Thursday, May 5, 2022

ஆண்டவரே நீர் யார்?

இன்றைய (6 மே 2022) முதல் வாசகம் (திப 9:1-20)

ஆண்டவரே நீர் யார்?

ஸ்தேவான் கல்லெறியப்படும்போது துணிகளைச் சேகரித்துக் காவல் காத்துக்கொண்டிருந்த சவுல், ஒவ்வொரு இல்லமாகச் சென்று புதிய நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்படும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இவ்வாசகப் பகுதியில் வரும் சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) 'உனக்குச் சொல்லப்படும்!'

'நீ நகருக்குள் செல். நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்' என்று சவுலை நோக்கி ஆண்டவர் சொல்கின்றார். அல்லது இப்படியாக ஆண்டவரின் குரல் சவுலின் செவிகளில் விழுகின்றது. இங்கு ஓர் ஆச்சர்யமான முரண் இருக்கிறது. தனக்கென ஓர் இலக்கு வைத்துக்கொண்டு, தன் பணியினைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, தன் பணிக்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு புறப்பட்ட சவுலின் பயணம் தடைபடுகிறது. அவர் தனக்கென வைத்திருந்த திட்டம் எதுவும் இனி செல்லாது. அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குச் சொல்லப்படுமே தவிர, அவராக இனி எதுவும் செய்ய இயலாது. 'ஒருவருக்குச் சொல்லப்படும்' என்பது படைப்பிரிவினரின் வார்த்தை. படைப்பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கென்று எந்தவொரு திட்டமும் வைத்துச் செயல்பட இயலாது. தங்கள் தலைவரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களுடைய பணி. ஆக, தனக்குத் தானே தலைவராக இருந்து செயல்பட்ட சவுலைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவராகிய இயேசு, இதுமுதல் சவுலின் தலைவராக மாறுகின்றார். இனி எல்லாமே அவருக்குச் சொல்லப்படும்.

(ஆ) 'நான் தேர்ந்தெடுத்துள்ள கருவி'

இங்கே பவுலின் நோக்கு வாக்கியத்தை மிக அழகாக எழுதுகின்றார் லூக்கா: 'அவர் (சவுல்) பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார்.' ஆண்டவருடைய கைகளில் உள்ள ஒரு கருவி சவுல். கருவியைப் பயன்படுத்துபவரைப் பொருத்தே கருவி மதிப்பு பெறுகின்றது. கருவி ஒருபோதும் தன் திட்டப்படி செயல்பட இயலாது. தான் யார் கையில் இருக்கிறோமோ அவருக்கு மட்டுமே அது முழுமையான சொந்தமாக இருப்பதால், அவரின் திட்டத்தை மட்டுமே கருவி செயல்படுத்தும். 

(இ) 'உடனடியாக பறைசாற்றத் தொடங்கினார்'

புதிய பார்வை பெறுகின்ற சவுல், உணவு உண்டு வலிமை பெற்றபின் சீடர்களோடு தங்கியிருக்கின்றார். பின் இயேசுவே இறைமகன் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். சவுல் தன் போதனையைத் தொடங்கியபோது நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும். அவருடைய பழைய காலத்தைச் சுட்டிக்காட்டி, பலர் அவரைப் பற்றி இடறல்பட்டிருப்பார்கள். அவர் நற்செய்தி அறிவிப்பது போல நடித்து மக்களை ஈர்த்து துன்புறுத்துவாரோ? என்ற கலக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், பவுல் அதைப் பொருட்படுத்தவே இல்லை. 'உன் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் உன் இறந்தகாலத்தை எடுத்து உன்னைக் கறைப்படுத்த நினைப்பார்கள்' என்பது மாரியோ புட்ஸோவின் வரி. தன்னைப் பற்றிய கறை எளிதில் அழிக்க இயலாததாக இருந்தாலும், பவுல் துணிந்து நற்செய்தி அறிவிக்கின்றார். அவர் பெற்ற அனுபவத்தை யாரும் கறைப்படுத்த இயலாது.

இன்று பாதை மாற்றம் நம் வாழ்விலும் வருகிறது.

'பாதை மாறுவதே பயணம்' என்ற எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்தல் நலம்.


1 comment:

  1. Philomena Arockiasamy5/05/2022

    சவுல் பவுலாக மாறிய நிகழ்வையொட்டி வரும் அவரைக் குறித்த வார்த்தைகள்! ஊரறிந்த ஒரு கொடுமைக்கார சவுல், ஊரே வியக்கும் பவுலாகிறார்.தமஸ்கு நகர் செல்லும் சவுலை இடைமறித்த கடவுள் அவருக்குச் சொல்லும் வார்த்தைகள் நம் பார்வைக்கு எடுத்துவைக்கப்படுகின்றன.
    தானே தனக்கு ராஜா என்ற முறையில் செயல்பட்ட சவுல் இனி இறைவனால் தனக்குப் பணிக்கப்பட்டதை மட்டுமே செய்ய வேண்டும்.ஏனெனில் அவரைத்தடுத்தாட்கொண்ட இயேசுவே இனி அவருடைய தலைவர்.
    இறைவனின் கருவியாக மாற்றப்பட்ட சவுல் இனி தன் கரங்களைப்பற்றிக்கொண்டிருப்பவரின் திட்டத்தை மட்டுமே செயல்படுத்தலவேண்டும்.
    புதிய மாற்றம் பெற்ற சவுல் தன் மேல் கறைபடுத்துபவர்கள்…கல்லெறிபவர்களையும் தாண்டி “ இயேசுவே இறைமகன்” என்று போதிக்கிறார்.
    சந்தடி சாக்கில் தந்தை தன் விருதுவாக்கான( சரியான வார்த்தையா தெரியவில்லை) பாதை மாறுவதே பயணம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்தல் நலம் என்கிறார் தந்தை.ஆம்! அது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையிலிருந்து அழகிய தார் சாலைக்கு வரும் சவுலின் பயணமாக இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டியது இரட்டிப்பு சரியே!
    நாம் சவுல்களாக இருக்கும் நேரங்களில் நம்மில் உறையும் பவுலை இனம் கண்டு தட்டி எழுப்ப வழி சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete