Wednesday, September 30, 2020

மௌனப் புன்னகையாள்

இன்றைய (1 அக்டோபர் 2020) திருநாள்

மௌனப் புன்னகையாள்

'வானிலிருந்து ஆசிகளை ரோசா மலர்களாக அள்ளித் தெளிக்கும் எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா' என்று எங்கள் இளங்குருமட அதிபர் அருள்திரு. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள் திருப்பலியில் கண்களை மூடிக்கொண்டு மன்றாடும் சின்னராணியின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

இளங்குருமடத்தில் நாங்கள் இருந்த அந்த ஆண்டு (1998-1999), சின்னராணி பற்றிய இரண்டு புத்தகங்களை நாங்கள் எங்கள் ஆன்மீக வாசிப்பிற்காக எடுத்திருந்தோம்: ஒன்று, 'ஓர் ஆன்மாவின் வரலாறு' - இது சின்னராணியின் தன்வரலாற்று நூல். இரண்டு, 'மௌனப் புன்னகையாள்' - இது சின்னராணி பற்றிய வரலாற்று நூல். மேற்காணும் இரண்டு நூல்களிலும், 'சின்ன வழி' அல்லது 'சிறிய வழி' என்பதுதான் அதிகம் பேசப்பட்டது.

சின்னராணியின் சின்ன வழி அல்லது சிறிய வழி பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

இன்று, நாம் பெரிய வழி பற்றியே பேசுகிறோம். இருவழிச் சாலை, நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சாலை, என்பவை வளர்ந்து எட்டு வழிச் சாலையாக மாறிக்கொண்டு வருகின்றன. நம் இணைய வேகமும் 2, 3, 4, 5ஜி என அகன்று கொண்டே வருகின்றது. வாகனம் ஓடும் வழியும், இணையதள தரவு நகரும் வழியும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தாலும், நம் உள்ளம், உடல்நலம், மனநலம் ஆகியவை சிறியதாகிக்கொண்டே வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

'பெரிதினும் பெரிது கேள்' எனச் சொல்லும் இந்த உலகத்தின் சப்தங்களின் நடுவில், 'சிறிதினும் சிறிது கேள்' எனக் கற்பிக்கிறாள் மௌனப் புன்னகையாள்.

'சிறிய வழியில்' நடப்பது எப்படி?

சின்னராணியின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

1. 'அன்பு செய்வோம். ஏனெனில், அதற்காகவே நம் இதயங்கள் படைக்கப்பட்டன.'

2. 'சிறிய தியாகம் செய்வதற்கான வாய்ப்பையும்கூட நழுவவிட வேண்டாம்.'

3. 'அன்பு அனைத்தையும் வெல்லும்.'

4. 'நாம் அடையும் அனைத்தும் அன்பு இல்லையேல் வெறுமையே.'

5. 'நம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே நம்மை அன்புக்கு இட்டுச் செல்லும்.'

6. 'கடவுளின் பார்வையில் எதுவும் சிறியது அல்ல. நீ செய்வதனைத்தையும் அன்புடன் செய்து பழகு.'

7. 'உன் ஆன்மாவில் கடவுள் செயலாற்றுவதற்கு ஆண்டுகள் தேவையில்லை. ஒரு நொடி போதும்.'

8. 'கனிவு மட்டுமே நமக்கு வழிகாட்டும் விண்மீன்.'

9. 'நீ கடவுளின் பிள்ளை என்ற அறிவில் நீ மகிழ்ந்தால் அதுவே போதும்.'

10. 'நம்மைச் சுற்றியுள்ள பொருள்களில் அல்ல, மாறாக, நம் ஆன்மாவின் அடித்தளத்தில்தான் மகிழ்ச்சி குடிகொள்கிறது.'

11. 'எல்லா மலர்களும் ரோஜா ஆக விரும்பினால், வசந்தகாலம் தன் அழகை இழந்துவிடும்.'

12. 'கடவுளின் விருப்பம் நிறைவேற்றுவதில்தான் புனிதம் அடங்கியுள்ளது.'

13. 'அன்பு செய்யும் ஒருவர் கணக்குப் பார்ப்பதில்லை.'

14. 'உனக்கு அடுத்திருப்பவரின் குறைகளைப் பொறுத்துக்கொள்வதில்தான் அன்பு அடங்கியுள்ளது.'

