Wednesday, September 2, 2020

என்னைவிட்டுப் போய்விடும்

இன்றைய (3 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 5:1-11)

என்னைவிட்டுப் போய்விடும்

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு பிரபலமான ஒரு புத்தகத்தின் பெயர் 'குட்டி இளவரசன்' (Le Petit Prince, In English, The Little Prince). இந்த இளவரசன் ஒரு நாள் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வருவான். வந்தவன் நரி ஒன்றைச் சந்திப்பான். அந்த நரியிடம் இளவரசன், 'நீ யார்?' எனக் கேட்பான். அதற்கு நரி, 'நான் ஒரு நரி!' எனப் பதில் சொல்லும். 'ஒரு நரி' என்றால், இங்கே உன்னைப் போல வேறு நரிகள் இருக்கின்றனவா? என்று கேட்பான் இளவரசன். 'ஆயிரக்கணக்கான நரிகள் இங்கே இருக்கின்றன. அவற்றில் நான் ஒரு நரி' என மீண்டும் பதில் சொல்லும் நரி. 'உங்க ஊரில் உன்னைப் போல யாரும் இல்லையா?' என்று தொடரும் நரி. 'நானும் ரோஜாவும்தான் இருக்கிறோம் எங்கள் உலகில்' என்பான் இளவரசன். 'ரோஜா என்றால், ஒரே ரோஜாவா? இங்கே ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் உண்டு' எனச் சொல்லும் நரி. ஓரிரு நாள்களில் நரிக்கும் இளவரசனுக்கும் இடையே நட்பு உருவாகும். இளவரசன் மீண்டும் தன் கிரகத்திற்குச் செல்லத் தயாராகும் நாள் வரும். நரி அப்போது கண்ணீர் வடிக்கும். 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்பான் இளவரசன். 'ஒரு நரி என இருந்த நான் இப்போது உன் நரி ஆகிவிட்டேன். பத்திரமாய்ப் போய் வா!' என்று சொல்லும் நரி. தொடர்ந்து, 'நீ போய் அந்த ரோஜாவிடம், 'உன்னைப் போல ஆயிரம் ரோஜாக்கள் இருக்கிறது' என்று சொல்வாயா?' எனக் கேட்கும். அதற்கு இளவரசன், 'இல்லை, நான் ரோஜாவிடம், 'நீ என் ரோஜா' என்றே சொல்வேன். ஏனெனில், ஆயிரம் ரோஜாக்கள் இருந்தாலும் அது என் ரோஜா!'

நிற்க.

ஆயிரத்தில் ஒருவராய், பத்தாயிரத்தில் ஒருவராய், அல்லது கூட்டத்தில் ஒருவராய் நாம் நிற்கும்போது, நமக்கு உரிமையானவர் நம் அருகில் இருந்தால், அந்த ஆயிரத்தையும், பத்தாயிரத்தையும், கூட்டத்தையும் பார்க்காது. யாருக்கு நாம் உரிமையோ, அவரின் இருப்பு மட்டுமே தெரியும். ஏனெனில், அவரைப் பொருத்தவரையில், நாம் யாரோ ஒருவர் அல்லர், மாறாக, அவருக்கு உரியவர், அவருடையவர்.

யாரோ ஒருவர் என்ற நிலையில் இருந்த பேதுருவின்மேல் உரிமை கொண்டாடுகிறார் இயேசு.

இயேசுவின் செயல் நமக்கு வியப்பூட்டுவதாக இருக்கிறது. கடற்கரைக்கு வருகிறார். நிறையப் படகுகள் நிற்கின்றன. அவற்றின் இரண்டருகில் வருகிறார். ஒன்று சீமோனுடையது. சீமோன் வலைகளை அலசிக் கொண்டிருக்க, தானாகவே படகில் ஏறுகிறார் இயேசு. 'தச்சனுக்கு தண்ணீரில் என்ன வேலை?' என்று பேதுரு சற்றே நிமிர்ந்து பார்த்திருப்பார். இருந்தாலும் வேகமாக வந்து ஏறிக்கொள்கின்றார். ஆழத்திற்குக் கொண்டு போகுமாறு இயேசு பணிக்கிறார். நிறைய மீன்பாடு கிடைக்கின்றது. 'நீ எனக்குரியவன், உன் படகு எனக்குரியது, இந்தக் கடல் எனக்குரியது, இந்த மீன்பாடு எனக்குரியது' என்ற நிலையில் எல்லாவற்றின்மேலும் உரிமை பாராட்டுகிறார் இயேசு.

தன்னை ஒருவர் ஏற்றுக்கொண்டு உரிமை பாராட்டுவதைக் கண்ட பேதுரு வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகின்றார். தான் அந்த அன்புக்கும், உரிமைக்கும் தகுதியற்றவன் என உணர்ந்தவராக, 'ஆண்டவரே, நான் பாவி! என்னைவிட்டுப் போய்விடும்' என இறைஞ்சுகின்றார். இயேசுவும், 'அஞ்சாதே! இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்!' என்கிறார். மீன்கள் மேல் பேதுரு கொண்டிருந்த உரிமையை உயர்த்தி, மனிதர்கள்மேல் உரிமைகொள்ளுமாறு பணிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்திலும், கொரிந்து நகரில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பேதுரு, அப்பொல்லோ, மற்றும் பவுலைப் பிடித்துக் கொண்டு, உரிமை கொண்டாடுகிறார்கள். இன்றும் சில பங்குத் தளங்களில் இந்நிகழ்வு இருக்கும். ஓர் அருள்பணியாளரை மட்டும் பிடித்துக்கொண்டு சிலர் உரிமை கொண்டாடுவர். மற்ற அருள்பணியாளர்களை வெறுப்பர் அல்லது அவர்கள்மேல் பகைமை பாராட்டுவர். பவுல் அவர்களுக்கு அறிவுறுத்துவது இதுதான்: 'இவர்கள் வெறும் விரல்கள்தாம். கிறிஸ்துதான் நிலவு. நிலவைக் காட்டிய விரல்களைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள்! நிலவாகிய கிறிஸ்துவைப் பிடித்துக்கொள்ளுங்கள்! அவர்மேல் உரிமை கொண்டாடுங்கள்.' 'நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள். கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்' என நிறைவு செய்கிறார் பவுல். ஆக, கிறிஸ்து நம்மேல் உரிமை கொண்டாடுகிறார். இன்னொரு பக்கம், நாம் கிறிஸ்துவின்மேல் உரிமை கொண்டாடக் கூடாது. ஏனெனில், அவர் கடவுளுக்கு உரியவர்.

கேள்விகள் மூன்று:

(அ) நான் இவருக்கு அல்லது அவருக்கு உரியவர் என்ற உரிமை நமக்கு இரத்த உறவு நிலையிலும், திருமண உறவு நிலையிலும், உடன்படிக்கை (நட்பு) உறவு நிலையிலும் வருகிறது. மேற்காணும் உறவு நிலைகளில் நான் மற்றவர்மேல் உரிமை பாராட்டுகின்றேனா? மற்றவர்கள் என்மேல் உரிமை பாராட்டுவதற்காக நன்றி சொல்கிறேனா?

(ஆ) என்மேல் கடவுள் உரிமை கொண்டாடும்போது, அங்கு குறுக்கே நிற்கின்ற என் தகுதியின்மை எது? அதை நான் அகற்றத் தயாராக இருக்கிறேனா?

(இ) 'எனக்கென்று யாருமில்லை!' என்று ஒவ்வொரு நாளும் புதிய புதிய மனிதர்கள் இன்றைய சமூக, அரசியல், மற்றும் பொருளாதாரச் சூழல்களில் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவர் மேல், 'நீ எனக்கு உரியவன்' என்று உரிமை கொண்டாட என்னால் இயலுமா?


2 comments:

  1. “உரிமை”...... என் மேல் உரிமை கொண்டாட ஒருவர் இருப்பின் எனக்கு எத்தனை மகிழ்ச்சியோ,அத்தனை மகிழ்ச்சி நான் உரிமை கொண்டாட எனக்கும் ஒருவர் இருக்கிறார் என்பது. ஆனால் இயேசு பேதுரு மீது கொண்ட உரிமைக்கும்,நாம் ஒருவர் மற்றவர்மீது வைக்கும் உரிமைக்கும் தொடர்புள்ளதா? தெரியவில்லை.அப்படி இருப்பின் கணவின்- மனைவி, காதலன்- காதலி, தந்தை- மகன், அண்ணன்- தம்பி எனும் உறவுகளில்.....உரிமைகளில் இத்தனை உரசல்கள் ஏற்படுமா? எத்தனை கொலைகள்! தற்கொலைகள்! காரணம் தாங்கள் உரிமை காட்டுவது ஒரு “உயிர்” என்பது மறந்து ஒரு பொருளாக மாறிப்போகிறது கால ஓட்டத்தில்.” எனக்கென்று யாருமில்லை!” என்ற சொற்றொடர் நம் செவிகளில் விழுவது அன்றாடக்கதையாகிவிட்டது.அப்படிப்பட்ட ஒருவரை தேடிப்பிடித்து “நான் இருக்கிறேன் உனக்கு!” என்று சொல்லவும், என்னை நேசிக்கும் இனியவர்களை எந்த எதிர்பார்ப்புமின்றி...நிபந்தனையுமின்றி நேசிக்கவும்,அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லவும் என்னால் முடிந்தால் எத்துணை நலம்!
    “நிலவைக்காட்டிய விரல்களைப்பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள்! நிலவாகிய கிறிஸ்துவைப்பிடித்துக்கொண்டு அவர்மேல் உரிமை கொண்டாடுங்கள்”......... அழகு!

    நீ போய் அந்த ரோஜாவிடம் ‘உன்னைப்போல் ஆயிரம் ரோஜாக்கள் இருப்பதாகச் சொல்வாயா?’ எனக்கேட்கும் நரியிடம், இளவரசன் “இல்லை,நான் ரோஜாவிடம், “ நீ என் ரோஜா” என்றே சொல்வேன்.ஏனெனில் ஆயிரம் ரோஜாக்கள் இருந்தாலும் அது என் ரோஜா!”. தந்தையின் கதை சொல்லும் பாங்கே ஒரு அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete