Tuesday, September 1, 2020

தடுத்த நிறுத்த

இன்றைய (2 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 4:38-44)

தடுத்த நிறுத்த

இரண்டு நாள்களுக்கு முன் 'நேர மேலாண்மை' பற்றிய காணொளி ஒன்றைத் தமிழில் பார்த்தேன். அதில் கருத்துக்களைப் பகிர்பவர், 'ஒரு நாளைக்கு நமக்கு 1440 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த நிமிடங்களை நாம் எப்படி வாழ்கிறோம்' என்ற கேள்வியோடு தொடங்குகிறார். மணி நேரங்களில் பேசுவதை விட நிமிடங்களில் பேசுவது நல்லது என்றும், நாம் மணி நேரங்களை வீணாக்குவதை விட நிமிடங்களையே வீணாக்குகிறோம் என்றும் அறிவுறுத்தும் அவர், நேரக்கொல்லி என இரண்டு காரணிகளைக் குறிப்பிடுகின்றார்: (அ) மனம் அலைந்து திரிதல் (mental drifting or overthinking), (ஆ) அடுத்தவரை திருப்திப்படுத்துதல் (people-pleasing). முதல் காரணி என் சார்ந்தது. இரண்டாவது காரணி அடுத்தவர் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, நான் ஓர் ஓட்டலுக்குச் செல்கிறேன். 'என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று பரிமாறுபவர் கேட்டவுடன், நான் 'இதுவா, அதுவா, இது எப்படி, அது எப்படி' என யோசிக்க ஆரம்பிக்கிறேன். முடிவு எட்டியபாடில்லை. 'மொதல்ல எலய போடுப்பா!' என்று சொல்லிவிட்டு, நான் இன்னும் யோசிக்கிறேன். அவர் நின்றுகொண்டே இருக்கிறார். நான் பக்கத்தில் திரும்பி, 'மச்சான்! நீங்க என்ன சாப்பிடுறீங்க?' என மற்றவரைக் கேட்கிறேன். இப்படியே என் மனம் முடிவெடுக்காமல் அலைந்து திரிய, நிமிடங்கள் வீணாகின்றன. இது முதல் காரணி. இரண்டாவதாக, தன்னோடு கடை வீதிக்கு வருமாறு என் நண்பர் அழைக்கிறார். நான் இல்லாமல் அவர் அங்கு செல்ல முடியும். இருந்தாலும், அவர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக நான் அவரோடு செல்கிறேன். அல்லது அவரைத் திருப்திப்படுத்த நான் அவருடன் செல்கிறேன். அங்கே சென்றால், இன்னொரு நண்பர் வருகிறார். அவர் என்னைத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைக்கிறார். நான் அங்கிருந்து அவருடன் செல்கிறேன். இப்படியாக ஒவ்வொருவரையும் நான் திருப்திப்படுத்திக்கொண்டே செல்ல என் நேரம் வீணாகிறது.

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவைத் தலைசிறந்த நேர மேலாண்மையாளராகக் காட்டுகிறது.

ஒரு நாள் மாலை. சீமோனின் வீடு, வீட்டிற்கு வெளியே, முடிந்தபின் தனியே மலையில் என இயேசுவின் கால்கள் வேகமாக நகர்கின்றன. 'அடுத்த என்ன செய்வது?' என்ற யோசனைக்கே வேலையில்லை. ஏனெனில், அதீத யோசனை நேரத்தைக் கொல்லும் என்றும், மனம் அலைந்து திரிந்தால் நேரம் விரயமாகும் என்றும் இயேசுவுக்குத் தெரியும். 

இயேசுவால் எப்படி இவ்வளவு வேலைகள் செய்ய முடிந்தது?

அடுத்து என்ன செய்வது என்பது பற்றித் தெளிவாக இருந்ததால் அவரால் அவ்வளவு வேலைகள் செய்ய முடிந்தது. 

மேலும், இயேசுவைத் தேடி மக்கள் செல்கின்றனர். அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். ஆனால், இயேசு தன் வழியே செல்கின்றார்.

யாரையும் காயப்படுத்தவும் இல்லை. யாரையும் திருப்திப்படுத்தவும் இல்லை.

பல நேரங்களில், மற்றவர்கள் கேட்காமலேயே நாமே வாயைக் கொடுத்து நிறைய நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறோம். நாம் இப்படிச் சொன்னால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணத்தில், நம் மகிழ்ச்சியைவிட பிறரின் மகிழ்ச்சியை முதன்மைப்படுத்துகிறோம். ஆனால், விளைவு, அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த இயலாமல், நம் மகிழ்ச்சியும் பறிபோய், நாம் பரிதவிக்கிறோம்.

கேள்விகள் மூன்று:

(அ) என் வாழ்வின் மணித்துளிகளை நான் எப்படி வரையறுத்து மேலாண்மை செய்கிறேன்?

(ஆ) நான் ஏன் அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன்?

(இ) மற்றவர்கள் இயேசுவைத் தடுத்த நிறுத்த முயன்றதுபோல, நானும் மற்றவர்களையும் கடவுளையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளேனா?


2 comments:

  1. நமக்கு ஏற்கனவே நன்கு பரிட்சயமான ஒரு
    நேர மேலாண்மையாளர் நமக்கு அத்தனை பரிட்சயமில்லா ஒரு நேரமேலாண்மையாளரை அறிமுகத் செய்யும் விஷயமாகவே பார்க்கிறேன்இன்றையப்பதிவை.இதைப்பற்றி அட்சரம் கூடத்தெரியாத நான் தந்தையின் மேற்குலமக்களின் கேள்விகளைத் தவிர்த்து ஒரு சாமானியனாக பதில் சொல்ல விழைகிறேன். ‘ ‘மனம் அலைவது’ என்பது கொஞ்சம் அப்படி இப்படித்தான். ஆனால் எப்போதும் இல்லாவிடினும் அவ்வப்பொழுது அடுத்தவரின் திருப்திக்காக சில காரியங்களைச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?இயேசு தங்களைவிட்டுப் போகாதவாறு தடுத்து நிறுத்தப்பார்த்த மக்களை கண்டுகொள்ளாமல் தன் வழியே செல்கிறார் இயேசு. யாரையும் காயப்படுத்தவில்லை... சரியே! ஆனால் சிறிது நிமிடங்கள் அவர்களோடிருந்து அவர்களை திருப்திபடுத்துவதில் தவறேனும் உண்டா என்ன? எனக்குத்தெரியவில்லை..” மனம் அலைந்து திரிந்தால் நேரம் விரயமாகும்.” கருத்துக்கள் சொல்வதில் “ அந்த இயேசுவுக்கு சளைத்தவரல்ல இந்த இயேசு.” வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நேரத்தை சரியாக பயன்படுத்த அருமையான தகவல். நன்றி ே சு

    ReplyDelete