Sunday, May 8, 2022

நானே வாயில்

இன்றைய (9 மே 2022) நற்செய்தி (யோவா 10:1-10)

நானே வாயில்

இருத்தியல் மெய்யியல் அல்லது காணியல் மெய்யியலில் முதன்மையான நபராகக் கருதப்படுகின்ற மார்ட்டின் ஹைடெக்கர் என்னும் ஜெர்மானிய மெய்யியலாளர் 'வாயில்' அல்லது 'கதவு' பற்றி இப்படி எழுதுகின்றார்: 'வாயில் அல்லது கதவு என்பது ஒரு வீடு அல்லது கட்டடத்தில் உள்ள துவாரம் அல்லது ஓட்டை அல்ல. மாறாக, உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் சாத்தியமாக்குகின்ற வாய்ப்பு. நாம் நம் வாழ்வில் நிறைய வாயில்களைக் கடந்து வருகின்றோம். நம் வீடு, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பணியிடம், கடை, நண்பர்களின் வீடு என நிறைய வாயில்களைக் கடக்கின்றோம். நாம் நுழைகின்ற ஒவ்வொரு வாயிலும் அல்லது கதவும் நம் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.' 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆட்டுக்கொட்டிலுக்கு நானே வாயில்' என்கிறார் இயேசு. பாலஸ்தீன நாட்டில் ஆடுகள் மந்தையாக அடைக்கப்படும்போது வாயிலுக்குக் குறுக்காக ஆயன் படுத்துக்கொள்வது வழக்கம். ஆடுகள் மந்தையை விட்டு வெளியேறினால் ஆயன் எளிதாக அறிந்துகொள்வார். மேலும், எதிரியின் வருகையையும் அவர் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவார். 

'நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தேன்' என்று தன் வாழ்வின் இலக்கு வாக்கியத்தை முன்வைக்கின்றார் இயேசு. தன் வாழ்வில் தான் கற்பித்த உவமைகள், மற்றும் நிகழ்த்திய அறிகுறிகள் அனைத்திலும் நிறைவான வாழ்வே முதன்மையாக இருந்தது. 

இயேசு என்னும் வாயில் வழியாக நுழைவது என்றால் என்ன?

அவர் நம்மேல் உரிமை பாராட்டுமாறு அவரிடம் சரணாகதி அடைவது.

1 comment:

  1. Philomena Arockiasamy5/08/2022

    இன்றைய ‘நல்லாயனின்’ பெருமை நாளையும் தொடர்கிறது.ஒரு இல்லத்திற்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.ஆனால் வாயில் இல்லாத வீடு இருக்க வாய்ப்பில்லை. ஒரு மரமோ, இரும்போ,செங்கல்லோ இருக்க வேண்டிய இடத்தில் “ஆட்டுக்கொட்டிலுக்கு நானே வாயில்” என்று இயேசு சொல்வது,ஒரு ஆயனுக்குத் தன் ஆடுகள் மேலுள்ள நேசத்தையும்…அவற்றை எந்தத்
    தீங்கும் தீண்டக்கூடாது என்ற அவரின் பாதுகாப்பு உணர்வையும் காட்டுகிறது.தன் ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டு..அதிலும் நிறைவாகப்பெறும் பொருட்டு வந்தேன் வந்தேன் என்று சொல்கிறார் இயேசு.அப்படியெனில் இவரின் கனவான ‘நிறைவான வாழ்வு’ நம்மில் நிறைவேறியுள்ளதா? யோசிப்போம்.அவரின் கனவு நிறைவேற நம்மை நாமே வாயில் வழியே நெடுஞ்சாண்கிடையாக வளைத்து அவரிடம் சரணாகதியடைவோம். “வாயிலுக்கும் ஒரு பெருமையுண்டு.” பெருமை கூறும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete