உங்களுள் யாராவது
இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'
இங்கே ஒரு விடயம்.
'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் போய் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.
'கூட்டத்தோடு கூட்டமாக அமர' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.
'நல்லவனாய் இருப்பதன் கஷ்டம்' (ஆங்கிலத்தில்) என்ற நூலில் ஆசிரியர் குருசரன் தாஸ் ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார். அவர் மருத்துவமனை ஒன்றிற்கு உடல் பரிசோதனைக்குச் செல்கிறார். 'உங்கள் பெயர் என்ன?' என்று அங்கிருந்த பெண் கேட்க, இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இண்டியா - பக்கம் 14ஐ பார்' என்கிறார் இவர். அந்தப் பெண் பக்கத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, இவர் எழுதிய கட்டுரையின் கீழ் இருந்த பெயரை நோட்டில் பதிவு செய்துவிட்டு, சின்னப் புன்முறுவலோடு, 'அங்கே போய் உட்காருங்க! உங்க நம்பர் வரும்போது கூப்பிடுறேன்!' என்றார் பெண்.
'என் வாழ்வில் இனி இவளை நான் பார்க்க மாட்டேன் என்று தெரிந்தும், இவளிடம் நான் யார் என்று காட்டவும், இவளின் அப்ரூவலைப் பெறவும் என்னைத் தூண்டியது எது?' என்று அவரே கேட்டுவிட்டு, நம் எல்லாரிடமும், 'நான் ஒரு முக்கியமானவன்-ள்' என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுதான், 'நம்மை எல்லாரும் பார்க்க வேண்டும்' என்று எண்ணத் தூண்டுகிறது என்கிறார்.
ஆனால், பவுலிடம் இப்படி ஒரு உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அமர்கின்றார்.
கூட்டத்தில் நாம் பேசாமல் அமர்ந்தாலே வாழ்வில் பாதிப் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறேன்.
தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.
இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். அது சிறிய பஸ் பயணத்திலிருந்து பெரிய இன்வெஸ்ட்மென்ட் முடிவாகக் கூட இருக்கலாம். இன்னொன்று, பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!
என்னுடைய நண்பர் சில நாள்களுக்கு முன், 'உடல் வலி. சளி. தும்மல்' என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் போட்டார். உடனே நிறைய அறிவுரைகள் அவருக்கு வந்து சேர்ந்தன. 'இதைக் குடியுங்கள். அதைச் செய்யுங்கள்.' மனித மூளை, குறிப்பாக ஆண்களின் மூளை, உடனே தீர்வைத் தேடுகிறது. கொஞ்சம் பொறுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இல்லையா?
இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 13:16-20), 'பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்ல. தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாகச் சொல்கிறேன்' என்று தாழ்ச்சியைக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.
நம் வரையறையை அறிந்திருப்பதும், அழைக்கப்படும்போது தேவையானதைச் சொல்வதும் செய்வதும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக அமரத் தாழ்ச்சி தேவை…குருசரண் தாஸின் அனுபவம் யாரும் பற்றிக்கொள்ள நல்ல பாடம்.’தாழ்ச்சி’…. நிறைகுடம் தழும்பாது என்ற அர்த்தம் கொண்ட ஒரே வார்த்தை..இதை நிரம்பப் பெற்றிருந்த சவுல் மற்றும் பர்னபாஸ்.பிறர் கேட்காமலே நாம் தாராளமாக அள்ளித்தெளிக்கக் கூடிய ஒரே விஷயம்….அட்வைஸ்.ஓசியாக க் கிடைக்கும் ஒரே விஷயமும் இதுதான்.இதையெல்லாமே தெரிந்திருந்த பவுல் தன் எதிரே அமர்ந்திருந்த மக்களுக்கு உரையாற்றுகிறார் என்பது எந்நிலையிலும்…எந்த நேரத்திலும் மக்களிடம் பகிர்ந்து கொள்ள விஷயமும்,,துணிச்சலும் அவரிடம் இருந்தது என்பதைக் காட்டுகிறது.
ReplyDeleteதாழ்ச்சி எனும் நல்விஷயம் நற்செய்தியிலும் இயேசுவழியாகத் தொடர்கிறது.நம் தகுதியை அறிந்து வைத்திருக்கவும்…தேவைப்பட்டால்மட்டுமே அதைச்செயலாக மாற்றவும் வழி சொல்லும் ஒரு வாழ்க்கைப்பாடம். தந்தைக்கு நன்றிகள்!!!