Monday, May 30, 2022

மரியா – எலிசபெத்து சந்திப்பு

இன்றைய (31 மே 2022) திருநாள்

மரியா – எலிசபெத்து சந்திப்பு

நம் தாய்த்திருஅவையில் 13ஆம் நூற்றாண்டில் இத்திருவிழா தொடங்கப்பட்டது. முதலில் ஜூலை 2ஆம் தேதி கொண்டாடப்பட்ட இவ்விழா, பிற்காலத்தில் மே 31க்கு மாற்றப்பட்டது. அதாவது, மங்கள வார்த்தை திருநாளுக்கும் (மார்ச் 25), திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவுக்கும் (ஜூன் 24) இடையே கொண்டுவரப்பட்டது.

வானதூதர் தன் இல்லத்தை விட்டு வெளியேறிய அந்த நொடியே, கதவை அடைத்துவிட்டு மரியாவும் வெளியேறுகிறார். அப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா: 'அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' இயேசுவைத் தன் உடலில் தாங்கத் தொடங்கிய அந்த நொடி முதல் அவர் முழு இயக்கத்திற்கு உட்படுகிறார். எருசலேம் ஆலயத்தை நோக்கியோ, அல்லது தலைமைச்சங்கத்தை நோக்கியோ அவர் ஓடவில்லை. மாறாக, தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி ஓடுகிறார். 

மங்கள வார்த்தை மரியாவை முழுவதுமாக மாற்றியது: நாசரேத்தூரின் எளிய இளவல் இப்போது உன்னதரின் மகனின் தாயாகின்றார். இனி அவர் தன் விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே விரும்புவார். இனி அவர் அனைத்திலும் விரைந்தே செயல்படுவார்: விரைந்து பணியாற்றுவார், விரைந்து இறைத்திருவுளம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் அமைதியாக ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.

இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.

தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.

மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து மிகவும் எதார்த்தமானதாகவும் உண்மையாகவும் இருந்ததால் அது வயிற்றிலுள்ள குழந்தையைச் சென்றடைகின்றது.

'எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்' என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா. 

எலிசபெத்து மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளைப் பாடிப் புகழ்கின்றார். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது நம் முகம் நம்மையோ அல்லது மற்றவர்களையோ பார்க்காமல் இறைவனைப் பார்த்தால் எத்துணை நலம்! தன் வாழ்வு முழுவதும் இறைமையின் வெளிப்பாடாகப் பார்க்கத் தெரிந்த மரியாவின் நம்பிக்கைப் பார்வை நமக்கு வியப்பாக இருக்கிறது. 

ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருக்கின்ற மரியா பின்னர் வீடு திரும்புகின்றார்.

புறப்படும் பயணம் அனைத்தும் இல்லம் திரும்பவே என்பதும் ஒரு நல்ல வாழ்வியல் பாடம். பயணத்தின் எந்த இலக்கும் நம் வீடாகிவிடாது. நாம் திரும்ப வேண்டிய ஒரு வீடு எப்போதும் உண்டு.

நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி நம் அனைவரையும் பற்றிக்கொள்வதாக!


1 comment:

  1. Philomena Arockiasamy5/31/2022

    நாளும் செய்தித்தாள்களில் எத்தனையோ சந்திப்புகளைப் பற்றி வாசிக்கிறோம். செய்தித்தாளை மடித்த மாத்திரத்தில் சந்திப்புகளும் மறைந்து போகின்றன. ஆனால் இரு பெண்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்திப்பு ஒரு திருவிழாவாகவே கொண்டாடும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறதெனில் அது அன்னை மரியா- எலிசபெத் இவர்களுக்கிடையே நடந்த சந்திப்பு மட்டுமே!நசரேத்தூரின் இளவல் வானதூதரின் வாழ்த்துக்குப்பின் புறப்பட்டுச்சென்றது தான் உன்னதரின் தாயாகப்போகிறோம் என்பதைத் தம்பட்டம் அடிக்க அல்ல…தேவையிலிருக்கும் தன் உறவினர் எலிசபெத்துக்கு உதவிசெய்ய. கருவிலிருக்கும் போதே இரு குழந்தைகள் தம் தாய்மாரை உந்தித் தள்ளுகின்றனர். அன்பும்,தாழ்ச்சியும் பொங்கிவழிய தன்னிடமிருந்த தூய ஆவியைத் தன் உறவினருக்கு வலிந்து கொடுக்கிறார் மரியா.நாம் எடுக்கும் பயணங்கள்…நாம் மேற்கொள்ளும் சந்திப்புகள் நம் மகிழ்ச்சிக்காகவா? இல்லை நாம் சந்திப்பவரின் மகிழ்ச்சிக்காகவா? இன்றைய நாளின் இரு நாயகிகளும் நம் பயணங்கள் ஒரு குறிக்கோளோடு இருக்க நமக்குத் துணைவருவார்களாக!
    மெழுகுதிரியைக் கையிலேந்தி் உதடுகளில் செபமாலை முணுமுணுக்க வீதிகளையோ..ஆலயத்தையோ பவனிவரும் திருவிழாக்களில் இன்றையதும் ஒன்று..எனக்கு மிகவும் பிடித்த ஒன்றும் கூட.தந்தைக்கு சந்திப்புத் திருநாளின் வாழ்த்துகள்!!!

    ReplyDelete