Wednesday, May 25, 2022

கூடாரத் தொழில்

இன்றைய (26 மே 2022) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல். 

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல். 

பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று சில நேரங்களில் அருள்பணி செய்பவர்கள் தங்கள் அருள்பணி நிலையை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தங்களின் அருள்பணிக்காக மற்றவர்களின் சுமைகளைக் கூட்டும் நிலை சில இடங்களில் இருக்கிறது. தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையை அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. 

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

முதலில், உழைப்பு.

இரண்டாவது, பழகும் திறன்.


1 comment:

  1. Philomena Arockiasamy5/25/2022

    அக்கில்லா- பிரிஸ்கில்லா தம்பதியுடன் தங்கும் பவுல், அவர்களுடைய உழைப்பில் குளிர்காய விரும்பாதவராய் அவர்களுடன் இணைந்து அவர்களின் தொழிலான கூடாரத்தொழிலில் துணை நிற்கிறார்.தான் அவர்களுக்குச் சுமையாய் இருக்கக் கூடாது எனும் சுய மதிப்பு உந்தித் தள்ள ‘ என் வாழ்க்கை என் கையில்’ எனும் வாழ்வின் சித்தாந்தத்தை மெய்ப்பிக்கிறார். இவரைத் தங்களுடன் தங்க வைத்தவர்களின் உழைப்பை தேவைக்கு மேல் உறிஞ்சக்கூடாது என்ற பவுலின் நற்பண்பு போற்றப்பட வேண்டியதெனில், முன்பின் தெரியாத அவரைத் தங்களுடன் தங்க வைத்த அன்றாடம் காய்ச்சிகளான அக்கில்லா- பிரிஸ்கில்லா தம்பதியரின் எளிமை மிகு விருந்தோம்பல் அதை விட மேலானது.
    நம்முடைய உழைப்பும்….நம்முடைய நடையுடை பாவனையும் பார்ப்பவர்களை நம்மிடம் ஈர்க்கும்படி இருக்க வேண்டுமெனச் சொல்கின்றனர் பவுலும்…அக்கில்லா- பிரிஸ்கில்லா தம்பதியரும். இந்த ஈர்ப்பு இருக்குமிடத்தில் நம்பிக்கையும் தானாகவே பிறக்கும்.
    “எளிமையிலும் அழகுண்டு!”…… தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete