்!' என்று தன் மனதிற்கு ஆறுதல் சொல்கிறார் யாயிர். ஆனால், சிறுமியின் கையை இயேசு பிடிக்க, அவரோடு சேர்ந்து யாயிரும் பிடிக்க, தன் மகளின் கை குளிர்ந்து போயிருப்பதை உணர்ந்து மனம் பதைபதைக்கின்றார். 'ஆம், அவர்கள் சொன்னது உண்மைதான். குழந்தை இறந்துவிட்டாள்' என்று யாயிரின் மனம் முன்னும் பின்னும் பாய்கின்றது. பாதிக் கலக்கம், பாதிக் கண்ணீர், ஆனால் முழு நம்பிக்கை என்று இருந்தவர், 'தலித்தா கூம்' என்ற கட்டளைச் சொல் கேட்டு விழிக்கின்றார். தந்தையோடு சேர்ந்து மகளும் விழிக்கிறாள் - தந்தை கலக்கத்திலிருந்து, மகள் இறப்பிலிருந்து. யாயிரும் அவரோடு இருந்தவர்களும் 'மலைத்துப்போய் மெய்மறந்து நிற்கின்றார்கள்' (காண். மாற் 5:42). தன் மகளின் உடல்நலம் மற்றும் உயிருக்கான யாயிரின் தேடல் நிறைவு பெறுகிறது. தன் மகளை உயிரோடும், உடல்நலத்தோடும் பெற்றுக்கொள்கிறார்.

யாயிரின் மகளின் நோய் மற்றும் இறப்பை நம்முடைய வாழ்வின் எல்லாக் குறைகளின், அல்லது ஒட்டுமொத்த எல்லா மனுக்குலத்தின் குறைகளின் உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். நம் மனித அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சிகள் முதுமை, நோய், இறப்பு என்னும் மூன்றின்முன் மண்டியிட்டுவிடுகின்றன. முதுமையின் வெளிப்பாடையும், அறிகுறிகளையும் தள்ளிப்போடும் முயற்சிகளால் முதுமையை ஓரளவு வென்றுவிட்டோம். ஆனால், நோய் மற்றும் இறப்பு நம்மால் வெல்லமுடியாதவைகளாகவே இருக்கின்றன. நம் தனிப்பட்ட நோய் மற்றும் இறப்பு என்னும் வலுவின்மை ஒவ்வொரு தனிமனிதரிடம் இருந்தாலும், ஒட்டுமொத்த மானுடமும் இன்று தன்னலம், தன்மையம், நுகர்வு, பயன்பாட்டு மோகம் என நோய்வாய்ப்பட்டு சாகுந்தறுவாயில் இருக்கிறது. 

அ. சுகமண்டலத்திலிருந்து வெளியேறுதல். யாயிர் தன் பணி, தன் அதிகாரம், தன் சமூக மதிப்பு நிலை என்னும் சுகமண்டலத்திலிருந்து வெளியேறுகிறார். தன் அதிகாரத்திற்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது என புரிந்கொள்கிறார். நம் தேடலுக்கான முதல் படி இதுவே.

ஆ. குரலற்றவரின் குரலாக. நோய்வாய்ப்பட்டு சாகுந்தறுவாயில் இருந்த தன் மகளின் வாயின் நீட்சியாக இருக்கிறார் யாயிர். தன் தேடல் தனக்காக இல்லாமல் தன் மகள் என்ற வலுவின்மைக்காக இருக்குமாறு செய்கிறார். இன்று நம் இறைத்தேடல் நம் மையத் தேடலா அல்லது பிறர்மையத் தேடலா எனக் கேட்பது நலம்.

இ. மனித அவசரத்தின் சரணாகதி. தன் விண்ணப்பதைக் கேட்டவுன் இயேசு புறப்பட்டுவிட்டார் என்பது யாயிரின் அவசரத்திற்கு உதவியாக இருந்தாலும், தொடர்ந்து நடக்கின்ற நிகழ்வுகள் அவருடைய அவரசத்தை அச்சமாக்குகின்றன. சில நேரங்களில் மனித அவசரம் இறைதாமதத்திற்கு முன் சரணாகதி ஆக வேண்டும் என்பது யாயிர்தரும் பாடம்.

ஈ. நம்பிக்கையை விடாதீர்! தன் கண்முன் நடந்த புதுமை கண்டு தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திய யாயிர் தன் காதுகளுக்கு எட்டிய செய்தி கேட்டு நம்பிக்கை இழக்கின்றார். ஆக, நம்பிக்கை என்பது நாம் நம் மனிதில் வடிக்கும் ஒரு ஒழுக்கம். ஒழுக்கம் என்பது நாம் எடுத்த முடிவிலிருந்து மாறாத நிலை. 

உ. நலம் கேட்டவர் உயிர் பெறுகிறார். இதுதான் கடவுளின் கருணையின் உச்சம். என் கையில் கொஞ்சம் கிடைக்குமா என எண்ணிவரின் கைகள் நிரம்பி வழிகின்றன. கடவுள் அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கைகளை விரித்துக் காத்திருத்தலே.

ஊ. உணவு கொடு!. உயிர் பெற்றெழுந்த குழந்தைக்கு உணவு கொடுக்கச் சொல்கின்றார் இயேசு. இறந்த குழந்தை இனி இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது யாயிரின் பொறுப்பு. மானுடமும் இயேசுவின் மீட்பால் நலமும், உயிரும் பெற்றது. ஆனால், நாம் ஒருவர் மற்றவருக்கு உணவு கொடுத்தல் என்னும் பொறுப்புணர்விலிருந்து தவறுவதால்தான் இன்னும் நம்மிடம் நிறைய குறைவுபடுகிறது.

யாயிர் என்னும் கதைமாந்தர் உங்களிலும், என்னிலும் இன்று உலாவருகிறார் - நாம் இயேசுவைத் தேடும்போதும், அவரிடம் நலமும், உயிரும் கேட்கும்போதும்!


2 comments:

  1. Anonymous1/31/2023

    வாழ்வின் எச்சூழலிலும் நம்பிக்கையோடுவாழ அருமையான பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. Anonymous1/31/2023

    மிக அருமை தந்தையே

    ReplyDelete