இரு உணர்வுகள்
தொடக்கத் திருஅவை உறுப்பினர்கள் வாழ்வில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளின் பின்புலத்தில் இரு உணர்வுகள் ததும்பி வழிகின்றன.
திருத்தொண்டர் ஸ்தேவான் கொல்லப்படுகின்றார். எருசலேம் திருஅவை பெரும் துன்பத்திற்குள்ளாகிறது. மக்கள் புலம்பி அழுகிறார்கள்.
எருசலேமை விட்டுச் சிதறிச் சென்றவர்கள் நற்செய்தி அறிவிக்க, அனைவரையும் பெருமகிழ்ச்சி ஆள்கொள்கிறது.
துன்பங்கள் நம்பிக்கையாளர்களை ஒரே இடத்தில் பூட்டிவிடவில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டவுடன் நூறு கதவுகள் திறக்கின்றன. ஒரு வேளை நம்பிக்கையாளர்கள் சிதறடிக்கப்படாவிட்டால் கிறிஸ்தவ நம்பிக்கை எருசலேமுக்குள்ளேயே தங்கியிருந்திருக்கலாம்.
நற்செய்தி வாசகத்தில் (யோவா 6:35-40), தன் திருவுளமும் இறைத்திருவுளமும் இணைந்து செல்வதாக முன்மொழிகின்றார் இயேசு. இவ்வாறாக, இறைத்திருவுளம் நிறைவேற்ற மக்களை அழைக்கின்றார்.
கிறிஸ்தவ நம்பிக்கை அல்லது கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கை என்னில் எந்த மாற்றத்தை இன்று உருவாக்குகிறது?
இறைத்திருவுளம் நிறைவேற்ற நான் எப்படி முயற்சி செய்கிறேன்?
வாழ்வின் போக்கு நம்மை அழைத்துச்செல்லும் பாதையைக் கண்களை அகலத்திறந்து பார்த்தால் எல்லா விஷயங்களுமே…எல்லா உணர்வுகளுமே ஒருமைக்கு மேலே தான் உள்ளது. இதுவா இல்லை அதுவா என்ற கேள்வி எழாமல் ஒரு காரியம் உருப்பெறுவதில்லை.அதில் சில விஷயங்கள் நம்மைத் துன்பத்திற்கு இட்டுச்சென்றாலும், அதன் முடிவு ஒரு கதவு பூட்டப்பட்ட இடத்தில் பல கதவுகள் திறக்க வழிசெய்கிறது. இதுதான் நடக்கிறது ஸ்தேவான் கொல்லப்படுகிற விஷயத்தில்.ஒரு இடத்திலிருந்து சிதறிய விதைகள் வேறு இடத்தில் செழிப்பாக வளர்வது போல் எருசலேமை விட்டு சிதறிச் சென்றவர்கள் அறிவித்த நற்செய்தி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.கிறிஸ்தவ நம்பிக்கையும் பரவுகிறது.
ReplyDeleteகூடவே ஒரு கேள்வியை முன்வைக்கும் நற்செய்தி. என் எண்ணங்கள் இறைத்திருவுளத்தோடு இணையும்போது மட்டுமே அது பலனுள்ளதாக மாறுகிறது எனில்,நாம் இணைய விடுகிறோமா?இது அவ்வளவு எளிதல்ல. எப்படித்தெரிந்து கொள்வது என் எண்ணங்கள் இறைத்திருவுளத்தோடு இணைந்து செல்கிறதா என்று. சில விஷயங்களை விளக்கிச்சொல்வதை விட வாழ்ந்து பார்ப்பதே அனுபவம்.அந்த அனுபவம் பெற நம்மைத் தூண்டிவிடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!