Tuesday, January 10, 2023

இரக்கமும் நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி 

புதன், 11 ஜனவரி 2023

எபி 2:14-18. மாற் 1:29-39

இரக்கமும் நம்பிக்கையும்

இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை, 'இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குரு' என முன்மொழிகின்றார். ஒவ்வொரு தலைமைக்குருவும் இரு நிலை உறவுகள் கொண்டிருக்கின்றார். நேர்கோட்டு நிலையில் கடவுளோடும், சமகோட்டு நிலையில் மக்களோடும் அவர் இணைந்திருக்கின்றார். ஏனெனில், அவர் கடவுளின் திருமுன்னிலையில் மக்கள் சார்பாக நிற்கின்றார். இவ்விரு நிலைகளில் இணைந்திருக்கின்ற இயேசு இரு பண்புகளைக் கொண்டிருக்கின்றார். கடவுளோடு உள்ள உறவு நிலையில் நம்பிக்கைக்குரியவராகவும், மனிதர்களோடு உள்ள உறவு நிலையில் இரக்கம் நிறைந்தவராகவும் இருக்கின்றார். அவருடைய நம்பிக்கைக்குரிய நிலை கீழ்ப்படிதலில், சிலுவை இறப்பை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்ப்படிதலில் வெளிப்படுகிறது. அவருடைய இரக்கம் மனிதர்களின் துன்பத்தில் பங்கேற்று அவர்களைச் சகோதரர், சகோதரிகள் என அழைப்பதில் வெளிப்படுகிறது.

நற்செய்தி வாசகம் இயேசுவின் பணி வாழ்வின் முதல் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து பதிவு செய்கின்றது. கப்பர்நகூம் தொழுகைக் கூடத்திலிருந்து வெளியேறுகின்ற இயேசு சீமோன் பேதுருவின் இல்லம் சென்று அவருடைய மாமியாரைக் காய்ச்சலிலிருந்து குணமாக்குகின்றார். மேலும், நகரில் இருந்த பல நோயுற்றவர்களின் பிணிகளையும் நீக்குகின்றார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கின்றார். 'யாவரும் உம்மைத் தேடுகிறார்கள்!' என்று சொல்லி சீமோன் அவரை நகரில் தக்க வைக்க முயன்றபோது, 'அடுத்த ஊர்களுக்கும் செல்வோம்' என்று புறப்படுகின்றார்.

இயேசுவின் இறைவேண்டல் அவர் தம் தந்தையோடு கொண்ட உறவில் நம்பிக்கைக்குரியவராக இருந்ததை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய இரக்கம் நோயுற்றவர்களுக்கு நலம் தருவதிலும், பரிச்சயம் என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறி அனைவரையும் தழுவிக்கொள்ள முயலும் தாராள உள்ளத்திலும் வெளிப்படுகிறது.

இயேசு முன்மொழியும் வாழ்க்கைப் பாடக் கேள்விகள் இவைதாம்: ஒன்று, தேவையில் இருப்பவர்களுக்கு என் உடனிருப்பை நான் காட்டுகின்றேனா? இரண்டு, என் அலுவல்கள் மற்றும் உறவுப் பரிமாற்றங்களிலிருந்து தனிமையான நேரத்தை இடத்தைத் தேர்ந்தெடுத்து இறைவனோடு இணைந்திருக்க முயற்சி செய்கின்றேனா? பரிச்சயம், பாராட்டு, புகழ் என்னும் பாதுகாப்பு வளையங்கள் தாண்டி அடுத்த ஊர்களுக்கு நகரும் துணிச்சலும் பரந்த உள்ளமும் கொண்டுள்ளேனா?


No comments:

Post a Comment