Wednesday, September 16, 2020

அதிமாக அன்புகூர்தல்

இன்றைய (17 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 7:36-50)

அதிமாக அன்புகூர்தல்

பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறார். அங்கே அழையா விருந்தாளியாக பாவியான பெண் ஒருவர் வருகிறார். வந்த அவரது கண்களுக்கு இயேசு மட்டுமே தெரிகிறார். ஏனெனில், மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற உணர்வு அவருக்குச் சிறிதேனும் இல்லை. வந்தவர் இயேசுவின் காலடிகளில் கண்ணீர் சொரிந்து, துடைத்து, முத்தமிட்டு, தான் கொண்டு வந்திருந்த படிகச் சிமிழை உடைத்து அவருடைய காலடிகளில் ஊற்றுகிறார். 

புதையலைக் கண்டவர் தனக்குள்ளதெல்லாம் விற்று, புதையலை நிலத்தோடு வாங்கிக்கொண்டது போல, இயேசுவைக் கண்ட அவள் தன்னிடம் உள்ளதையெல்லாம் கொட்டி, இயேசுவைத் தனதாக்கிக்கொள்கிறாள்.

விருந்தோம்பல் செய்த பரிசேயர் இயேசுவின் மனத்தை வெற்றிகொள்ளவில்லை. விருந்தில் அழையாமல் நுழைந்தவள் இயேசுவை வெற்றிகொள்கின்றாள். தன் பாவங்கள் நீங்கப்பெறுகிறாள்.

இந்த நிகழ்வில், பரிசேயரும் அங்கிருந்தவர்களும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர். 'இவர் ஓர் இறைவாக்கினர் என்றால் ...' என ஐயம் கொண்டு, 'இவள் பாவியாயிற்றே' என பெண்ணை முத்திரையிடுகின்றார் பரிசேயர். அங்கிருந்தவர்களோ, 'பாவங்களை மன்னிக்கும் இவர் யார்?' என்று கேள்வி எழுப்புகின்றன்றனர். ஆனால், இயேசு, பரிசேயர் மற்றும் பெண்ணோடு உரையாடுகின்றார்.

ஐந்நூறு தெனாரியமும் ஐம்பது தெனாரியமும் கடன்பட்டிருந்த இருவரைப் பற்றிச் சொல்கிறார் இயேசு. கதையின்படி, பெண்ணும் பரிசேயருமே கடனாளிகள். 

ஆனால், கவனித்துப் பார்த்தால், இங்கே கடன் படுபவர் ஒருவர்தான். அவர் இயேசு. ஏனெனில், பரிசேயரின் விருந்தோம்பல் வெறும் ஐம்பது சதவிகிதம்தான் இருந்தது. பெண்ணின் விருந்தோம்பலோ ஐந்நூறு சதவிகிதம் இருந்தது. இயேசுவும் பெண்ணின் பாவங்களை மன்னிக்கிறார்.

இன்னொரு வகையில், தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக முதலிலேயே அந்தப் பெண் உணர்ந்ததால், அதிகமாக இயேசுவிடம் அன்புகூர்கிறாள்.

அதிகம் அன்புகூர்தல் என்றால் என்ன?

மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு, இதயத்தின் செயல்பாட்டை ஊக்குவித்தல்.

இயேசுவை அதிகம் அன்புகூர்தல் என்றால் என்ன?

நம் கண்களை அவரில் மட்டுமே பதிப்பது.



1 comment:

  1. எத்தனையோ முறை கேட்ட விஷயம்தான்.ஆனால் இன்று, தந்தை வழி கேட்பது புது அர்த்தத்தை...புதியதொரு கோணத்தை...புதியதொரு பார்வையைத்தருகிறது.ஐநூறு சதவிகிதம் விருந்தோம்பிய பெண்ணை இயேசு மன்னிக்கிறார் என்பதும், தானும் தன் பாவங்களும் ஏற்கனவே மன்னிக்கப்பட்டதாலேயே அந்தப்பெண் இயேசுவை நேசிக்கிறாள் என்பதும் ஒரு புதிய கோணத்தைக்காட்டுகிறது. நேசத்தால் மன்னிப்பா இல்லை மன்னிப்பால் நேசமா.....எதுவெனினும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே!
    அடுத்ததாக ‘அன்பு கூர்தலுக்கு’த் தந்தையின் definition “ மூளையின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு,இதயத்தின் செயல்பாட்டை ஊக்குவித்தல்.” மூளையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது.” இயேசுவை அன்பு செய்வோம்; நம் கண்களை அவரில் மட்டுமே பதிப்போம்.”
    காசைவிட நேசமே பெரிது என்ற புரிதலைத்தரும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete