திருத்தூதர் பணிகள் 15:1-2, 22-29 திருவெளிப்பாடு 21:10-14, 22-23 யோவான் 14:23-29
வெறுமையை நிரப்பும் இறை அமைதி!
உளவியல் அறிஞர் பிராய்டின் முதன்மைச் சீடர் கார்ல் யுங் அவர்கள் கண்டுபிடித்த முக்கியமான உளவியல்கூறு 'ஆர்க்கிடைப்' ('ஆர்கே' என்றால் கிரேக்கத்தில் 'தொடக்கம்' என்றும் 'டிப்போஸ்' என்றால் 'மாதிரி' அல்லது 'பண்பு' என்றும் பொருள்). இதை 'தொடக்கமாதிரி' என்று மொழிபெயர்த்தல் சால்பன்று. ஆக, நம் புரிதலுக்காக, இதை 'உள்ளுறை உணர்வு' என மொழிபெயர்த்துக் கொள்வோம். மனித மனத்தில் 12 ஆர்க்கிடைப்புகளைக் கண்டுபிடிக்கிறார் யுங். இந்த ஆர்க்கிடைப்பில் எது மேலோங்கி இருக்கிறதோ அதுவே ஒரு மனிதரின் ஆளுமையை ஆள்கிறது.
இந்த 12 ஆர்க்கிடைப்புகளைச் சுருக்கி 6 உள்ளுறை உணர்வுகளாக, தன் 'ஹீரோ விதின்' என்ற நூலில் பதிவு செய்கின்றார் கேரல் பியர்சன்: 'குழந்தையுள்ள உணர்வு' (இன்னசன்ட்), 'அநாதை உணர்வு' (ஆர்ஃபன்), 'சாட்சிய உணர்வு' (மார்ட்டர்), 'நாடோடி உணர்வு' (வாண்டரர்), 'போராளி உணர்வு' (வாரியர்) மற்றும் 'மந்திரவாதி உணர்வு' (மேஜிசியன்). நம்மை ஹீரோவாக மாற்ற நாம் நெறிப்படுத்த வேண்டிய முதல் உணர்வு 'அநாதை உள்ளுறை உணர்வு' (ஆர்ஃபன் ஆர்க்கிடைப்). இந்த உணர்வு நம் எல்லாரிடமும் இருக்கிறது. இந்த உணர்வுதான் அடுத்தவர்களை நோக்கி நம்மையும், நம்மை நோக்கி மற்றவர்களையும் இழுக்கிறது. மற்றொரு பக்கம், இந்த உணர்வுதான் மற்றவர்கள்மேல் சந்தேகத்தையும் வருவிக்கிறது.
எதற்கு இந்த உளவியல் பின்புலம்?
இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம் (யோவான் 14:23-29), இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையின் (14:1-31) ஒரு பகுதி. 'அன்பு செய்வதை' மையமாக வைத்து இயேசு பேசும்போது, 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்' (14:18) என்கிறார். முதல் மொழிபெயர்ப்பில் 'அநாதைகளாக' என்ற வார்த்தை இப்போது 'திக்கற்றவர்களாக' என்று மாற்றப்பட்டுள்ளது. 'அநாதை' என்ற வார்த்தை 'அ,' 'நாதி' என்ற இரண்டு வார்த்தைகளின் சுருக்கமாகவே இருக்க வேண்டும். அதாவது, 'வழியில்லாதவர்,' 'திசையில்லாதவர்,' 'திக்கில்லாதவர்'தான் அநாதை.
தான் தன் சீடர்களைவிட்டுப் போனவுடன், அவர்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்கிறார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'அநாதை' அல்லது 'திக்கற்றவர்' என்ற வார்த்தை இடம்பெறவில்லையென்றாலும், 'செல்கிறேன்,' 'நான் போகிறேன்,' 'என் தந்தையிடம் செல்கிறேன்' என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவரது உடனடிப் பிரிவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இந்தப் பிரிவை ஈடுசெய்ய இயேசு 'தூய ஆவியானவர் என்னும் துணையாளரை' வாக்களிப்பதும், இந்தப் பிரிவின் வலியை நமக்கு உணர்த்துகிறது.
'வெறுமையை நிரப்பும் இறை அமைதி' - என்று இன்றைய சிந்தனைக்கு நாம் தலைப்பிடுவோம்.
