Thursday, December 8, 2016

சந்தைவெளி சிறுவர்கள்

'முகநூல், டிவி, பத்திரிக்கை மூன்றையும் மூடிவிட்டு அமர்ந்து கதை பேசினால் 80 வயது வரை வாழலாம்' என்று இன்றைய ஆனந்தவிகடனின் வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கால சிறுவர்கள் தாம் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.

சிறுவர்கள் வித்தியாசமானவர்கள்.

நான் சிறுவனாய் இருந்தபோது எந்நேரமும் சிறுவர்களை தெருவில் பார்க்கலாம். எங்க ஊரில் இருப்பது ஒரு தெருதான். ஒரு தெருவெல்லாம் ஊரா என்று கேட்காதீர்கள். அப்படித்தான்.

மாலை 4 மணிக்கு பள்ளி விட்டு வந்தால் அந்த தெருவில் எல்லாம் நடக்கும்.

வண்டிக்கார தாத்தா மாடுகளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பார்.

பத்மா சித்தி பாத்திரம் விளக்கி கொண்டிருப்பார்கள்.

சங்கர் அக்காவும், சமுத்திரம் அக்காவும் தீப்பெட்டி கட்டு ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

நாட்டாமை வீட்டுப் பாட்டி தானாக கடுங்காப்பி போட்டுக்கொண்டிருக்கும்.

மில்லுக்கு வேலைக்குப் போனவர்கள் ஒருசேர வீடு திரும்பிக்கொண்டிருப்பர். அவர்களின் காலி டிபன் பாக்ஸ்கள் சைக்கிள் மணி போல 'டிங் டிங்' கென்று குதித்துக் கொண்டிருக்கும்.

4:05 மணி பி.ஆர்.சி. பஸ் புளுதி பரப்பி பறந்து போய்க்கொண்டிருக்கும்.

அப்படியே இந்த கலகலப்போடு வீடு வந்து யூனிஃபார்மை அவிழ்த்து எறிந்துவிட்டு, மாற்று உடை அணிந்துவிட்டு தெருவுக்கு வந்துவிடுவோம்.

அம்மன் கோவில் மேடைதான் நாங்கள் சந்திக்கும் இடம்.

இடத்தில் சேர்ந்தவுடன் என்ன யோசனை வருகிறதோ அந்த விளையாட்டை விளையாட ஆரம்பிப்போம்.

7 மணி வரை விளையாட்டு.

7 மணிக்கு கோவிலில் செபம்.

அம்மன் கோயில் - பிள்ளையார் கோயில் - முருகன் கோயில் - மாதா கோயில் - எல்லா வழிபாடுகளையும் அட்டென் பண்ணுவோம்.

தூரத்தில் இருக்கும் எசக்கி கோயிலுக்கு மட்டும் போகமாட்டோம். அங்கு பேய் ஆடுவதை பார்த்திருக்கிறோம்.

8 மணிக்கு சாப்பாடு.

8:30க்கு தெருவிளக்கில் வீட்டுப்பாடம்.

வீட்டுப்பாடம் முடிந்தவுடன் திருடன்-போலீஸ்.

9:30க்கு சங்கம் கலையும்.

இப்படித்தான் எல்லா நாள்களும் நகர்ந்தன.

இன்று என் ஊர்த்தெரு வெறிச்சோடி இருக்கின்றது.

சிறுவர்கள் வீட்டுக்குள் சுட்டி டிவி, போகோ, டிஸ்கவரி என பார்க்கின்றனர்.

நிறைய விளையாட்டுக்களை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

நாளைய நற்செய்தியில் இயேசு தன் சமகாலத்து சந்தையில் விளையாடிய சிறுவர்களை உருவகமாக எடுத்துக்கொள்கின்றார்.

இன்று அவர் வந்தால் யாரை உருவகப்படுத்துவார்!


3 comments:

  1. என்னே ஒரு இரம்மியமான பதிவு! எந்த செயற்கை சாயப்பூச்சுமில்லாத " உள்ளது உள்ளபடி" என்பது இதுதான் போலும்.தந்தையின் வரிகளைப்படிக்கப்படிக்க அவரின் இளம்பிராயத்துக் காட்சிகளை கண் முன் கொணரமுடிகிறது.இந்த காலத்துச் சிறுவர்கள் என்னத்தை எல்லாம் இழந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை.நான் சிறுமியாக இருக்கையில் தெருவில் விளையாடிய கிளித்தட்டு,சில்லு,சடுகுடு போன்ற விளையாட்டுக்கள் ... "அப்டின்னா என்ன"எனக்கேட்பவர்கள்தான்என்பிள்ளைகளும்,பேரப்பிள்ளைகளும்.
    ஆமாம்...இன்று இயேசு தெருவிற்கு வந்தால் யாரை உருவகப்படுத்துவார்? ஒருவேளை ஒரு மாறுவேடப் போட்டி வைப்பாரோ! கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தன் சிறுபிராயத்து மலரும் நினைவுகளால் என்னையும் உசுப்பிவிட்ட தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சாமி! உங்க குழந்தைப் பருவ அனுபவங்கள்

    ReplyDelete
  3. GITA - New York

    Dear Fr YESU:

    You write with such a stunning beauty.
    Your profound yet practical "ecumenism" impresses me.

    "7 மணிக்கு கோவிலில் செபம்.

    அம்மன் கோயில் - பிள்ளையார் கோயில் - முருகன் கோயில் - மாதா கோயில் - எல்லா வழிபாடுகளையும் அட்டென் பண்ணுவோம்.

    தூரத்தில் இருக்கும் எசக்கி கோயிலுக்கு மட்டும் போகமாட்டோம். அங்கு பேய் ஆடுவதை பார்த்திருக்கிறோம்.

    It was finally MADHA KOIL that was your destination as a Christian, though your childhood pilgrimage took you to Amman, Pillaiyar or Murugan...

    Those of us who have studied up to PhDs and more in theoretical ecumenism are splitting our heads and losing peace of mind and sleep...while you and your kid colleagues comfortably went to bed after 9.30 PM...

    ReplyDelete