Friday, May 20, 2022

இரவில் காட்சி

இன்றைய (21 மே 2022) முதல் வாசகம் (திப 16:1-10)

இரவில் காட்சி

திருத்தூதர் பணிகள் நூலை வாசிக்கும்போதெல்லாம் தொடக்கத் திருஅவையில் இருந்த உயிரோட்டத்தை மிக எளிதாக நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று, எபேசு திருஅவையின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட திமொத்தேயு என்னும் இளவல் பவுலோடு பணியில் கைகோர்க்கின்றார். அவருடைய தாய் யூதப் பெண், தந்தையோ கிரேக்கர். இருந்தாலும், மற்ற யூதர்களை மனத்தில் கொண்டு அவருக்கு விருத்தசேதனம் செய்விக்கின்றார். இங்கே நாம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். புறவினத்தார் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என எருசலேம் வரை சென்று வாதிட்ட பவுல், இங்கே திமொத்தேயுவுக்கு ஏன் விருத்தசேதனம் செய்விக்கின்றார்? மிகவும் எளிதான பதில். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்காக பவுல் இந்த முடிவு எடுக்கின்றார். இதுதான் மனம் சார்ந்த முடிவு. பவுல் தன் பணியில் அறிவுசார்ந்த விதத்தில் மட்டுமே செயல்படவில்லை. தேவையற்ற விவாதங்களையும் சொற்போர்களையும் தவிர்ப்பதற்காக தன் உறுதிப்பாட்டோடு சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கின்றார். இதுதான் மேய்ப்புப் பணி அறிவு. பணிக்கும் பணியின் மக்களுக்கும் ஏற்றவாறு தன் திட்டங்களையும் செயல்களையும் மாற்றிக்கொள்வது.

இரண்டாவது நிகழ்வு, பவுல் காண்கின்ற காட்சி.

- பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, 'நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம் -

இந்நிகழ்வை இப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா. இதற்கு முன்னதாக, 'ஆசியாவில் (ஆசியாக் கண்டம் அல்ல!) இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே' என்றும் பதிவிடுகின்றார் லூக்கா.

திருத்தூதர்களும் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களும் தூய ஆவியாரால் முழுவதுமாக இயக்கப்படுகின்றனர். ஆவியின் செயல்பாட்டை எளிதாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றுகிறார்கள். பவுல் காட்சி கண்டாலும் அந்தக் காட்சியைக் கடவுளின் கண் கொண்டே பார்க்கின்றார். 

திருத்தூதர் பணிகள் நூலில் கடவுள் தன்னைப் பல்வேறு நிலைகளில் நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்: காட்சி, கனவு, உள்ளுணர்வு, உருவகம், மற்றவர்களின் வார்த்தைகள். கடவுள் எப்படித் தன்னை வெளிப்படுத்தினாலும் அவற்றில் கடவுளைக் காண அவர்கள் கற்றிருந்தனர். இதுதான் முக்கியம்.

இன்று இந்தப் பிரபஞ்ச உள்ளுணர்வு நம்மில் வேகமாக மறைந்து வருகின்றது. அமைதியிலும், சலனமற்ற நிலையிலும்தான் பிரபஞ்சத்தோடு நம் உள்ளுணர்வை இணைத்துக்கொள்ள முடியும். இன்று நம்மைச் சுற்றி எழும் சத்தங்கள், நம் உள்ளத்தின் பயங்கள், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவை உள்ளுணர்விலிருந்து நம்மைத் தள்ளி வைக்கின்றன. அல்லது உள்ளுணர்வை நாம் அறியாத வண்ணம் செய்துவிடுகின்றன.

கடவுள் இன்றும் நம் உள்ளுணர்வு வழியாக நம்மைத் தொடர்ந்து உந்தித் தள்ளிக்கொண்டிருக்கின்றார். அதைச் சரியாகக் கண்டுகொள்ள சலனங்கள் தவிர்க்க வேண்டும்.

பவுல் தன்னுடைய விருப்பு மற்றும் வெறுப்புகள் அனைத்தையும் கடந்தவராகவும், கடவுள் மற்றும் கடவுள் பணி மட்டுமே தன் இலக்கு என்று உணர்ந்தவராகவும் இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்லர்' என எச்சரிக்கின்றார் இயேசு.

பவுல் தன்னை ஒரு பணியாளர் என்றும், கடவுளைத் தலைவர் என்றும் எப்போதும் மனத்தில் இருத்தி, அந்த வரையறையில் உறுதியாக இருந்தார். வரையறை தெளிவானால் சலனம் குறையும். சலனம் குறைய உள்ளுணர்வு உரைக்கும்.


1 comment:

  1. Philomena Arockiasamy5/20/2022

    மேய்ப்புப் பணிக்கென்று தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான இலக்கணம் பற்றி எடுத்துரைக்கும் பதிவாகப் பார்க்கிறேன். தாங்கள் யாருக்காகப் பணி செய்ய வந்துள்ளோம் என்பதை மனத்தில் கொண்டு, மக்களைச் சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கவும்…..தங்கள் அறிவை வெளிச்சமிட்டுக் காட்டும் வாதங்களைப்புறந்தள்ளி, தேவைப்படும் இடங்களில் தங்களின் விருப்பு வெறுப்புக்களை ஓரங்கட்டி, சமரசம் செய்து கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள். இதைத் துள்ளியமாகச் செய்கிறார் பவுல்.. தனக்குச் சொல்லப்படும் விஷயங்கள் கனவிலே என்றாலும் கூட.
    இன்று நமக்கும் கூட கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் கனவுகள்..காட்சிகள்….நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வழியாக! இறைவனை இலக்காகக் கொண்டிருந்தால் மட்டுமே அவற்றைப் பார்க்க கண்களும்,கேட்க செவிகளும் திறந்திருக்கும். அவர் நமது தலைவர் என்ற உள்ளுணர்வு நம்மை எப்பொழுதும் உந்தித்தள்ளினால் மட்டுமே நம் சலனங்கள் குறைந்து, அவர் சந்நிதி மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும்.
    தேவையற்ற சொற்போர்கள் நாம் செய்ய வேண்டிய காரியங்களிலிருந்து நம்மை திசை திருப்பாது பார்த்துக் கொள்தல் அவசியம், போன்ற மனம் சார்ந்த….செயல் சார்ந்த விஷயங்களுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete