Thursday, September 17, 2020

பெண்களும் பணிவிடையும்

இன்றைய (18 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 8:1-3)

பெண்களும் பணிவிடையும்

மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா தன் நற்செய்தியில் பதிவு செய்கிறார்: 'பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். அவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.'

இதைச் சொல்வதற்கு கொஞ்சம் முன், 'பன்னிருவரும் அவருடன் இருந்தனர்' என்று சொல்கிறார் லூக்கா. அவர்கள் என்ன செய்கிறார்கள்? 'இயேசு நற்செய்தியைப் பறைசாற்றும்போது அவருடன் இருக்கின்றனர் அல்லது அவருடன் இணைந்து நற்செய்தி அறிவிக்கின்றனர்.'

இங்கே, மூன்று விடயங்களை லூக்கா குறிப்பிடுகிறார்:

(அ) பெண்கள் இயேசுவோடு இருந்தனர்

(ஆ) பெண்கள் உடைமைகளைக் கொண்டிருந்தனர்

(இ) பெண்கள் பணிவிடை செய்தனர்

இறுதி விடயத்திலிருந்து தொடங்குவோம். பெண்ணைப் பற்றி விவிலியம் சொல்லும்போதெல்லாம், 'பணி' அல்லது 'பணிவிடை' என்ற சொல் இணைந்தே வருகிறது:

'உன் கணவன்மேல் நீ வேட்கை கொள்வாய். அவனோ உன்னை ஆள்வான்.' (காண். தொநூ 3:16). அதாவது, பெண்ணின் பணிவிடை மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

'திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்குக் பணிந்திருங்கள்' (காண். எபே 5:22). ஆனால், ஆண்களைப் பற்றிச் சொல்லும் போது, 'திருமணமான ஆண்களே, நீங்கள் உங்களை மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று உள்ளது. ஆக. பெண்கள் ஆண்கள்மேல் காட்டும் அன்புக்கு, 'பணிவு' என பெயர் தருகிறது விவிலியம்.

'பெண்கள் அமைதியாயிருந்து, மிகுந்த பணிவோடு கற்றுக்கொள்ளட்டும். பெண்கள் கற்றுக்கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும்.' (காண். 1 திமொ 2:10-11)

'பணிவிடை செய்தல் பெண்கள் பணியா?' என்று பெண்கள் கொந்தளிக்கக் கூடாது. இன்று பெண்ணியம் நம் மூளையைக் கெடுத்து வைத்துள்ளது. எப்படி? 'ஆணும் பெண்ணும் சமம்' என்று சொல்கிறது பெண்ணியம். இது பொய்! ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது. ஒரு பென்சிலும் இன்னொரு பென்சிலும் சமமா என்று கேட்க முடியுமே தவிர, ஒரு பென்சிலும் ஒரு பேனாவும் சமமா என்று கேட்க இயலாது. ஆக, பெண்ணையும் ஆணையும் சமம் என்று அழைப்பது, குத்துவிளக்கையும், மெழுகுதிரியையும் சமம் என்று அழைப்பது போலாகும்! அவை இரண்டும் சமமாக இருத்தல் தேவையில்லை.

'பணிவிடை' என்ற வார்த்தையை நாம் பல நேரங்களில் நம் உள்ளத்தில் இருக்கும் 'அடிமையுணர்வு' என்னும் ஆர்க்கிடைப்பின் பின்புலத்தில் தவறாகப் புரிந்துகொள்கின்றோம். 'பணிவிடை' என்பது ஒரு தாழ்வான செயல் அல்ல. மாறாக, அது ஒரு மதிப்பீடு. ஆண்களும் பணிவிடை செய்கிறார்கள். 'டியகோனியா' என்ற வார்த்தையைத்தான், அதாவது, 'திருத்தொண்டு செய்தல்' என்ற வார்த்தையை லூக்கா பயன்படுத்துகிறார்.  'கணவனுக்கு மனைவி பணிந்திருத்தலே இனிய இல்லறம்' என்று அகுஸ்தினாரின் தாய் மோனிக்காவும் சொல்வதாக, அகுஸ்தினார் தனது ஒப்புகைகள் நூலில் பதிவு செய்கிறார்.

இங்கே நாம் காணும் பெண்கள் சொல்வது என்ன?

பெண்கள் என்றால் பணிவிடை செய்பவர்கள் என்பதை அல்ல. மாறாக, பெண்களைப் போல பணிவிடை செய்பவர்கள் இயேசுவோடு உடனிருக்க முடியும் என்பதை. ஆக, இயேசுவோடு இருக்கும் அனைவரும் திருத்தொண்டு ஏற்கின்றனர்.

இரண்டாவதாக, பெண்கள் தங்களுக்கென்று உடைமையைக் கொண்டிருக்கின்றனர்.

பெண்களுக்குப் பகிர்வு இயல்பிலேயே வரக்கூடியது. ஆகையால்தான், தான் கடித்த முதல் பழத்தைத் தன் கணவனோடு பகிர முன்வருகிறாள் ஏவாள். அந்த நிகழ்வில் ஆதாம் இருந்தால், ஒன்று பாம்பை அடித்திருப்பான். அல்லது பழத்தை முழுவதுமாகச் சாப்பிட்டிருப்பான். பெண்கள் உடைமையில் பங்காளிகளாக இருந்தனர். மேலும், பல சமூகங்களில் அவர்களே உடைமைகளை நிர்வகிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர்.

முதலில், அவர்கள் இயேசுவோடு இருந்தனர்.

இது அவர்கள் மேற்கொண்ட தெரிவு.

இன்று, என் வாழ்வின் தெரிவு என்ன? 

என்னுடையவற்றை நான் பகிர விழைகின்றேனா? 

நான் எப்படி திருத்தொண்டு ஆற்றுகிறேன்?

1 comment:

  1. “ பெண்கள் இயேசுவோடு இருந்தார்கள்; அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்” என ஆரம்பித்துப் பின் தடம் புரண்டு ஆணும்,பெண்ணும் ஒரு நாளும் சமமாக முடியாது என்கிறார் தந்தை, எந்த விஷயத்தில் சமமில்லை...புரியவில்லை. அதென்ன ஓரவஞ்சனை? பெண்கள் ஆண்கள் மீது காட்டும் அன்புக்கு மட்டும் பெயர் “ பணிவிடை” என்று? இப்படிப் பெண்களைக் குனியக் குனியக் குட்டியே தங்கள் காரியங்களை சாதிக்கும் ஆண்வர்க்கம் எழுதியது தானே விவிலியம்?தாய் மோனிக்கா இன்று இருந்திருந்தால் “ இனிய இல்லறம்” எதுவென்று சொல்லுமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்திருப்பார்.” பெண்களுக்குப் பகிர்வு இயற்கையிலேயே வரக்கூடியது.”....... தந்தையின் பெரிய மனசுக்கு நன்றிகள். கண்டிப்பாக இயேசுவுடன் இருக்கவும்,என்னிடமுள்ளதை.....அது பணமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.....நல்லது எதுவாக இருப்பினும் பிறருடன் பகிரவும் விழைகிறேன்.இதற்கு மேல் ‘திருத்தொண்டு’ என்று ஒன்று உள்ளதா என்ன? தந்தைதான் பதிலளிக்க வேண்டும்.பெண்களைக் கொஞ்சம் ஓரங்கட்டினாலும் ஒத்துக்கொண்ட சில நல்ல விஷயங்களுக்காகத் தந்தையைப் பாராட்டுகிறேன்!!!

    ReplyDelete