இன்றைய மூன்று வாசகங்களும் இந்த ஒரு கருத்தையே மையமாகக் கொண்டிருக்கின்றன. முதல் வாசகத்தில் 'நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால்' அவர்கள் மனத்தில் வெறுமை உருவாகிறது. இரண்டாம் வாசகத்தில் 'கோவிலும், கதிரவனும், நிலாவும்' இல்லாத வெறுமை. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு உருவாக்கும் வெறுமை.
இன்றைய முதல் வாசகம் (திப 15:1-22, 22-29) திரு அவை வரலாற்றின் முதல் திருச்சங்கம், 'எருசலேம் திருச்சங்கம்' கூட்டப்பட்டதன் நோக்கத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவையும் பற்றிச் சொல்கிறது. தொடக்கத் திருஅவையில், கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாதவர்கள் (புறவினத்தார்கள்) ஒரு பிரச்சினையைச் சந்திக்கின்றனர். ஒருவர் யூதராக மாற விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவராக மாற என்ன செய்ய வேண்டும்? இங்கே இரண்டு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இயேசு மற்றும் இயேசுவின் திருத்தூதர்கள் யூதர்களாக இருந்ததால், யூத மரபு மற்றும் சட்டங்களைக் கடைப்பிடிப்பது கிறிஸ்தவர்களுக்கும் கடமை என்று நினைத்த சிலர், கிறிஸ்தவர்களாக மாறும் அனைவரும் முதலில் யூதராக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி ஆனால் என்ன ஆகும்? இங்கே இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஓரங்கட்டப்படும். அதாவது, மீட்பு என்பது நம்பிக்கையால் அல்ல. மாறாக, செயலால்தான் என்ற தவறான புரிதல் உருவாகும். பவுல் மற்றும் பர்னபாவைப் பொறுத்தமட்டில், இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல. இந்தப் பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது பேதுருவும், யாக்கோபுவும் ஒரு மனத்துடன் இதை அணுகுகின்றனர். 'நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?' என்று பேதுருவும், 'இன்றியமையாதவை தவிர வேறொன்றையும் சுமத்தக் கூடாது' என்று யாக்கோபுவும் தீர்ப்பு வழங்கி, 'விருத்தசேதனம் செய்யாமலேயே ஒருவர் கிறிஸ்தவராக மாறலாம்' என்கிறார். இந்தத் தீர்ப்பால்தான் இன்று வரை நாமும் விருத்தசேதனம் இன்றி கிறிஸ்தவர்களாகின்றோம்! மேலும், இது எதைக் காட்டுகிறது என்றால், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையே போதுமானது என்ற இறையியலையும் முன்னிறுத்துகிறது. கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது.
இதைவிட மேலாக, கொள்கைகளுக்காக மக்களை இழந்துவிடக்கூடாது என்றும், மக்களுக்காக கொள்கைகளையும் இழக்கலாம் என்று இவர் மனிதர்களுக்குத் தரும் முன்னுரிமை, 'ஓய்வு நாள் இருப்பது மனிதருக்காக, மனிதர் இருப்பது ஓய்வுநாளுக்காக அல்ல' என்ற இயேசுவின் போதனையின் தாக்கத்தை உணர்த்துகிறது. 'எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர்' (15:24) என்று தான் கேள்விப்பட்டதாக எழுதுகின்றார் யாக்கோபு. இந்தக் கலக்கத்தை அவர் போக்கி, 'அமைதி உரித்தாகுக!' 'நல்லா இருங்க!' (15:29) என வாழ்த்துகிறார்.
ஆக, கலக்கம் உருவாக்கிய வெறுமை நீங்கி அமைதி பிறப்பதைச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம். இதையே தூய பவுல் தன் திருமடலில், 'அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்' (எபே 2:17) என எழுதுகின்றார்.
'புதிய வானகம், புதிய வையகம்' என்று கடந்த வார இரண்டாம் வாசகத்தில் கண்ட யோவானின் காட்சி இன்றைய வாசகத்தில் (காண். திவெ 21:10-14, 22-23) 'புதிய எருசலேம்' என்று தொடர்கின்றது. மண்ணக எருசலேமில் 12 நுழைவாயில்கள் இருந்தன. இஸ்ரயேல் இனத்தில் இருந்த 12 குலங்களின் அடையாளமாக இந்த 12 வாயில்கள் இருந்தன. புதிய இஸ்ரயேலில் 12 வானதூதர்கள் இந்த வாயில்களில் நிற்கின்றனர். மேலும், புதிய இஸ்ரயேலாகிய இயேசுவின் 12 திருத்தூதர்களின் பெயர்கள் அங்கே இடம்பெற்றிருக்கின்றன. மண்ணக எருசலேமில் மிக முக்கியமாக இருந்தது திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பகலில் கதிரவனும், இரவில் நிலவும் ஒளிவீசின. ஆனால், புதிய எருசலேமில் கோவிலும் இல்லை. கதிரவன் மற்றும் நிலா என்னும் ஒளிச்சுடர்களும் இல்லை. 'இல்லை' என்ற 'வெறுமையை' நிறைவு செய்வது யார்? 'எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே' (21:22). இந்த 'ஆட்டுக்குட்டியே ஒளிதரும் விளக்காகவும்' இருக்கின்றது. பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் இரண்டாம் ஆலயத்தைக் கட்டி எழுப்புகின்றனர். இந்த இரண்டாம் ஆலயம் உரோமையர்களால் கி.பி. 70ஆம் ஆண்டு தரைமட்டமாக்கப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நாம் யோவானின் காட்சியைப் பார்க்க வேண்டும். எருசலேமில் ஆலயம் இல்லாத குறையை இனி இயேசுவே நிரப்புவார் என்று தன் திருஅவை மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகவே, 'ஆட்டுக்குட்டியை கோவில்,' என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான 'இருளை' அகற்றும் 'ஒளி' என்றும் முன்வைக்கின்றார்.
ஆட்டுக்குட்டி எப்படி கோவிலாக முடியும்? அல்லது ஒளியாக முடியும்? எருசலேம் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 'பாவ மன்னிப்பு பலியை' ஒப்புக்கொடுப்பார் தலைமைக்குரு. தன் பாவக்கழுவாய்க்கென ஒரு ஆட்டுக்குட்டியும், தன் மக்களின் பாவக்கழுவாய்க்கென ஒன்றும் என இரண்டு ஆட்டுக்குட்டிகளோடு, திருத்தூயகம் செல்வார் அவர். அந்தப் பலி வழியாக, மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இழந்த அமைதியும், ஒளியும் மீண்டும் திரும்பும். ஆனால், இயேசு தலைமைக்குரு மட்டுமல்ல. அவரே ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி தன் இறப்பால் ஒரே முறை எக்காலத்திற்குமான முழுமையான பலியைச் செலுத்தி இழந்த அமைதியையும், ஒளியையும் மீட்டுக்கொடுத்துவிட்டது.
ஆக, உரோமையரின் படையெடுப்பு விட்டுச் சென்ற வெறுமையை நீக்கி நிறைவையும், ஒளியையும் தருகின்றார் இயேசு என எடுத்துரைக்கிறது இரண்டாம் வாசகம்.
'ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?' என்று யூதா கேட்க (14:22), அதற்கு இயேசு சொல்லும் விடையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 14:23-29).
யூதாவின் கேள்விக்கும், இயேசுவின் விடைக்கும் நேரிடையான தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை(!). 'என்மீது அன்பு கொண்டிருத்தல்' என்று தொடங்கி, அதே சொல்லாடல்களோடு முடிகிறது இயேசுவின் விடை. இயேசுவின் விடையின் மையமாக இருப்பது: 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்னும் வார்த்தைகள்தாம்.
இயேசு தம் சீடர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இவரின் இந்தப் பிரிவு திருத்தூதர்கள் நடுவில் நான்கு வகை உணர்வுகளை ஏற்படுத்துகிறது: (அ) அவர்கள் அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருப்பர் ('துணையாளர் கற்றுத்தருவார்'), (ஆ) அவர்கள் பயத்தில் அனைத்தையும் மறந்துவிடுவர் ('துணையாளர் நினைவுறுத்துவார்'), (இ) அவர்கள் கலக்கம் அடைவர் ('நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'), (ஈ) அவர்கள் அச்சம் கொள்வர் ('நீங்கள் மருள வேண்டாம்'). மொத்தத்தில் இந்த நான்கு வகை உணர்வுகளும் திருத்தூதர்களின் உள்ளத்து வெறுமையின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்த வெறுமைக்கு மாற்றாக இயேசு முன்வைப்பது அமைதி.
'அமைதி' ('எய்ரேனே' - 'ஐரின்' என்ற பெயர் இதிலிருந்தே வருகிறது!) என்ற வார்த்தையை யோவான் இங்கேதான் தன் நற்செய்தியில் முதன்முதலாகப் பயன்படுத்துகிறார் (காண்க. 20:19, 21, 26). யூதர்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்தி விடைபெறும்போது 'ஷலோம்' ('அமைதி') என்று சொல்வர். ஆக, இயேசுவின் பிரியாவிடை உரையில், 'சரி போய்ட்டு வர்றேன்' என்ற பொருளை இது மேலோட்டமாகக் காட்டினாலும், இதற்கு ஆழமான பொருளும் இருக்கிறது.
அது என்ன ஆழமான பொருள்? முதலில், இயேசு அமைதியை 'தருகின்றார்.' ஆக, இது ஒரு கொடை. திருத்தூதர்கள் தங்களின் நற்செயலால் பெறும் ஊதியம் அல்லது வெகுமதி அல்ல இது. இதை இயேசுவே கொடையாகத் தருகின்றார். இரண்டாவதாக, 'அமைதியை தருகிறேன்' என்று சொல்லாமல், 'என் அமைதியைத் தருகிறேன்' என்கிறார் இயேசு. தன் கதவருகில் காத்திருக்கும் மரணமும் அந்த அமைதியை பறித்துவிட முடியாது. மூன்றாவதாக, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்ற வாக்கியத்தை, 'நாங்கள் அவருடன் குடிகொள்வோம்' என்ற வாக்கியத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ஆக, 'அமைதி' என்பது வெறும் 'ஷலோம்' என்னும் வார்த்தை அல்ல. மாறாக, தந்தை-மகன்-தூய ஆவியானவரின் ஒருங்கிணைந்த பிரசன்னம் மற்றும் உடனிருப்பு. ஆக, இறைவனே அமைதி. ஆகையால்தான், 'நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்கிறார் இயேசு.
யோவான் நற்செய்தியில் 'உலகம்' என்பது 'கடவுளுக்கு எதிரான எல்லாவற்றின் ஒட்டுமொத்த உருவகம்.' உங்களுக்கு அமைதி தருவது எது? - என்று நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'இயற்கை காட்சி,' 'புதிய இடம்,' 'மௌனம்,' 'சலனமற்ற நிலை,' 'மெல்லிசை,' 'பறவைகளின் கீச்சு,' 'குழந்தைகளின் கொஞ்சல்,' 'நண்பர்' என நீங்கள் நிறைய சொல்லலாம். அல்லது, 'போர் இல்லாத நிலை,' 'தன்னலமில்லாத நிலை,' 'வன்முறை இல்லாத நிலை' என்றும் சொல்லலாம். இயேசுவின் காலத்தில் உரோமையர்கள், 'உரோமையின் அமைதி' (பாக்ஸ் ரொமானா) என்ற ஒரு கருதுகோளை வைத்திருந்தனர். அதாவது, உரோமையர்களின் காலனிக்குள் யாரும் எங்கும் பயணம் செய்யலாம். குற்றங்கள் தண்டிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்.
உலகம் தரும் அமைதியை, (அ) அரசியல் அமைதி, (ஆ) உறவு அல்லது நட்பில் அமைதி, (இ) உள்மன அமைதி அல்லது உளவியல் அமைதி என மூன்று கட்டங்களுக்குள் அடக்கிவிடலாம். இவற்றில் எந்த அர்த்தத்தையும் இயேசுவின் 'அமைதி' குறிக்கவில்லை. ஏனெனில் இந்த மூன்று வகை அமைதியும் நீடிக்க இயலாதவை. ஒரு அரசு மற்ற அரசோடு போர் தொடுத்தால் அரசியல் அமைதி குலைந்துவிடும். நண்பர்களுக்குள் புரிதல் குறையும்போது உறவில் அமைதி போய்விடும். சின்ன எதிர்பார்ப்பு-ஏமாற்றம்கூட நம் உள்மன அமைதியைக் குலைத்துவிடும். இவ்வாறாக, உலகம் தரும் அமைதி, 'நீடிக்க இயலாததது,' 'குறையுள்ளது,' 'ஏமாற்றக்கூடியது.' இயேசுவின் அமைதி நீடித்திருக்கக் கூடியது, நிறைவானது, ஏமாற்றம் தராதது. எப்படி? இயேசுவின் அமைதி ஒரு அனுபவம். எப்படிப்பட்ட அனுபவம்? இறைவனே குடியிருக்கும் அனுபவம். அந்த அனுபவம் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் வார்த்தையைக் கேட்டலில் அடங்கியிருக்கிறது.
ஆக, தன் பிரிவால் ஏற்படும் வெறுமையை தன் தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் உடனிருப்பு கொண்டு வரும் அமைதியால் நிறைவு செய்கிறார் இயேசு.
இவ்வாறாக, முதல் வாசகத்தில், 'நம்பிக்கையா? அல்லது விருத்தசேதனம் என்னும் செயலா?' என்ற கேள்வி உருவாக்கிய வெறுமை தூய ஆவியாரின் செயல்பாட்டால் களையப்பட்டு, சீடர்களின் மனத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரப்பப்படுகிறது. இரண்டாம் வாசகத்தில், நகரில் கோவில் இல்லாத வெறுமையை ஆட்டுக்குட்டி நிரப்பி கடவுளின் உடனிருப்பை மக்களுக்குத் தருகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு கொண்டுவரும் வெறுமை, 'நாங்களும் அங்கு வந்து குடிகொள்வோம்' என்று கடவுளின் பிரசன்னத்தால் நிரப்பப்படுகிறது.
இவற்றை நாம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது?
1. கருத்து வேறுபாட்டிலிருந்து ஒருமைப்பாட்டிற்கு
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் புறவினத்தார்கள் வெறுமனே நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடையவில்லை. 'இது எப்படி? அது எப்படி?' என்று கேள்வி எழுப்புகின்றனர். அந்தக் கேள்வியே தொடக்கத் திருச்சபையின் திருப்புமுனையாக அமைகிறது. ஆக, கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அதே வேளையில், கருத்து வேறுபாடு எழும்போது அதை ஏற்று அதற்கான ஒருமைப்பாட்டு வழியைக் கண்டுபிடித்தல் தலைவர்களின் கடமையாக இருக்கிறது.
2. கோவில் இல்லா நகரம்
கடவுள் நம்மைவிட்டுப் போய்விடுவதில்லை. அவர் காணக்கூடிய குத்துண்ட ஆட்டுக்குட்டியாக நம் முன் நிற்கிறார். ஆக, சிதைக்கப்படும், ஒடுக்கப்படும் மனிதத்திலும் அவர் இருக்கிறார். நம் வெறுமை உணர்வை நாம் ஏற்றுக்கொள்ளும்போது அதை எதிர்ப்பதற்கான வல்லமை நமக்குப் பிறக்கிறது. ஆக, குத்துண்டு கிடக்கும் ஆட்டுக்குட்டியே வெற்றி பெறும். கோவில் இல்லா நகரமே ஒளி பெறும்.
3. நாங்கள் அவருடன் குடிகொள்வோம்!
நம் வெறுமை நீங்க வேண்டுமெனில் அவர் குடிகொள்ள நாம் இடம் தர வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும். வார்த்தைகள் கேட்க முதலில் நம் உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியை நாம் அடையும்போது அமைதியைப் பெற்றுவிடுகிறோம்
இறுதியாக,
நம் தனிநபர், குடும்பம், சமூகம் என்னும் தளங்களில் நாம் உணரும் அநாதை உணர்வை அமைதி உணர்வாக மாற்றும் ஆற்றல் இறைவனிடம் உண்டு. தூரமாகத் தெரியும் நேரத்தில்தான் அவர் நம் அருகில் இருக்கிறார். யூதா, சீலா என்னும் காணக்கூடிய தூதர்கள் வடிவிலும், தூய ஆவியார் என்னும் காண இயலாத வடிவிலும் அவர் இன்றும் வருகிறார் நம் வெறுமையை நிரப்ப!
பாஸ்கா காலத்தின் 6 ம் ஞாயிறு.ஆரம்பமே கொஞ்சம் புருவங்களைத் தூக்க வைக்கிறது. மனிதமனத்தின் 12ஆர்க்கிடைப்பகளைச் சுருக்கி உள்ளுறை உணர்வுகளாக….நம்முள் உறையும் உணர்வுகளாக்க் கையாளப்படுகிறது.ஒரு மனிதனை அடுத்த சகமனிதனோடு இணைத்து வைப்பதும் இந்த உள்ளுணர்வுகளே!
ReplyDeleteகிறிஸ்தவர்களாக மாற ஒருவர் யூதராகிப் பின் விருத்தசேதனமும் செய்வது அவசியம் என்றிருந்த காலத்தில் திருத்தூதர்கள் இதை எதிர்க்கின்றனர். “நாம் சுமக்க இயலாத சுமையை இவர்கள் மேல் சுமத்த வேண்டாமெனப்” பேதுருவும்,,, “இன்றியமையாததைத் தவிர வேறொன்றும் தேவையில்லை” என யாக்கோபுவும் சொல்ல,ஒருவர் கிறிஸ்துவராக மாற விருத்தசேதனம் தேவையில்லை என முடிவெடுக்கப்படுகிறது.பலர் பலவிதப்பேச்சுக்களால் மக்களைக் கலக்கமுறச் செய்ய, யாக்கோபு தன் பேச்சுக்களால் அவர்களின் கலக்கம் போக்கி “ நல்லா இருங்க!” எனும் வாழ்த்தலின் மூலம் இழந்த அமைதியைத் திரும்பக் கொண்டுவருவதாகக் கூறும் திருப்பணி நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம்…
புதிய வானகம்..புதிய வையகம் என்றவை மாறி “ புதிய எருசலேம் பற்றிச்சொல்லும் இரண்டாம் வாசகம்.இங்கே கோவிலோ…நிலாவோ..கதிரவனோ இல்லை எனும் வெறுமையைப்போக்கி “ “எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும்,ஆட்டுக்குட்டியுமே ஒளிதருபவர்கள்” என முன் வைக்கப்படுகிறது.வெறுமை நீக்கி ஒளியையும், நிறைவையும, தருகிறார் இயேசு எனும் இரண்டாம் வாசகம்….
அமைதியின் முழுமை கூறும் நற்செய்தி வாசகம்…..உலகம் தரும் அமைதி போன்றதல்ல…தந்தை- மகன்- தூய ஆவியாரின் ஒன்றிப்பு நம் உள்ளத்தில் குடிகொள்கையில் ஏற்படும் சலனமற்ற…சஞ்சலமற்ற அமைதி. யாராலும் அழிக்க முடியாதது..நம்மிடமிருந்து பிரிக்க முடியாதது எனக்கூறுகிறார் யோவான்!
இன்றையச் வாசகங்களின் பின்னனியில் வாழ்க்கைப்பாடமாக நான் பார்ப்பது… என்றேனும் நமக்கென்று அதிகாரம் நம் கையில் கொடுக்கப்பட்ட சமயங்களில் இன்றியமையாததைத்தவிர வேறு எந்த சுமையையும் நம் கீழ் இருப்பவர்களின் மேல் ஏற்றாமல் இருப்பதும்…யாரேனும் தங்கள் துயர் அகற்ற நம்மிடம் வருகையில் “ நல்லாயிருங்க” என்று அவர்களை வாழ்த்துவதும்…வாழ்வில் அந்தகாரம் நம்மைச் சூழ்ந்து வெறுமையே நம்மை நிரப்புகையில் தந்தை- மகன்- தூயாவியாரின் துணை கொண்டு நிரப்பி அதில் மகிழ்வுறுவதுமே!
தந்தையின் இறுதி வரிகள்….நம் தனிமை உணர்வை அனாதை உணர்வாக மாற்றாமல்… இறைவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தூரம் நெடுந்தூரமாகத்தெரியும் தருணங்களில் அவர் நம் அருகில்..நமக்குள்ளே உறைகிறார் என நம்புவதும், காணக்கூடிய நம் அயலான வடிவிலும்..காணமுடியாத தூய ஆவியாரின் துணையிலும் அவர் நம் தனிமை போக்கி தன்னையே நமக்குள் இணைக்கிறார் என நம்புவதுமே!. அழகானதொரு….நம்மில் நிறைந்துள்ள சலனம் போக்கும்…சஞ்சலம் போக்கும் வழிகளைச் சொல்லும் கருத்துக்களுக்காகத் தந்தைக,கு நன்றியும்….ஞாயிறு வணக்கங்களும்!!!