Tuesday, September 15, 2020

குழந்தையைப் போல

இன்றைய (16 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (1 கொரி 12:31-13:13)

குழந்தையைப் போல

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமடலில் மேன்மையாக இருக்கிற ஒரு பகுதி, 'அன்புக்குப் பாடல்' என்னும் பகுதி. கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய பல பிரச்சினைகளுக்கு விடை அளித்த பவுல், இறுதியாக, பிரச்சினைகளைக் களைந்து வாழ்வதற்கான வழியை அன்பின் வழி என முன்வைக்கின்றார்.

'அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்படாது ...' எனத் தொடங்கித் தொடரும் பாடல் நம்மில் மூன்று சிந்தனைகளை எழுப்புகிறது:

(அ) 'அன்பு' என்ற பதம்

கிரேக்கத்தில், அன்பு என்ற வார்த்தை நான்கு பதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. 'ஈரோஸ்' என்னும் வார்த்தை 'உடல்சார் அன்பை' அல்லது 'காமம் அல்லது காதலை' குறிக்கிறது. 'ஃபிலியா' என்னும் வார்த்தை 'உணர்வுசார் அன்பை' அல்லது 'நட்பை' குறிக்கிறது. 'ஸ்டார்கே' என்னும் வார்த்தை 'அறிவுசார் அன்பை' அல்லது 'குடும்ப பாசத்தை' குறிக்கிறது. 'அகாபே' என்னும் வார்த்தை 'ஆன்மீகம்சார் அன்பை' அல்லது 'கடவுளின் தற்கையளிப்பு அன்பை' குறிக்கிறது. இங்கே, தமிழில் நாம் அன்பு என மொழிபெயர்க்கும் வார்த்தை 'அகாபே' என்பதாகும். ஏனெனில், மற்ற மூன்று நிலை அன்பிலும் - காமம் (அ) காதல், நட்பு, பாசம் - பொறுமையின்மை, தீமை செய்தல், பொறாமை, தற்புகழ்ச்சி, இழிவானதை நாடுதல், தன்னலம், எரிச்சல், தீங்கு நினைத்தல், தீவினை, பொய், வெறுப்பு, நம்பிக்கையின்மை, விரக்தி, மனக்கலக்கம் ஆகியவை இருக்கும். ஆக, நாம் மற்ற மூன்று நிலை அன்பிலிருந்து நான்காவது நிலைக்குக் கடந்தால்தான் இந்தப் பாடல் சுட்டிக்காட்டும் பண்புகளை நமதாக்க முடியும்.

(ஆ) அறிவின் வளர்ச்சி

'நமது அறிவு அரைகுறையானது' எனப் பவுல் ஏற்றுக்கொள்வதுபோல நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அப்படி ஏற்றுக்கொள்கின்ற பவுல், நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோகும் என்றும், இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன், அப்போது கடவுள் அறிவதுபோல அறிவேன் எனவும் எதிர்நோக்குகிறார். எதிர்நோக்கு இல்லாத அறிவு தன்னிலே மழுங்கிப்போனதாக இருக்கும். ஆக, குறைவான என் அறிவு வளர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.

(இ) குழந்தையைப் போல

'நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்' என்று சொல்லும் பவுலின் வளர்ச்சி, அன்பில் வேண்டும். எந்தவொரு அன்பும் மாறுதலுக்கு உட்பட்டது. எப்படி? நான், 'அ' என்னும் ஒருவரை அன்பு செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். முதல் நிலையில், என் அன்பு, 'அ'மையம் கொண்டதாக இருக்கிறது. 'அ' என்ன விரும்புகிறதோ அதைச் செய்வது, 'அ'வுடன் பேசுவது என நாள்கள் நகர்கின்றன. இரண்டாம் நிலையில், அது 'என்'மையம் கொண்டிருக்கிறது. நான் விரும்புவது போல 'அ' செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். மூன்றாம் நிலையில், நான் 'அ'வை இறைமையத்தில் அன்பு செய்கிறேன். இந்த நிலை அன்பில் மட்டும்தான் பவுல் குறிப்பிடும் நற்பண்புகள் அன்பில் திளைக்கும். மற்ற இரு நிலைகளில், நிறைய பொறாமையும், எரிச்சலும், பொறுமையின்மையும், கோபமும் இருக்கும். இதையே, புனித அகுஸ்தினாரும், அனைவரையும் கடவுளில் அன்பு செய்யும் ஒருவர் தான் அன்பு செய்பவரை நிரந்தரத்தில் அன்பு செய்வதாகச் சொல்கிறார். மற்ற அன்பு நேரத்திற்கு உட்பட்டது. இறைமைய அன்பு நிரந்தரத்திற்குள் நுழைகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 7:31-35), இயேசுவின் சமகாலத்து மக்கள், அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். குழந்தைகள்போல அவர்கள் இருப்பதாக உருவகிக்கிறார் இயேசு. 

இன்று, அன்பிலும் அறிவிலும் நான் பெற வேண்டிய வளர்ச்சி பற்றி எண்ணுதல் நலம்!

1 comment:

  1. நேரத்திற்கு மற்றும் நிரந்தரத்திற்குட்பட்ட அன்பின் வித்தியாசத்தை புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளில் விளம்புகிறார் தந்தை. முந்தையது ‘என்’ மையத்திற்குட்பட்டதெனவும்,பிந்தையது ‘இறைமைய’த்திற்குட்பட்டதெனவும் கூறப்படுகிறது.நான் தெரிவு செய்வது ‘அன்பு’ ஒன்றையே பிரதானப்படுத்தும் இறைமையமா இல்லை பொறாமை,எரிச்சல்,கோபம் முதலியவற்றைக் கூடவே இழுத்து வரும் என் மையமா? இயேசுவை ஏற்கத்தயங்கும் ‘குழந்தைத்தனமா?’ இல்லை அன்பிலும்,அறிவிலும் வளர்ச்சி கண்ட முதிர்ச்சியா? எது வேண்டும் எனக்கு? யார் சொல்வார்?
    அன்பின் அத்தனை பரிமாணங்களையும் உணர்ந்த ஒருவரால் மட்டுமே ‘அகாபே’ எனும் ஆன்மீகம் சார் அன்பில் திளைத்திருக்க முடியும் எனத் திண்ணமாகச் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!


    ற்கும்பட

    ReplyDelete