Friday, May 6, 2022

நீங்களும் போய்விட?

இன்றைய (7 மே 2022) நற்செய்தி (யோவா 6:60-69)

நீங்களும் போய்விட?

திபேரியக் கடலுக்கு அருகே இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தபின், அவர் ஆற்றிய நீண்ட உரை இன்று முற்றுப் பெறுகிறது. 'இவரைப் பிடித்துச் சென்று அரசராக்கி விடலாம்!' என வந்தவர்கள், 'இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று சொல்லி அவரிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.

இந்த நற்செய்திப் பகுதியைப் பற்றி மறையுரை ஆற்றுகின்ற புனித அகுஸ்தினார் இப்படி முடிக்கிறார்:

'என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! தங்களுடைய வயிற்றுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என நினைத்து, அவரை அரசராக்க நினைத்த மக்கள், அவர் அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவு தருகின்ற பேரரசர் என்று கண்டவுடன், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர்!'

இந்நற்செய்திப் பகுதியில் மூன்று விடயங்கள் என் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றை இங்கே பகிர்கிறேன்.

அ. 'இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'

இயேசுவின் பேச்சு அவர்களுக்குப் புரியவில்லை. நம் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள், 'அப்பா! கப்பல் எப்படி இருக்கும்?' என்று கேட்டால், நாம் உடனே, ஒரு தாளை எடுத்து, அதில் கோடுகள் வரைந்து, 'இதுதான் கப்பல்' எனச் சொல்வோம். அல்லது, ஒரு சதுர தாளை எடுத்து, நான்காக படித்து, குறுக்கே ஒரு தாள், மறுபக்கம் மூன்றுதாள், அப்புறம் விரல் விட்டு, கீழே ஒரு இழு, மேலே ஒரு இழு என எடுத்து, இதுதான் 'கத்திக் கப்பல்' என்று செய்து காட்டலாம். இப்படிக் காட்டினால், அக்குழந்தைக்குப் புரியும். அந்தக் குழந்தை வளர்கிறது. திருமணம் ஆகிறது. ஒரு நாள் அந்த மகனை நாம் கப்பலில் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். பயணத்திற்கு முந்தின நாள், அதே மகன், நம்மிடம், 'அப்பா, கப்பல் எப்படி இருக்கும்?' எனக் கேட்கின்றார். நாம் உடனே அவரை கணிணி முன் அழைத்துச் சென்று, யூட்யூப் திறந்து, 'தி இன்ஸைட் ஆஃப் எ பாஸன்ஜர் ஷிப்' என்று டைப் செய்து, அதை அவருக்குக் காட்டுவோம். இந்த மகனிடம், காகிதக் கப்பல் செய்து காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார். சிறுவயது மகனிடம், யூட்யூப் காட்டினால் சிரிப்பான். ஆக, இங்கே பிரச்சினை மக்களிடம் இல்லை. இயேசுவிடம்தான். காகிதக் கப்பல்தான் புரியும் என்று இருந்த மக்களுக்கு, அவர் காணொளிக் கப்பல் காட்டுகின்றார். அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆக, இன்று வளர்வது அவசியம். நேற்றைவிட நான் அறிவில், உடல்நலத்தில், பொருளாதாரத்தில், ஆன்மீகத்தில் வளர்கிறேனா? என்ற கேள்வி நமக்கு அவசியம். அப்படி வளரவில்லை என்றால், நாம் இன்னும் காகிதக்கப்பலைப் பார்த்தே பாடம் கற்க வேண்டியிருக்கும். மற்ற எல்லாமே நமக்குக் கடினமாக இருக்கும்.