15. 'உண்மை ஒன்றே எனக்கு ஊட்டம் தரும்.'

16. 'ஒவ்வொரு பொழுதாக வாழ்! ஒவ்வொன்றையும் இனிமையாக வாழ்!'

17. 'சிறுமலரும் நம்மிடம் பேசினால், கடவுள் அதற்குச் செய்த யாவற்றையும் நமக்குச் சொல்லும்!'

18. 'என் செபத்திலும் தியாகத்திலும்தான் என் வலிமை உள்ளது.'

19. 'ஒவ்வொருவரோடும் வாக்குவாதம் செய்வதைவிட, அவர்களின் கருத்தில் அவர்களை விட்டுவிடுவதே நலம்.'

20. 'இறைவேண்டலின் ஆற்றல் அளப்பரியது.'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:1-5), 'விண்ணரசில் பெரியவர்' என்று ஆபிரகாம், யாக்கோபு, மோசே, தாவீது, சாலமோன் போன்ற மாபெரும் மனிதர்களை முன்வைக்காத இயேசு, ஒரு சிறுபிள்ளையை முன்நிறுத்துகிறார். 'சிறியவர் ஆவதே பெரியவர் ஆவது' என்பது இயேசுவின் இனிய அறிவுரை.

பெரியவர் ஆகியே பழக்கப்பட்ட நாம் சிறியவர் ஆக முயற்சிக்க சின்னராணி பரிந்து பேசுவாராக!

6 comments:

  1. சின்ன ராணியின் தங்கள் பதிவிற்காக காத்திருந்தேன்.
    நன்றி🙏

    ReplyDelete
  2. Anonymous10/01/2020

    வாழ்த்துக்கள்.... புன்னகையாள் பதிவு சிறப்பு....

    ReplyDelete
  3. ‘சின்ன ராணி’ என அழகாக அழைக்கப்படும் ‘குழந்தை இயேசுவின் சிறுமலர்’ குறித்த அழகான பதிவு! அழகிற்கும்,அன்பிற்கும் இலக்கணம் படைத்தவர்.சிறுவயதிலேயே ‘இந்தச் சின்னராணி தான் நம் குடும்பப் பாதுகாவலி’ என்று கூறி வளர்க்கப்பட்டதால் என் நெஞ்சுக்கு நெருக்கமானவர். அவரைப்பற்றிய எத்தனை எத்தனை அழகான விஷயங்களைப்பட்டியலிடுகிறார் தந்தை.’பெரிதினும் பெரிது கேள்’ எனும் இந்த உலகத்தின் சப்தங்களின் நடுவில் ‘சிறிதினும் சிறிது கேள்’ எனக்கற்பிக்கிறாள் இந்த மௌனப் புன்னகையாள்.....அருமை.

    ‘எல்லா மலர்களும் ரோஜா மலராக விரும்பினால் வசந்தகாலம் தன் அழகை இழந்து விடும்’ ஒவ்வொரு முறை ரோஜாவைப்பார்க்கும் போதும்,எதேச்சையாக யாரேனும் என் கைகளில் ஒரு ரோஜாவை வைத்து அமுக்கினாலும் அதில் நான் பார்ப்பது இயேசுவின் இந்த சின்ன ராணியைத்தான்.கண்டிப்பாக எனக்கு அந்த நாள் ஆசீர்வாதத்தின் நாளாக இருந்ததை உணர்ந்துள்ளேன். உலகில் நம்மைவிடப் பெரியவர்கள் இல்லை என்ற நம் எண்ணம்மாறி “சிறியவராயிருப்பதே ஆசீர்வாதம்” எனும் எண்ணத்தை இந்த சின்னராணி நம்முள் விதைப்பாளாக!
    பதிவின் ஒவ்வொரு எழுத்தையும் உணர்ந்து அனுபவித்து ஆனந்தித்து வாசித்தேன்.இந்த மௌனப்புன்னகையாள் தன் புன்னகையைத் தங்களுக்குப் பரிசாகத்தந்திட வாழ்த்துகிறேன்! அன்புடன்.....

    ReplyDelete
  4. இறந்த எங்கள் இளம் குருமட அதிபர் எங்கள் மனதில் பதிய வைத்த சின்ன ராணி தூய தெரசாவின் மீதான அன்பை நினைவுபடுத்திய தந்தைக்கு நன்றி... பாராட்டுகள்...

    ReplyDelete