கட்டளைகளைக் கடைப்பிடித்தல்
இயேசுவின் பிரியாவிடை உரையில் பல கருத்துகள் திரும்பத் திரும்ப வருகின்றன. சில விடயங்களின் பொருள் நமக்கு நேரிடையாக விளங்குவதில்லை. அன்புக் கட்டளை கொடுக்கின்ற இயேசு, தொடர்ந்து அதைப் பற்றியே பேசுகின்றார்.
'நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்' என்று சொல்கின்ற இயேசு தன் சீடர்களுக்கு அன்புக் கட்டளை வழங்குகின்றார். ஆனால், தொடர்ந்து, 'என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்' எனப் போதிக்கிறார். 'கட்டளைகள்' என இயேசு பன்மையில் குறிப்பிடுவது எது? மேலும், 'நான் உங்கள்மீது அன்பு கூர்வது போல நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கூருங்கள்' எனச் சொல்கின்ற இயேசு, இங்கே, 'என் மீது அவர் அன்புகூர்ந்துள்ளார்' என அன்பின் திசையைத் தன் பக்கம் திருப்புகின்றார். பின்னர் தொடர்ந்து, 'அன்பு செய்யும் ஒருவரே நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்' என மொழிகின்றார்.
அன்பு, கட்டளை, வார்த்தை, கீழ்ப்படிதல், கடைப்பிடித்தல் என நகரும் இந்த நற்செய்தி வாசகப் பகுதியை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
'கட்டளைகள்' என்பதை 'வார்த்தைகள்' என எடுத்துக்கொள்வோம்.
இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த வாசகப் பகுதி:
ஒன்று, இதன் வழியாக நாம் கடவுளை அன்புகூர்கிறோம்.
இரண்டு, கடவுள் நம்மில் வந்து தங்கும் அளவுக்கு நம்மைத் தயாராக்குகிறோம்.
மூன்று, தூய ஆவியாரை உள்ளத்தில் பெறும் நாம் அவரால் கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.
இயேசுவின் விண்ணேற்றத் திருவிழா நெருங்கி வருகின்ற வேளையில், வாசகங்கள் அதற்கான தயாரிப்புக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்பதை மனத்தில் கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (திப 14:5-18) லிஸ்திராவில் கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு நலம் தருகின்ற பவுல் மற்றும் பர்னபாவைக் காண்கின்ற மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, அவர்களுக்குப் பலியிட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுடைய புரிதலைத் திருத்துகின்ற பவுல், 'பயனற்ற பொருள்களை விட்டுவிட்டுக் கடவுளிடம் திரும்புங்கள்' என அறிவுறுத்துகின்றார்.
கொஞ்ச நேரம் நாம் அமர்ந்து யோசித்துப் பார்த்தால், கடவுளிடம் திரும்புவதைத் தவிர மற்ற அனைத்துமே பயனற்றவை என்றே தோன்றுகின்றது.
இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள நம் மண்ணின் தலைமகன் தேவசகாயம், கடவுளிடம் திரும்புவது ஒன்றே தேவை என உணர்ந்தவர். பயனற்றவற்றை அடையாளம் காணவும், அவற்றை விட்டுவிடவும் நிறையத் துணிவும் மனத்திடமும் விடாமுயற்சியும் தேவை. இவற்றை நம் புனிதர் நமக்குக் கற்றுத் தருவாராக!
கால் ஊனமுற்றிருந்த ஒருவன் தனக்கு நலம் தந்த பவுல் மற்றும் பர்னபாவைத் தெய்வங்களாக்குகிறான். இதை வைத்து அவர்கள் தங்களைப்பற்றி மேட்டிமையாக நினைக்கவில்லை என்பது மட்டுமின்றி, அவன் தவறையும் சுட்டிக்காட்டுகின்றனர்.தாங்கள் பயன்ற்ற பொருட்கள் தான் எனும் அளவிற்குத் தங்களைத் தாழ்த்திக்கொள்வது மட்டுமின்றி கடவுளை நோக்கி அவரைத்திரும்புமாறு பணிக்கின்றனர். இன்று கடவுள் என்னைப்பார்க்க வந்தாலும் கூட என்னைப்பார்த்து “என்னிடம் திரும்பி வா மகளே!” என்று தான் சொல்வார். அவர் நம்மை அன்பு கூர்வது போல் நாம் பிறரிடம் அன்பு கூர்வதும்….இன்றைய புனிதர் தேவசகாயம் பிள்ளையைப்போன்று பயன்ற்றவற்றை அடையாளம் கண்டு, கடவுள் மட்டுமே நிலையானவர் என்றுணர்ந்து, அவரிடம் சரணாகதி அடையவும் இறைவன் நமக்குத் துணை நிற்பாராக! பிறரன்பு மற்றும் இறையன்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு பதிவிற்காகத் தந்தைக,கு நன்றிகள்!!!
ReplyDelete