ஆ. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது'

யோவான் நற்செய்தியின் சுருக்கக் குறியீட்டுச் செய்திகளில் இதுவும் ஒன்று. இங்கே, ஆவி-உடல், வாழ்வு-சாவு என்ற முரண் காட்டப்படுகிறது. ஒன்றை எடுக்கிறவர் இன்னொன்றை எடுக்க முடியாது. ஆக, இங்கே நம் தெரிவு அவசியம். 'ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற செய்தி நமக்கு பெரிய நினைவூட்டலாக இருக்கிறது. ஏனெனில், ஊனியல்பு வரையறைக்கு உட்பட்டது. வரையறையைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. ஆனால், ஊன் இல்லாமல் ஆவியை அனுபவிக்க முடியாது. ஆக, இங்கேயும் வளர்ச்சிதான் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இ. 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'

தன்னுடைய பன்னிரு சீடர்களிடம் இயேசு இக்கேள்வியைக் கேட்கின்றார். தன்னுடைய ப்ராடக்டை இவர்களும் வாங்காமல் போய்விடுவார்களோ? என்ற ஐயம் இயேசுவுக்கு எழுகின்றது. ஆனால், பேதுரு, பன்னிருவர் சார்பாக, 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்று சரணடைகின்றார். பேதுருவால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது? நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பது அல்ல. கண்களை மூடியவுடன் பார்ப்பது. கண்களை மூடி அல்லது, கண்களைக் கடந்து பார்ப்பது. நம்பிக்கைப் பார்வை இருந்தால்தான் எந்த செயலும் சாத்தியம். இதையே பவுல், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என்கிறார்.


1 comment:

  1. Philomena Arockiasamy5/06/2022

    இயேசுவின் அப்பம் பலுகிய செயலுக்காக அவரை அரசராக்க நினைத்தவர்கள் அவர் பேச்சைக் கேட்டு வெளியேறுகின்றனர்.

    இதைக்குறித்த புனித அகுஸ்தினாரின் பகிர்வு மக்களின் அறியாமையை …இயேசுவிடம் முழுப் புரிதல் இல்லாமையையைப் பிரதிபலிக்கிறது. இதைக்குறித்த தந்தையின் வெளிப்பாடு…

    காகிதக்கப்பலைப் பார்த்துப்பழகிய மக்களுக்கு காணொளிக்கப்பலைக் காட்டுகிறார் இயேசு.ஒரு ஆசிரியர் ஒரு பாடம் எடுக்குமுன் தன் மாணாக்கரின் புரிதல் திறன் என்ன என்று புரிந்து செயல்பட வேண்டும் இல்லையேல் அவரின் முயற்சி அத்தனையும் வீண். இங்கே தன்னிடம் வந்த மக்களைப்பற்றிய புரிதல் இயேசுவுக்கு இருந்ததா? புரியவில்லை.நாம் வளரவேண்டும் தான்..ஆனால் ஆன்மீகப்புரிதலைப்பற்றி நினைக்கும்போது பல நேரங்களில் நான் சிறுவயதில் படித்த சின்னக்குறிப்பிடம் தந்த விசுவாசமே போதும் எனத்தோன்றுகிறது.

    வரையறைக்குட்படாத ஆவியை அனுபவிக்க வரையறைக்குட்பட்ட ஊன் தேவைதான்.இங்கே ஒன்றின் வளர்ச்சி இருந்தால் மட்டுமே மற்றதன் பலனை நாம் அனுபவிக்க ஏதுவாகும் என்று புரிகிறது.

    “ நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” இயேசுவின் இயலாமையின் எதிரொலிப்பு. அவரின் எண்ணம் சரியல்ல என்ற பாதுகாப்புப் போர்வையை அவருக்குப் போர்த்துகிறார் பேதுரு. அவரது வார்த்தைகளுக்கு ஆணிவேராய் இருப்பது இயேசுவில் அவர் கொண்ட நம்பிக்கை.” நாம் காண்பவற்றையல்ல..காணாதவற்றை நோக்கி வாழவும்,காண்பவை நிலையற்றவை என உணர்ந்து,நிலைத்திருக்கும் காணாதவை நோக்கி நம் உள்ளத் தையும்,உணர்வையும் திருப்பும் படிக்கேட்கத்தூண்டும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete