Monday, May 23, 2022

சிறைக் கதவுகள்

இன்றைய (24 மே 2022) முதல் வாசகம் (திப 16:22-34)

சிறைக் கதவுகள்

இன்றைய முதல் வாசகம் பவுல் மற்றும் சீலாவின் 'பேராண்மை' பற்றிச் சொல்கிறது. 'பேராண்மை' என்றால் என்ன? திருக்குறளில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் திருவள்ளுவர், 'பிறன்மனை நோக்கா பேராண்மை' என்கிறார். ஆண்மையில் பெரிய ஆண்மை பிறன்மனைவியை நோக்காமல் இருப்பது என அப்படியே பொருள்கொள்ளலாம். ஆனால், 'சிறுமைத்தனம்' அல்லது 'சின்னப்பிள்ளைத்தனம்' என்னும் சொற்களுக்கு எதிர்பதமாக 'பெருந்தன்மையே பேராண்மை' என்றும் எடுத்துக்கொள்ளலாம். இவ்விறுதிப் பொருளையே நாம் எடுத்துக்கொள்வோம்.

பிலிப்பி நகர மக்கள் திரண்டெழுந்து பவுலையும் சீலாவையும் தாக்குகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன்? பிலிப்பு நகரத் திருச்சபைக்குப் பவுல் எழுதிய மடலை ஆசிரியர்கள் 'அன்பின் மடல்' என்கிறார்கள். ஏனெனில், இந்த மடலில்தான் பவுல் மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். 'என் அன்பர்களே,' 'என் சகோதர, சகோதரிகளே,' 'என் வாஞ்சைக்குரியவர்களே,' 'நீங்களே என் மகிழ்ச்சி,' 'நீங்களே என் வெற்றிவாகை' என்று அவர்களை உச்சி முகர்கிறார். இந்த மக்களில் சிலர்தாம் பவுலையும் சீலாவையும் சிறையில் அடைக்கின்றனர்.

மக்களால் அடிப்பட்டு, உட்சிறையில் (மிகவும் பாதுகாப்பானது) தள்ளப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்டுக் கிடந்த பவுலும் சீலாவும் நள்ளிரவில் கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றனர். சிறையின் இருளிலும், குளிரிலும், தனிமையிலும் இவர்களால் எப்படிப் பாட முடிந்தது? மற்றக் கைதிகள் இவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, இவர்கள் இரவிலும் இருளிலும் பாடல்கள் பாடி மற்ற கைதிகளுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த நேரத்தில் தான் அந்த அற்புதம் நிகழ்கிறது. பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சிறைக் கதவுகள் திறக்கின்றன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுகின்றன. சிறைக் காவலர் பதறி அடித்து ஓடி வருகிறார். கதவுகள் திறந்திருப்பதால் கைதிகள் தப்பித்திருக்கலாம் என எண்ணுகின்ற அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். கைதிகளைத் தப்பவிட்டதால் இவருக்குக் கொலை தண்டனை கிடைக்கும் என்பதால், இவரே அத்தண்டனையைத் தனக்குக் கொடுத்துக்கொள்கிறார். 

ஆனால், பவுலோ, 'நீர் உமக்கு தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர். நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்' என்கிறார். காவலர் ஓடி வந்து பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுகிறார். 'பெரியோரே நாங்கள் மீட்படைய என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார். தற்கொலைக்காக வாளை எடுத்தவரின் வாழ்வு டக்கென்று மாறிப்போகின்றது.

பின் அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர்.

இரண்டு விடயங்கள்:

ஒன்று, நாம் பவுலைப் போல பேராண்மையோடு இருக்க வேண்டும். தப்பிச் செல்வதற்கான, தவறு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும், அற்புதம் நடந்தும் தனது பேராண்மையில் உறுதியாக இருக்கிறார் பவுல். இதுவே மேன்மக்களின் அடையாளம். இவர்கள் தங்கள் வாழ்வை தங்கள் கைகளில் எடுத்து வாழ்பவர்கள். தங்கள் வாழ்வை தாங்களே மேலாண்மை செய்பவர்கள். வெளியிலிருந்து வரும் நபரோ, செயலோ, நிகழ்வோ இவர்களின் செயலை மாற்றிவிட முடியாது. இவர்கள் மனஉறுதி கொண்டவர்கள். இப்படிப்பட்ட பேராண்மை இருந்தது என்றால் நாம் நம் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்திலும் உறுதியாக, கலக்கமின்றி இருக்க முடியும்.

இரண்டு, நாம் சிறைக்காவலரைப் போல இருக்கக் கூடாது. ஏன்? 'கைதிகள் தப்பித்திருப்பார்கள்' என்று எண்ணி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அதாவது, பிரச்சினை என்ன என்று தெரியாமலேயே நாம் தீர்ப்பிடக் கூடாது. 'ஐயோ! எல்லாம் முடிஞ்சுடுச்சு! இனி ஒன்றுமே இல்லை!' என்று நாமே முடிவுகட்டிவிடக் கூடாது. விளக்கை எற்றி, இருள் அகற்றி என்ன, எது என்ற பொறுiமாயகப் பார்க்க வேண்டும். அவசரபுத்தியினால் தன் வாழ்வை இழக்கும் நிலைக்குப் போய்விடுகிறார் காவலர். வாலைப் பார்த்தவுடன், 'பாம்பு, பாம்பு' எனக் கத்தக் கூடாது. அது பாம்பாக இருக்கலாம். பாம்புராணியாக இருக்கலாம். ஏதோ, சிறிய பிளாஸ்டிக் அல்லது நைலான் கயிறாகக் கூட இருக்கலாம்.

அவசர புத்தி, உடனடி விமர்சனம், உடனடி முடிவு அனைத்தும்  பேராண்மைக்குச் செல்ல விடாமல் நம்மை மூடி வைத்திருக்கும் சிறைக்கதவுகளே.

பவுலின் பேராண்மை பெற்று, காவலரின் அவசரபுத்தி அகற்றி வாழ்தல் நலம்.


1 comment:

  1. Philomena Arockiasamy5/24/2022

    “பேராண்மை!”….. பொதுவாக இது மெத்தப் படித்தவர்களோடு கைகோர்த்து செல்லும் வார்த்தை. ஆனால் தன் சொல்லில் உண்மையும்…செயலில் உறுதியும் கொண்ட யாரோடும் கூட பொருந் தக் கூடியது. நேற்றுவரைத் தன் அன்பிற்கும்,வாஞ்சைக்கும் உரிமையாய் நின்ற மக்களே இன்று பவுலையும்,சீலாவையும் நையப்புடைத்து சிறைக்காவலில் வைக்க, அவர்கள் அங்கும் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இறைவனின் திருக்கரம் ஒரு நிலநடுக்கம் வழியே வந்தும்..தப்பிச்செல்ல வழி இருந்தும் அங்கேயே வாளாதிருக்கின்ளனர். இவர்களைத் தப்பவிட்ட குற்றத்திற்காக வரப்போகும் தண்டனைக்குப் பயந்து தன்னையே வாளால் மாய்த்துக்கொள்ளப்பார்க்கும் சிறைக் காவலனின் வாழ்வையே திருப்பிப்போடுகின்றனர்.
    இங்கே வாழ்வோ..சாவோ கையில் எடுத்த ஒரு காரியத்தை அதன் பின் விளைவுகளைப் பாராமல் கச்சிதமாகச் செய்து முடிக்கும் அடையாளத்திற்குரியவர்கள் இந்த சவுலும்..சீலாவும்.
    நடந்தது என்னவென்றே ஆராயாமல் தங்களை மாய்த்துக்கொள்ளத் துடிக்கும் அவசர புத்திக்குரியவர்கள் காவலாளிகள்.
    நம் மனமென்னும் சிறைச்சாலைக்குள்ளே இருப்பவர்களுக்கும் சரி… வெளியேயிருந்து விமர்சனம் செய்பவர்களுக்கும் சரி தங்கள் செயலில் தாங்கள் ஈடுபடுமுன் கொஞ்சம் நிதானமும், பொறுமையும் தேவை! அதுவே பேராண்மை!
    நாளும் நடக்க க் கூடிய நம் மனப் போராட்டங்களில் நம்மைக் கரம்பிடித்து நடத்திச்செல்லக்கூடியது இந்த “பேராண்மை” எனும் கைத்தடி, என்றதொரு செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete