I. திருத்தூதர் பணிகள் 14:21-27 II. திருவெளிப்பாடு 21:1-5 III. யோவான் 13:31-35
நிறைவேற்றுதல்!
'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், 'கேட்ச் 22 கட்டம்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த அருள்பணியாளர் ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில் ஒரு மறையுரை கேட்டேன். மறையுரை வைத்த அருள்பணியாளர் புதிய அருள்பணியாளருக்கு அறிவுரை சொல்வது போல தன் மறையுரையைக் கட்டமைத்திருந்தார்: 'அன்பிற்கினிய அருள்பணியாளரே, வாழ்த்துக்கள். புதிய ஆடை, புதிய திருவுடை, புதிய திருப்பலிப் பாத்திரம், புதிய புத்தகம், புதிய கைக்கடிகாரம், புதிய காலணிகள் என்று ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்க இன்று எங்க போனாலும் உங்களுக்கு பொன்னாடை போர்த்துவாங்க! உங்க உள்ளங் கைகளை முத்தமிடுவார்கள். உங்களைக் கட்டித் தழுவுவார்கள். உங்கள் கைகளை அன்பளிப்புக்களால் நிரப்புவார்கள். உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பார்கள். 'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டு பரிமாறுவர். இது வெறும் 21 நாள்களுக்குத்தான். 22ஆம் நாள் வரும். நீங்க பழசு ஆயிடுவீங்க. அன்றுதான் உங்க அருள்பணி வாழ்க்கை தொடங்கும். 'இதுதான் வாழ்க்கையா' என்று புலம்ப ஆரம்பிப்பீங்க. 25 வருடங்களுக்கு உங்க பக்கத்துல யாரும் வர மாட்டாங்க. இதே கூட்டம் உங்களுடைய வெள்ளி விழாவுக்கு வரும். 'உங்கள ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க!' கூட்டம் மறுபடி காணாமல் போகும். காலம் அனுமதித்தால் பொன்விழா கொண்டாடுவீர்கள். நீங்க இன்று எப்படி உங்க பணியைத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, அந்த 22ஆம் நாளில் நீங்க என்ன முடிவெடுத்து எப்படி உங்க பயணத்தை முடிக்கப் போறீங்களோ அதுதான் முக்கியம்.'
நிற்க.
அருள்பணி நிலையில் மட்டுமல்ல. திருமண வாழ்விலும் 'கேட்ச் 22 கட்டம்' உண்டு. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உள்ள ஈர்ப்பு குறையும் நாள் 22ஆம் நாள். அந்த 22ஆம் நாளை வெல்கிறவரே வெற்றியாளர். அதையும் தாண்டி இறுதிவரை 'திராட்சை இரசத்தை வைத்திருப்பவரே' மாபெரும் வெற்றியாளர்.
அருள்பணி, திருமணம் என்று பெரிய அளவில் வாழ்க்கை நிலையைத் தொடங்கினாலும், தொழில், பயணம், படிப்பு என சிறிய அளவில் என்றாலும் தொடங்கும் பலவற்றை நாம் நிறைவுசெய்வதில்லை. ஒன்றை நாம் நிறைவு செய்வதில்தான் அதன் பயன்பாடு தெரிகிறது.
சிலவற்றின் நிறைவு வேகமாகத் தெரிந்துவிடும். சிலவற்றின் நிறைவு தெரிய காலமாகும். தாயின் கருவறையில் உருவாகும் குழந்தை நிறைவு பெற ஏறக்குறை 9 முதல் 10 மாதங்கள் ஆகின்றன. நம் வீட்டில் திடீரென ஒரு பைப் உடைந்துவிடுகிறது. உடனடியாக ப்ளம்பரை அழைக்கிறோம். அவர் வந்த சில நிமிடங்களில் உடைப்பு சரியாகிவிடுகிறது. தண்ணீர் தடையின்றி வருகிறது. அவரின் பணி ஒரு நாளின் இறுதியில் கண்டுவிடுகிறோம். காய்ச்சல் அடிக்கிறது. மருத்துவரிடம் போகிறோம். ஊசி போட்டு மாத்திரை கொடுக்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. நம் உடல்நலம் நிறைவு பெறுகிறது. ஆக, ஒரு நாளில் மருத்துவரின் வேலை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் வேலையின் நிறைவு பத்து மாதங்கள் கழித்து மாணவர்கள் எழுதும் தேர்வில் கிடைக்கிறது.
நிறைவுபெறும் எல்லாமே நமக்கு ஒரே வகையான உணர்வையும் தருவதில்லை. சிறையில் தன் தண்டனை நிறைவுபெறவதை எண்ணுகின்ற கைதி மகிழ்கிறார். ஆனால், நமக்குப் பிடித்தவர் நம்மோடு இருந்துவிட்டு நம்மை நகரும் நேரம் நிறைவுறும்போது நம் மனம் வருந்துகிறது. தொடங்கும் எல்லாம் நிறைவு பெற வேண்டும் என்பதே வாழ்வின் நியதி. நான் இந்த மறையுரையை எழுதத் தொடங்குகிறேன். அதை நிறைவு செய்யும்போதுதான் அது வாசிப்பவருக்குப் பலன் தரும். நிறைவுபெறாத எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை. சில நேரங்களில் சில நிறைவேறாததால் நாம் ஏங்குகிறோம். சில நிறைவுபெறாமல் செய்கின்றோம்.
கடவுளின் செயல் நிறைவுறுவதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதுபோல நாமும் நம் வாழ்வில் பணிகளை நிறைவேற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.
எப்படி?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:21-27) பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பயணம் நிறைவு பெறுவதை லூக்கா பதிவு செய்கின்றார். பிசிதியா அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியா, லீஸ்திராவிலிருந்தும் தொழுகைக்கூடத் தலைவர்கள் மற்றும் மக்களால் துரத்திவிடப்பட்ட திருத்தூதர்கள் தெர்பைக்கு வருகிறார்கள் ஆனால், அங்கே அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும், பல புறவனித்தார்கள் பதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை 'உறுதிப்படுத்தியபின்' தாங்கள் புறப்பட்ட இடமான (காண். திப 13:1-3) அந்தியோக்கியா திரும்புகிறார்கள். தாங்கள் எவ்வழி நடந்து வந்தார்களோ, அதே வழியில் திரும்பிச் செல்கிறார்கள். தங்கள் பாதச்சுவடுகளைத் தாங்களே பின்பற்றுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்புக்களையும் ஆபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தாலும் துணிந்து செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் ஏற்படுத்திய குழுமங்களை 'ஊக்கப்படுத்துவம், உறுதிப்படுத்துவதும் அவசியம்' என அவர்கள் அறிந்திருந்தனர். புதிய நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய செய்தி எல்லாம், 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்றே இருந்தது. புதிய நம்பிக்கையாளர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுக்கவில்லை திருத்தூதர்கள். புதிய நம்பிக்கைக்கு எதிர்ப்பு இருக்கும் என்று அவர்கள் தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள். மேலும், தாங்கள் செல்கின்ற இடங்களில் தங்கள் பணியைத் தொடர்வதற்கான அடிப்படையான தலைவர்களையும் அவர்கள் நியமித்தார்கள். அவர்கள் அந்தியோக்கியா வந்தபோது, 'பணியைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாகவும், கடவுளே தங்கள் வழியாக அனைத்தையும் செய்தார்' என்றும் அவர்களுக்குச் சொல்கிறார்கள். இவ்வாறாக, தாங்கள் நிறைவு செய்த அனைத்திலும் கடவுளின் கைவிரலைக் கண்டனர் பவுலும் பர்னபாவும்.
பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பணி நிறைவு கிறிஸ்தவம் என்னும் புதிய நம்பிக்கை வேகமாகப் பரவி வளர்வதற்கு வித்திட்டது. தாங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், திருத்தூதர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறிஸ்தவத்தின் கதவுகளைப் புறவினத்தாருக்கு திறந்துவிட்டது. அவர்களின் நிறைவு புதிய தொடக்கமானது.
ஆக, எதிர்ப்பு, நிராகரிப்பு, ஆபத்து என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து தங்கள் முதல் தூதுரைப் பயணத்தை நிறைவு செய்கின்றனர் பவுலும் பர்னபாவும்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 21:1-5) யோவான் கண்ட இறுதி வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. உலக முடிவில் கடவுள் 'நிறைவேற்றும்' செயலைக் காட்சியில் காண்கிறார் யோவான். நான்கு அடையாளங்களை இங்கே பார்க்கிறோம். முதலில், 'புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்' காண்கிறார் யோவான். 'இதோ அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்' என்று சொல்லும் கடவுள் முன்னைய விண்ணத்தையும் மண்ணகத்தையும் புதியதாக ஆக்குகின்றார். இரண்டாவதாக, 'கடல் இல்லாமல் போயிற்று.' இது கடவுள் தீமையை வெற்றிகொண்டதை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில், 'கடல்' என்பது 'தீமை அல்லது பேயின்' உருவகமாகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். கடலின் குழப்பமும், ஆழமும், அலைகளின் கூச்சலும் கடலைக் கடவுளின் எதிரி என எண்ண வைத்தது. ஆக, தீமையின் துளி கூட இல்லாவண்ணம், கடல் அங்கே இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, 'புதிய எருசலேம் இறங்கி வருகிறது.' இத்திருநகர் மணமகள் என உருவகிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், எருசேலம் கடவுளின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக இருந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு திருமண உடன்படிக்கை உறவாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தையே திருமணம் என்னும் அடையாளம் காட்டுகிறது. ஆக, இதே நெருக்கத்தோடு 'கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார்.' நான்காவதாக, 'சாவு இராது. துயரம் இராது.' இது உலகத்தின் முகத்திலிருந்தே கண்ணீர் துடைக்கப்படும் எனச் சொல்கிறது.
வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது இக்காட்சி. கடவுள் அனைத்தையும் நன்மையாக நிறைவுறச் செய்வார் என்று சொல்வதன் வழியாக, இப்போதுள்ள அனைத்தும் ஒருநாள் நிறைவு பெறும் என்றும், இப்போது காண்பதும் அனுபவிப்பதும் நிறைவு அல்ல என்றும் சொல்கிறது இக்காட்சி. மேலும், துன்புறும் அனைவரும் கடவுளோடு திருமண உறவில் இணைவர். கடவுள் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிறைவை அடைவதற்கு எதிர்நோக்கோடு காத்திருப்பது மட்டும்தான்.
ஆக, தான் செய்த படைப்பு வேலையை நிறைவு செய்யும் கடவுள் அந்த நிறைவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறார். இறைமக்கள் அனுபவிக்கும் வேதகலாபனை என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' அவர்கள் கடக்க கடவுள் அவர்களோடு உடனிருக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 13:31-35) இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாசு விருந்திலிருந்து வெளியேறியவுடன், 'இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில், 'மாட்சி பெறுதல்' அல்லது 'மாட்சிப்படுத்துதல்' என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய மாட்சியால் கடவுளும் மாட்சி பெறுகிறார் என்று சொல்வதன் வழியாக, தன்னுடைய செயல் அனைத்தும் கடவுளின் திருவுளம் மற்றும் நோக்கத்தோடு இணைந்தது என்றும் சொல்கிறார் இயேசு. கடவுளுக்கும் இயேசுவுக்கும் நெருக்கமான இந்த உறவு உலகிற்கு வாழ்வு கொடுக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசு மீட்புப்பணியை நிறைவேற்றுகிறார்.
மேலும், தான் நிறைவேற்றும் பணியை தன்னுடைய சீடர்கள் இவ்வுலகில் 'புதிய அன்புக் கட்டளை' வழியாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.' இவ்வாறாக, சீடத்துவத்தின் அடையாளமாக அன்பு செலுத்துவதை முன்வைக்கிறார் இயேசு.
ஆக, இயேசு தன்னுடைய பாடுகள் என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து மாட்சியடைகின்றார். சீடர்கள் தங்களுடைய அன்பு செலுத்துதல் வழியாக நாளும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து இயேசுவின் பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் தங்களின் முதல் தூதுரைப்பயணத்தை அனைவருக்கும் ஊக்கம் தந்து நிறைவேற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் கடவுள் தன்னுடைய படைப்பை புதிய விண்ணகம்-மண்ணகம் என நிறைவேற்றியுள்ளதால் நம்பிக்கையாளர்கள் அதை நோக்கி நகர்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் தன் மீட்புச் செயலை நிறைவேற்றும் இயேசு, அன்பால் இவ்வுலகில் அது சீடர்கள் வழியாக தொடர்ந்து நிறைவேற்றப்படவும் வேண்டும் என்கிறார். கடவுளின் நிறைவுச்செயல்கள் அனைத்திற்காகவும் நன்றி கூறும் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்), 'ஆண்டவர் தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்' (145:13) என்கிறார்.
இன்று நம்முடைய பணிகளை நாம் 'நிறைவேற்றுவதற்கு' இறைவாக்கு வழிபாடு தரும் பாடங்கள் எவை?
இந்த வாரம் நாம் பெரிய பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடப்போவதில்லை. சண்டை இடும் இரு நாடுகளைச் சேர்த்துவைக்கப்போவதில்லை. அணு ஆயுதங்களை ஒழிக்கப்போவதில்லை. ஊழல், இலஞ்சம் போன்றவற்றை துடைத்துப்போடப்போவதில்லை. நம்மை யாரும் சிலுவையில் அறையப்போவதில்லை. வேதகலாபனைக்கு உள்ளாக்குவதில்லை. கோவிலிலிருந்து வெளியே தள்ளிவிடுவதில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்கள் செய்வோம். புதிய தொழில் தொடங்குவோம். நண்பர்களைச் சந்திப்போம். மருத்துவமனைக்குச் செல்வோம். பயணம் செய்வோம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி யோசிப்போம். புதிய வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம். நம் வீட்டு நாய்க்குட்டியை குளிப்பாட்டுவோம். பூனைக்கு பால் சோறு வைப்போம். இவற்றை 'நிறைவேற்றுவதில்தான்' வாழ்வின் நிறைவு இருக்கிறது. இவற்றை எப்படி நிறைவேற்றுவது?
1. 'ஊக்குவித்தல்'
'ஊக்குவித்தல்' என்றால் உற்சாகம் கொடுத்தல். நமக்கும் பிறருக்கும். நாம் தொடங்கும் பலவற்றைப் பாதியில் நிறுத்தக் காரணம் ஊக்கக்குறைவுதான். 'என்னைக் கொஞ்சம் யாராவது ஊக்கப்படுத்தியிருந்தால் நான் சாதித்திருப்பேன்' என்ற புலம்பல்கள் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கு நானே ஊக்கம் கொடுப்பதையும், எனக்கு அடுத்திருப்பவர் தளர்ந்துபோகும்போது அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் நான் என் பண்பாகக் கொள்ள வேண்டும். 'மகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது? எப்படி பணம் கட்டுவது?' என புலம்பல் கேட்கிறோமா! 'வாங்க! நான் கூட்டிட்டுப் போறேன். யார்கிட்டயாவது பணம் கேட்போம். எப்படியாவது அடைப்போம்' என்று சொல்வதுதான் ஊக்கம். ஆக, எனக்கு நானே ஊக்கம் கொடுக்கும் போது நான் என் வேலைகளை நிறைவேற்றி, அடுத்தவருக்கு ஊக்கம் கொடுத்து அவரின் வேலை நிறைவுபெற நான் உதவுகிறேன் - பவுல், பர்னபா போல.
2. 'ஒன்றின் முடிவை நினைத்துத் தொடங்குவது'
'முடிவை அல்லது இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குங்கள்' என்கிறார் ஸ்டீபன் கோவே. வெறும் கட்டாந்தரையில் நிற்கின்ற ஒரு ஆர்கிடெக்ட் அந்த இடத்தில் கட்டாந்தரையைப் பார்ப்பதில்லை. ஒரு பெரிய அப்பார்ட்மெண்டை அல்லது மல்டி மாலை காட்சியில் பார்க்கிறார். அப்படிப் பார்ப்பதால்தான் அவரால், 'இங்கே கேட் வரும். இங்கே பார்க்கிங் வரும். இங்கே வீடுகள் வரும்' என்று அவரால் சொல்ல முடிகிறது. ஆக, கல்லூரியில் சேரும்போதே நம்முடைய கான்வொக்கேஷன் நாளை மனதில் வைத்துச் சேர வேண்டும். இதையே இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய குழுமத்திற்குச் சொல்கின்றார். புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் மனத்தில் வைத்து வாழச் சொல்கின்றார். இது வெறும் கற்பனை என்று நாம் எண்ணக் கூடாது. நாம் காட்சிப்படுத்துவதை பிரபஞ்சம் அப்படியே நமக்குக் கொடுக்கும். ஆக, இறுதியைக் காட்சிப் படுத்துதல் அவசியம். இராபின் ஷர்மா அழகான வாழ்க்கைப் பாடமாக இதைத் தருகிறார்: 'நல்ல வாழ்க்கை வாழனுமா? ரொம்ப சிம்பிள். உங்களுடைய ஃப்யூனரல் ஒரேஷன் (அடக்கத் திருப்பலி உரை) எழுதுங்கள். நான் இறக்கும்போது என்னைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதை அப்படியே பின்னோக்கி வாழுங்கள். 'இவர் நிறைய மொழிகள் கற்றார்' என்று எழுதுங்கள். மொழிகளைப் படியுங்கள். 'இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்' என்று எழுதுங்கள். நிறையப் பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.' ஆக, நிறைவை அல்லது முடிவை மனத்தில் வைத்து எதையும் தொடங்குவோம்.
3. 'எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்'
நான் நிறைவுசெய்வது எனக்கும் என் சமூகத்திற்கும் பயன்தர வேண்டும். பிறர் என்னைப் பற்றி அறிய வேண்டும். ஒருவர் வாழ்க்கையிலாவது நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார். 'நீங்கள் என் சீடர்கள்' என்பது எனக்கும் உங்களுக்குமான ஒன்று அல்ல. மாறாக, அதை மற்றவர்கள் உங்கள் அன்புச் செயலால் அறிய வேண்டும் என்கிறார். சீடத்துவத்திற்கான அடையாளமாக இயேசு மிகச் சிறிய ஒன்றைத் தெரிந்துகொள்கிறார்: 'அன்பு செய்வது.' மேலும், நாம் செய்யும் எல்லா வேலையிலும் அன்பு கலந்து செய்ய வேண்டும். இரண்டு பேர் லெமன் ஜூஸ் செய்கின்றனர். ஒரே மாதிரியான பொருள்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால். சுவை மாறுபடுகிறது. ஏன்? அன்பினால்தான்! நாம் செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்தால் நிறைவு இனிமையாகும்.
இறுதியாக,
தொடங்கியது எல்லாம் நிறைவேற வேண்டும். நிறைவேற்றுதலின் பொறுப்பு தொடங்கியவரிடமே இருக்கிறது. அருள்பணியாளர் திருநிலைப்பாட்டுச் சடங்கில், கீழ்ப்படிதல் வாக்குறுதி கொடுத்தவுடன் ஆயர், 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் சொவ்வாராக' (பிலி 1:6) என்கிறார். தொடங்குவோம். அவரின் துணையோடு அனைத்தையும் நிறைவேற்றுவோம். தொடங்கும் அனைத்தும் இனிமையாய் நிறைவுறும்!
பாஸ்கா காலத்தின் 5ம் வாரத்திற்கான மறையுரை.ஒன்றின் தொடக்கமல்ல…”அதன் முடிவே கவனிக்கத்தக்கது” எனும் கருத்தை முன்னெடுத்து வைக்கும் வாசகங்கள். அருள் பணியாளரானாலும்…திருமண உறவில் இருப்பவர்களானாலும் அந்த 22 ம் நாளை வென்று இறுதிவரை “ திராட்சை இரசத்தை” வைத்திருப்பவரே வெற்றியாளர் என்னும் கருத்து கேட்ச் 22 கட்டத்தின் புரிதலுடன் முன்வைக்கப்படுகிறது. அந்த 22 ம் நாள் வாழ்க்கை எப்படி அமைகிறதோ அதைப்பொறுத்தே வாழ்க்கையின் இறுதியும் இருக்கிறது என்ற வெளிச்சத்துடன்...
ReplyDeleteஒரு இடத்தில் தாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் என்று தெரிந்தவுடன் மாற்று இடம் நோக்கிச் செல்கிறார்கள் பவுலும்,பர்னபாவும்.அங்கே அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அங்கு புதிய தலைவர்களை ஏற்படுத்தி,இறைவார்த்தையை எடுத்துச்சொல்லி, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வருகிறார்கள். தங்கள் செயல்கள் அனைத்திலும் இறைவனின் கைவிரல்களைக்கண்டது மட்டுமின்றி,தங்களின் பணி புறவினத்தாருக்குப்புதுக்கதவுகளைத் திறந்து விட,எதிர்ப்பு,ஆபத்து,நிராகரிப்பு இவற்றின் மத்தியில் தங்களின் வேலையை இனிதே முடிக்கின்றனர் என்றுரைக்கும் திருத்தூதர் பணிகளிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம்…..
உலக முடிவில் கடவுள் தீமையை வென்று நன்மையை நிலைநாட்டுவதற்கான செயல்பாடுகள்.புதிய விண்ணகத்தையும்,மண்ணகத்தையும், தீமையின் உருவகமான கடல் அழிந்து போவதையும் காட்சியில் காணும் யோவான்….சாவு..துயரம்..கண்ணீர் இவையெல்லாம் துடைக்கப்பட்டு மக்களின் நடுவே இறைவன் ஆட்சிசெய்வார் எனக்கூறும் திருவெளிப்பாட்டு வாசகம்…..
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட 3 ம் வாசகம்…. கடைசி உணவின் போது இயேசுவைக்காட்டிக்கொடுக்கும் நோக்குடன் வெளியேறிய யூதாஸ் “ இயேசு மாட்சி பெற்றுவிட்டாரென்று” சொல்வது இறைவன் தன் மைந்தனை மாட்சிபடுத்திவிட்டாரெனும் புரிதலைத்தருகிறது.தன் செயல்களனைத்தும் இறைத்திருவுளத்தோடு இணைந்தது என்றுரைக்கும் இயேசு தன் “ அன்புக் கட்டளையையும் கொடுத்து, சீடத்துவத்தை துவக்கி வைக்கிறார்.
இன்று நம் பணிகள் தொடரப்படர இறைவாக்கு உரைப்பது என்ன?
தேவையில் இருப்பவருக்கு ஊக்கம் தந்து…அவர்களின் வேலையில் உதவி புரிந்து,அவரின் வேலை நிறைவு பெற உதவுவது…பவுல்,பர்னபா போல…
ஒரு விடயத்தின் ஆரம்பத்தைப்பாராமல் அதன் முடிவை மனத்திலிறுத்தி..கனவிலும்,நனவிலும் கொண்டு ஆரம்பிப்பது…
என் அன்புச்செயல்களால் ஒருவருடைய வாழ்க்கையிலாவது தாக்கத்தை ஏற்படுத்துவது….
“உங்களுள் இத்தகைய நற்செயல்களைத்தொடங்கியவர்,கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச்செய்வாராக!” எனும் தாரக மந்திரத்தோடு தொடங்குவோம்; ‘அவரின் அருளோடு அனைத்தும் இனிமையாகும்’ எனும் தந்தையின் வரிகள் நமக்கு உரமேற்றட்டட்டும்.
“தொடக்கம் சரியெனில் பாதி விஷயங்கள் முடிந்துவிட்டது என நம்பலாம்; ஆகவே முடிவை மனத்திலிறுத்தி எதையும் தொடங்குங்கள்” என்ற ஊக்க வரிகளைக் கொண்ட மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!