Tuesday, May 24, 2022

ஏதென்சில் பவுல்

இன்றைய (25 மே 2022) முதல் வாசகம் (திப 17:15,22 - 18:1)

ஏதென்சில் பவுல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையை வாசிக்கின்றோம்.

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

திப 17:19-20 அவர்களைப் பற்றிச் சொல்கிறது: பின்பு, அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றனர்.

மேலும், சிலர், 'இதைப் பற்றி நீர் மீண்டும் வந்து பேசும். கேட்போம்' என்றனர் (காண். திப 17:32).

கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

ஆக, ஏதென்ஸ் மக்கள் (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். 

இங்கே, நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

(1) பவுலின் அறிவுத்திறன்

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(2) பவுலின் துணிச்சல்

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

(3) சமயோசிதப் புத்தி

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். 'நீங்கள் அறியாத தெய்வத்துக்கு' என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

விளைவு,

மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.

புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தன் இலக்கு, இருத்தல், மற்றும் இயக்கம் பற்றி அறிந்த பவுல் போன்றவர்களுக்கு எல்லா இடமும், எல்லா நபர்களும், எல்லா வேலையும் ஒன்றே.


2 comments:

  1. Catherine5/24/2022

    Thought provoking article on the first day of my new job.

    ReplyDelete
  2. Philomena Arockiasamy5/25/2022

    ஏற்கனவே அறிவுசார் விஷயங்களில் திளைத்திருந்த ஏதென்ஸ் நகர மக்கள், பவுல் வழியாக இன்னும் அதைப்பெற விரும்புகின்றனர். “கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்பதைப் பவுல் நமக்கு உணர்த்துகிறார்.
    நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்….நாம் கற்ற அறிவும்,பெற்ற அனுபவமும்..அது எதிர்மறையானதாக இருந்தாலும் கூட, அது நம்மைச் செதுக்குகிறது என்பதையும் தாண்டி, நாம் கற்றுக்கொண்ட அத்தனையும் என்றோ ஒருநாள நமக்கு உதவும் என்பதும்…
    புதிய இடங்களும்..புதிய நிகழ்வுகளும்…புதிய நபர்களும்….கூடவே இறைவனின் உடனிருப்பும் நமக்கு புத்தக அறிவை விட மேலான அனுபவங்களைக் கற்றுத்தருகின்றனர் என்பதும்…
    தன் கண்களால் பார்ப்பதை அது சரியோ..தவறோ அதை அப்படியே அங்கேயே போட்டுடைக்க துணிச்சல் தேவை…இந்தத் துணிச்சல் பவுலுக்கு அதிகம் இருந்தது என்பதும் நாம் இன்று பவுல் வழியே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.உண்மைதான்…தன் இலக்கு,இருத்தல்,இயக்கம் பற்றி அறிந்த பவுல் பொன்றவர்களுக்கு எல்லா இடமும்…எல்லா வேலையும்…எல்லா நபர்களும் ஒன்றே!
    வாழ்க்கை எனும் ஏணியின் கடைசிப்படி வரை ஏறிவிட்டவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவும்..தெரிந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது என்பதைப் புரிய வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    All The Best to U Catherine on the first day of your new job!

    ReplyDelete