Tuesday, May 10, 2022

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய (11 மே 2022) முதல் வாசகம் (திப 12:24-13:5)

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய முதல் வாசகத்தில் சில கவனிக்கத்தக்க விடயங்கள் நடக்கின்றன:

மக்கள் நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது தூய ஆவியார், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்' என்கிறார். இச்செய்தி பவுலுக்கும் பர்னபாவுக்கும் நிறைய மகிழ்ச்சியையும் அதே வேளையில் பொறுப்புணர்வையும் தந்திருக்க வேண்டும்.

'எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது?' என்று சில நேரங்களில் நாம் கேட்போம். 'எல்லாரையும் போல நீ இருக்கக் கூடாது' என்று சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு வரையறையை இடுகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தும் வரையறை அன்று. மாறாக, நம்மை விடுதலையாக்கும் வரையறை.

இதே அனுபவத்தை இன்று பவுலும் பர்னபாவும் பெறுகிறார்கள்.

'ஒதுக்கி வைத்தல்' என்னும் சொல்லாடலை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, கழித்து ஒதுக்கி வைத்தல். எடுத்துக்காட்டாக, வெண்பொங்கல் சாப்பிடும்போது சிலர் கறிவேப்பிலை மற்றும் மிளகு போன்றவற்றை ஒதுக்கி வைப்பர். ஒன்று தனக்கு ஏற்புடையதல்ல என்று நாம் கணித்து உணவு வகைகளை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். இதை ஒத்தே சில இடங்களில், ஊரை விட்டு ஆட்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அல்லது தள்ளி வைக்கப்படுகின்றனர். நாமே சில உறவுகளை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தல் எதிர்மறையான பொருளைத் தருகிறது. இரண்டாவதான பொருள் நேர்முகமானது. அதாவது, நம் உடை, நறுமணப் பொருள், செருப்பு போன்றவற்றில் சிலவற்றை முக்கியமான நாளுக்கென ஒதுக்கி வைக்கின்றோம். நம் வீட்டில் வரும் விருந்தினர்களுக்காக என்று மதிப்புமிக்க சில பாத்திரங்களை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தலில் மதிப்பு இருக்கின்றது. இரண்டாம் வகையான ஒதுக்கி வைத்தல்தான் பர்னபா மற்றும் பவுலுக்கு இன்றைய முதல் வாசகத்தில் நடக்கிறது.

மேலும், இந்த நிகழ்வில் தூய ஆவியாரின் வார்த்தைகளைத் தொடக்கத் திருஅவையினர் கேட்பதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. தூய ஆவியார்தான் இதைச் சொன்னார் என்று அவர்களால் எப்படி உறுதியாகச் சொல்ல முடிந்தது? அதற்குக் காரணம், கடவுளோடு அவர்கள் கொண்டிருந்த இணைப்பே. 'இது தூய ஆவியுடையது, இது தீய ஆவியுடையது' என அவர்களால் தெளிவாகப் பிரித்து உய்த்துணர முடிந்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தேர்ந்து தெளிதல் என்பது அவர்களுடைய இயல்பாகவே மாறியிருந்தது.

இரண்டாவதாக, அவர்கள் உடனடியாகத் தங்கள் பணித்தளம் நோக்கிச் செல்கின்றனர். தங்களின் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதாமல், அதில் அடங்கியுள்ள பணிப் பொறுப்பையே காண்கின்றனர் பர்னபாவும் பவுலும்.

இறைவனின் ஆவியாரின் குரலை உடனடியாக நாம் அறிந்தால்,

இறைவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை நாம் உணர்ந்து அதற்கேற்றாற் போல வாழ்ந்தால்,

நம் பணிப் பொறுப்பை உடனடியாக உணர்ந்து புறப்பட்டால் எத்துணை நலம்!

1 comment:

  1. Philomena Arockiasamy5/10/2022

    “ எல்லோரையும் போல் நான் ஏன் இருக்கக் கூடாது?” எல்லோரையும் போல இருப்பதற்கும்( ஊரோடு ஒத்து வாழ்) சரி, இல்லை அடுத்தவரிலிருந்து வேறு பட்டு வாழ்வதற்கும் சரி… சமய சந்தர்ப்பம் போல் இரண்டிற்குமே அழைப்பு விடுக்கிறது வாழ்க்கை. இரண்டிற்கும் தயாராயிருப்பவரே வெற்றி பெறுவர். சவுலுக்காகவும்..பர்னபாவுக்காகவும் நோன்பிருந்து மன்றாடிய மக்களின் மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். இதனாலேயேதான் அவர்களால் தூய ஆவியின் கட்டளையைத் துய்த்து உணரமுடிந்தது.இதற்கேற்றாற்போலவே பர்னபாவும்,சவுலும் தங்களின் நிலையறிந்து பெருமைகொள்ளாமல் அதில் உள்ள பொறுப்பை உணர்கின்றனர் என்கிறது இன்றைய வாசகம். நாம் பொறுப்புக்குள்ளாக்கப்படுகையில்…நாமும் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கையில்…..அது சுமுகமான பாதையில் செல்கையில் கண்டிப்பாக ஆவியாரின் விருப்பத்திற்கேற்பவே நம்மைக்குறித்த எல்லாம் நடக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும்.இது என் அனுபவம்.தூய ஆவியாரின் துணையுடன் வாழ்ந்தால் அனைத்தும் நலமே! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete