Monday, September 14, 2020

மரியாளின் ஏழு துயரங்கள்

இன்றைய (15 செப்டம்பர் 2020) திருநாள்

மரியாளின் ஏழு துயரங்கள்

இன்று புனித கன்னி மரியாளின் ஏழு துயரங்களை நினைவுகூர்கின்றோம். 

துன்பம் அல்லது துயரம் என்ற உணர்வு பற்றிய நம் புரிதல் மூன்று நிலைகளில் அமையலாம்: (அ) ஆன்மீகமயமாக்கல் (Spiritualist Understanding) - அதாவது, நான் இன்று துன்புற்றால், கடவுள் அத்துன்பத்திற்கு தகுந்த இன்பத்தைத் தருவார் என நினைப்பது. (ஆ) அறநெறிமயமாக்கல் (Moralistic Understanding) - இந்தப் புரிதலில் என் துன்பம் என்பது எனது பாவம் அல்லது குற்றத்திற்கான தண்டனை என நான் நினைப்பேன். (இ) எதார்த்த புரிதல் (Existential Understanding)- அதாவது, இன்பத்தைப் போன்று துன்பம் என்பது ஒரு வகையான இயல்பான உணர்வு. அதற்கு மேல் எதுவும் இல்லை.

துன்பம் நமக்கு ஏன் வருகிறது? (அ) நம் தெரிவுகளால் - அதாவது, நான் செய்த தவறான தெரிவுகள் அல்லது நான் எடுத்த தவறான முடிவுகள் எனக்குத் துன்பம் தரலாம். எடுத்துக்காட்டாக, காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறது. மருத்துவரிடம் செல்லாமல் எனக்கு நானே மருந்து எடுத்துக்கொள்கிறேன். அது என் நிலையை இன்னும் கடினமாக்குகிறது. இத்துன்பம் என் தெரிவால் வந்தது. (ஆ) நம் இருத்தல்நிலையால் - அதாவது, நான் தமிழ் மொழி பேசுகிறேன் என்பதற்காக, அல்லது நான் தமிழன் என்பதற்காக என் பக்கத்து மாநிலம் எனக்குத் தண்ணீர் தராமல் எனக்குத் துன்பம் தருவது. தமிழனாய்ப் பிறந்தது என் இருத்தல்நிலையால் வந்தது. இருந்தாலும், அதற்காக நான் துன்புற நேருகிறது. (இ) சமூகச் சூழ்நிலையால் - தவறான மற்றும் தன்னலமான அரசியல், பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் எனக்குத் துன்பம் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நான் ஓர் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயி. அரிசிக்கான கொள்முதல் விலையை அரசு குறைத்ததால் நான் துன்பத்திற்கு ஆளாகிறேன். (ஈ) இயற்கைப் பேரழிவுகள் - தொற்றுநோய், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் துன்பம். (உ) மனித பேரழிவுகள் - போர், அணுஆயுதம், தன்னலம் போன்ற காரணிகளால் வரும் துன்பம். மற்றும் (ஊ) அப்பாவிகளின் துன்பம் - இறப்பு அல்லது இழப்பால் வரும் துன்பம். திருட்டு, கொள்ளை நோய் போன்றவை நம் இல்லங்களில் ஏற்படுத்தும் துன்பம். நாம் நல்லதே செய்தாலும் நமக்குத் துன்பம் வருவது.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிறார் புத்தர். மேலும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியும் இருக்கிறது என்கிறார் அவர்.

ஆனால், வலி இல்லாமல் வழி இல்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.

விவிலியத்தின் ஞானநூல்கள் துன்பம் வழியாகவே ஒருவர் நேர்மையான வாழ்வுக்குப் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொல்கின்றன. இயேசுவே தான் இறைமகனாக இருந்தும் தன் துன்பத்தின் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கின்றார் (காண். எபி 5). 

இன்று துன்பத்துக்கான நம் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் உள்ளது:

(அ) துன்பத்தோடு போராடு (Fight) - அதாவது, துன்பம் வேண்டாம் என நினைத்து அதைத் தவிர்க்கும் விதத்தில் அதனோடு போராடுவது. நம் தலையில் தோன்றும் வெள்ளை முடி என்பது இயற்கை நிகழ்வு. ஆனால், 'வெள்ளை முடியோடு போராடுங்கள்!' எனச் சொல்கிறது இந்துலேகா. தாய்மைப்பேறின்மை, வயது மூப்பு போன்றவை இன்று நோய்களாகப் பார்க்கப்பட்டு, இத்துன்பங்கள் அகல்வதற்கு மருத்துவ உலகம் நம்மையும் போராடச் செய்கிறது.

(ஆ) துன்பத்திலிருந்து தப்பி ஓடு (Fly) - அதாவது, நம் துன்பத்தை நாம் மறப்பதற்கு இன்று நிறைய மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மது, போதை, டிவி சீரியல்கள், செய்திகள், காணொளிகள், புத்தகங்கள், பாடல்கள் என நாம் எதையாவது பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க வேண்டும் என உலகம் கற்பிக்கிறது. இப்படியாக, துன்பத்திலிருந்து நம்மைத் தப்பி ஓடச் சொல்கிறது. ஆனால், இது தற்காலிகமான ஓடுதலாக மட்டுமே இருக்க முடியும்.

(ஆ) துன்பத்தை நேருக்கு நேர் எதிர்கொள் (Face) - இதுதான், இயல்பான பதிலிறுப்பு. இதுவே, உண்மையான, நலமான பதிலிறுப்பு. துன்பம் என்பது நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஒரு இன்றியமையாத பகுதி என நினைத்து, நம் துன்பங்களை எதிர்கொள்வது.

மரியாளின் ஏழு துயர நிகழ்வுகள் ஏழு வகையான துன்ப உணர்வுகளை அவருள் எழுப்புகின்றன:

(1) சிமியோனின் இறைவாக்கு - காத்திருத்தல் என்னும் துன்பம்

(2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல் - திக்கற்ற நிலை என்னும் துன்பம்

(3) இயேசு ஆலயத்தில் காணாமற்போதல் - இழப்பு என்னும் துன்பம்

(4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல் - கையறுநிலை என்னும் துன்பம்

(5) இயேசுவின் சிலுவை இறப்பு - அவமானம் என்னும் துன்பம்

(6) இறந்த இயேசுவை மடியில் ஏந்துதல் - பலிகடா ஆதல் என்னும் துன்பம்

(7) இயேசுவின் அடக்கம் - வெறுமை என்னும் துன்பம்

மேற்காணும் ஏழு துன்பங்களும் நாமும் அனுபவிக்கும் துன்பங்களே. 

'துன்பம் மறைந்து போகும், அழகு என்றும் நிலைக்கும்!'

எனவே, துன்பங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அதை நோக்கிப் புன்முறுவல் பூத்தல் நலம்.

ஏனெனில், என் துன்பத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்றுமுறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார் (காண். 2 கொரி 12:9).

1 comment:

  1. மனிதருக்கு ஏற்படும் ஏழேழு வியாகுலங்களில் ஒரு ‘ஏழை’ (7) மட்டும் மரியாளைச்சார்ந்த துயரங்களாக நம் பார்வைக்கு வைக்கிறார் தந்தை.துன்பத்தின் தன்மையைப் புரிந்துகொண்டால், ஏன் அது நம்மை நோக்கிப்படையெடுக்கிறது என்ற புரிதலும் எளிதே! “ வலி இல்லாமல் வழி இல்லை” என்பது உண்மையெனில் வியாகுலங்களின்றி விமோசனமும் இல்லை என்பதும் உண்மையே! நமது வாழ்க்கையிலும் துன்ப அலைகள் அடுத்தடுத்து நம்மை அலைக்கழிக்கையில்,மரியாவுக்கு எழுந்த துன்ப உணர்வுகள் நம்மையும் புரட்டிப்போடுகையில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது....
    “துன்பம் மறைந்து போகும்,அழகு என்றும் நிலைக்கும்!’
    துன்பம் கண்டு நாம் துவண்டு போகையில் தான் அது நம்மைப் புரட்டி எடுக்கும்.ஆனால் அதை அனுப்பிய ஆண்டவரிடம் அதுபற்றி நாம் முறையிட்டால் “ என் அருள் உனக்குப்போதும்.வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்று புன்முறுவல் பூப்பார் அவர்.
    வியாகுல மாமரியே!
    தியாகத்தின் மாதாவே!
    சிலுவை அடியினிலே!
    சிந்தை நொந்தழுதாயோ!
    அன்னை மரியே! வியாகுலத்தாயே! எம் துயரங்களை எம் பலமாக்கிக்கொள்ள உம் அருள் தாரும்! சோகம் இழையோடும் சுக இராகங்களைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!


    ReplyDelete