Friday, September 18, 2020

கேட்கச் செவியுள்ளோர்

இன்றைய (19 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 8:4-15)

கேட்கச் செவியுள்ளோர்

உவமைகளில் பேசும் இயேசு, சில உவமைகளின் நிறைவில், 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' என்கிறார் (காண். மத் 11:15, மாற் 4:9, 23). இதன் பொருள் என்ன? செவிகள் இருப்பதே கேட்பதற்குத்தானே! 

'செவியுள்ளோர்' மற்றும் 'கேட்கச் செவியுள்ளோர்' என இரு குழுவினர் இருப்பதாக மேற்காணும் சொல்லாடல் குறிப்பிடுகிறது. முதல் வகையினருக்கு, காதுகள் பெரும்பாலும் உடல் உறுப்புகள், அல்லது மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால், அக்கண்ணாடியைத் தாங்குபவை. அவ்வளவுதான்! கண்கள் மற்றும் வாய் போன்றவற்றை நாம் மூடிக்கொள்வதுபோல காதுகளையும் மூக்கையும் தாமாகவே மூடிக்கொள்ள இயலாது. ஆனால், மிக முக்கியமாக, நம் காதுகளில் எவ்வளவு ஒலிகள் விழுந்தாலும் நாம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். ஏனெனில், நம் காதுகளின் கதவுகள் நம் மூளையில் இருக்கின்றன. 'ஒன்றைக் கேள்' என்று மூளை கட்டளையிட்டால்தான், காது கேட்கிறது. மூளை கட்டளையிடாத வரை காதுகளில் விழும் அனைத்தும் வெற்று ஒலிகளே. மூளை கட்டளையிட்டால்தான் காதுகளின் வழியாக வரும் தகவல் நெறிப்படுத்தப்பட்டு பொருள் புரிகிறது.

ஆக, இயேசு சொல்வதன் பொருள் எளிது.

திறந்த மனம் அல்லது ஈடுபாடு கொண்ட மூளை உடையவர்கள் கேட்கட்டும்.

'கண்ணிருந்தும் காண்பதில்லை, காதிருந்தும் கேட்பதில்லை' (காண். எசா 6) என்னும் எசாயாவின் வார்த்தைகளை எடுத்தாளும் இயேசு (காண். மத் 13:10-15), பல நேரங்களில் நம் பார்வையும் எந்தவொரு ஈடுபாடும் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

திருவெளிப்பாட்டு நூலில் ஏழு திருச்சபைகளுக்கு மடல் வரைகின்ற யோவான், ஒவ்வொரு முறையும், 'கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்' (காண். திவெ 2:7, 11, 17, 29, 3:6, 13, 22) என்கிறார். 

செயல்திறன்பேசிகள் மற்றும் கணிணியின் வருகையால் நம் கேட்கும் திறனும், பார்க்கும் திறனும் குறைந்து வருகிறது என அறிவியல் உலகம் சொல்கிறது. இன்று நாம் நிறைய ஒலிகளைக் கேட்கிறோம், நிறைய தகவல்களைப் பார்க்கிறோம். ஆனால், எவையும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஏனெனில், நாம் மனத்தைத் திறந்து கேட்பதில்லை.

இறைவார்த்தை என்பது வெறும் ஒலிகளின் தொகுப்பு அல்ல. மாறாக, மாற்றத்தை ஏற்படுத்தி நம்மைப் புரட்டிப் போடக்கூடியவை. 

கொஞ்சம் கொஞ்சமாக மனத்தோடு செவிசாய்த்தால் பார்த்தால், இறைவார்த்தை மட்டுமல்ல, நம் வாழ்வின் உறவுகளும் நம்மில் வலுப்பெறும்.

ஒலிகளைக் குறைத்தல் நலம்.

கேட்பதிலும் பார்ப்பதிலும் இன்று நமக்குத் தேவை 'மினிமலிஸம்'. அதாவது, ஒலிகளையும் எழுத்துருக்களையும் படங்களையும் நுகர்வதில் சிக்கனம் தேவை.

'எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை. எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை' என்கிறார் சபை உரையாளர் (காண். 1:8).

ஆவலும் வேட்கையும் தணிந்தால் அமைதி பிறக்கும். மனத்தின் அமைதியில் மட்டுமே இறைவார்த்தை நம் உள்ளத்தில் ஆழம் பெறும்.

1 comment:

  1. பல நேரங்களில் ஐம்புலன்களில் ஒன்றான செவியால் கேட்பதைவிட மனத்தால் கேட்பதே நிலைத்து நிற்கும் என்று சொல்லும் ஒரு பதிவு.இன்று நாம் பார்ப்பதும்,கேட்பதும் மனத்தில் தங்காமல் போவதற்குக் காரணம் நம் புலன்களோடு மனதும் திறந்தில்லாததே காரணம் என்கிறார் தந்தை.சாதாரணமாகப் பார்ப்பதற்கும்,கேட்பதற்கும் இது பொருந்துமெனில் நாம் காதால் கேட்கும் ‘ ‘இறைவார்த்தை’ க்கு இது எத்தனை பொருந்தும்? சபை உரையாளர் சொல்படி “ நம் ஆவலும்,வேட்கையும் தணிந்தால் அமைதி பிறக்கும்”.உள்ளத்தின் அமைதியில் மட்டுமே இறைவார்த்தை நம் உள்ளத்தில் ஆழம் பெறும். இத்தகையதொரு அமைதிக்காக “அமைதியின் தெய்வத்தை” மன்றாடுவோம். பதிவின் வரிக்கு வரி புரிதல் சிறிது கடினமாயிருப்பினும் முடிவு சொல்வது ரொம்பத் தெளிவு.” இறைவார்த்தை தரும் இறை அமைதி.” கேட்டலும்,உணர்தலும் அமைதியான வாழ்க்கையின் அடித்தளம் என்ற உண்மையைச் சொல்லும் பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete