தூய ஆவியார் பெருவிழா
உம் ஆவியை அனுப்பி
புத்த மடாலயம் ஒன்றைச் சந்திக்க இளவல் ஒருவர் வந்தார். வந்தவருக்கு ஆச்சர்யம். மடலாயத்தில் இரு மொட்டுகள் தியானம் செய்துகொண்டிருந்தனர். இளவலுக்கு ஆச்சர்யம். அந்த மொட்டுகள் ஒருவரிடம், 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'தியானம் செய்கிறேன்' என்றார் மொட்டு. 'இந்த வயதில் என்ன தியானம் செய்கிறீர்கள்?' கேட்டார் இளவல். 'என் சுவாசத்தைக் கவனிக்கிறேன். சுவாசம் ஒன்றுதான் உண்மை. நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் இருப்பது சுவாசம் தான். சுவாசம் நின்றவுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நம் தனிமையில், தூக்கத்தில், நடையில், அழுகையில், சிரிப்பில் அனைத்திலும் உடனிருப்பது சுவாசம்தான். நாம் கோபம் கொண்டால் சூடாவது சுவாசம். நாம் பரபரப்பாக இருந்தால் பதற்றம் அடைவது சுவாசம். அமைதியாக இருந்தால் இலுகுவாக இருப்பது சுவாசம். சுவாசக் காற்று உள்ளே செல்வதையும், சுவாசித்த காற்று வெளியே வருவதையும் உணர்தலே தியானம்' என்று சொல்லிவிட்டுத் தன் தியானத்தைத் தொடர்ந்தார் மொட்டு.
நாம் சுவாசிக்கும் காற்றின் அருமையை இந்த நாள்களில் நாம் மிகவும் அதிகமாகவே உணர்கிறோம்.
பெருந்தொற்றின் முதல் அலையின்போது நாம் 'மாஸ்க்' அணிந்தோம். இரண்டாம் அலையில் இப்போது நாம் 'ஆக்ஸிஜன் மாஸ்க்' அணியும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன், 'தண்ணீரை யாராவது விலைக்கு வாங்குவாங்களா?' என்று கேட்டோம். இன்று தண்ணீரை நாம் விலைகொடுத்தே வாங்குகிறோம். குடிக்கும் நீர் இப்போது காசில்லாமல் கிடைப்பதில்லை. சுவாசிக்கும் காற்றை வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இனி கட்டப்படும் கட்டடங்களும், 'தொற்றொதுக்கத்திற்கான அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் சேமிப்பு அறை' என்று இணைத்தே கட்டப்படும். 'இங்கே ஆக்ஸிஜன் கிடைக்கும்' என எல்லாக் கடைகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
நம் தாய்த் திருஅவை இன்று தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. இன்று நம் திருஅவையின் பிறந்தநாள். வாரங்கள் எனப்படும் யூதர்களின் திருவிழாவின் நிறைவுநாளான பெந்தகோஸ்தே திருநாளில் கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் உருவாகி, நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் அன்னை கன்னி மரியா மேலும் திருத்தூதர்கள்மேலும் இறங்கியது இன்று. பூட்டிய அறைக்குள் கிடந்தவர்களுக்கு புதிய ஆக்ஸிஜனாக வந்து சேர்கிறார் தூய ஆவியார். புதிய பிறப்பு அடைந்தவர்களாக அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்த நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது இன்றைய முதல் வாசகம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் வரும் வரிகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:
'தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்'
- 'ஊனியல்பு' மற்றும் 'ஆவிக்குரிய இயல்பு' என்னும் இரு இயல்புகள் பற்றி எடுத்துரைக்கின்ற பவுல், ஆவிக்குரிய இயல்போடு வாழுமாறு கலாத்தியத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்றார்.
ஆவிக்குரிய இயல்போடு வாழ்வது என்றால் என்ன?
இதைப் புரிந்துகொள்ள நாம் முதல் ஏற்பாட்டுக் கதை மாந்தர் சிம்சோன் (சாம்சன்) வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சிம்சோனின் பிறப்பு முதல் அவருடைய இறப்பு வரை ஆவியாரின் உடனிருப்பை அவருடைய வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அவருடைய பிறப்பை விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்:
'அப்பெண் (மனோவாகின் மனைவி) ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும் எசுத்தாவேலுக்கும் இடையே அவன் இருக்கும்போது ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கினார்' (காண். நீத 13:24-25).
இங்கே, 'தூண்டத் தொடங்குதல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் பொருள், 'இங்கேயும் அங்கேயும் நகர்த்துதல், அல்லது அலைக்கழித்தல், அல்லது இழுத்தடித்தல்' என்பதாகும். ஆக, ஆவியார் அல்லது ஆவி அவரை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் இங்கும் அங்கும் அலைக்கழிக்கிறார்.
இதுதான் தூய ஆவியாரின் முதல் பணி.
அவரைப் பெற்றுக்கொண்ட எவரும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உடனடியாக இயக்கத்திற்கு உட்படுவர்.
அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்' (காண். லூக் 1:35) என்று வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன அடுத்த நிமிடம், மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் (காண். லூக் 1:39).
இதுதான் ஆவியாரின் இயக்கம். இந்த இயக்கத்தையே நாம் திருத்தூதர் பணிகள் நூலிலும் வாசிக்கின்றோம். பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார். திருத்தூதர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணமாகிறார்கள்.
சிம்சோன் ஆண்டவருடைய ஆவி தன்னோடு இருப்பதை மறந்துவிடுகின்றார்.
அந்நாளில் இஸ்ரயேலின் எதிரிகளாக இருந்த பெலிஸ்தியர்கள், இலேகி என்னும் இடத்தில் சிம்சோனைத் தாக்கிக் கொல்ல முயன்றபோது, 'ஆண்டவரின் ஆவி அவர்மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன' (நீத 15:14).
சிம்சோனின் பணி வாழ்வில் ஆண்டவரின் ஆவி உடன் வந்து, அவருக்கு வலிமை தருகின்றார். ஆவியாரால் வலுவூட்டப்படுகின்ற சிம்சோன், கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரைக் கொன்று போடுகின்றார். இயேசு தன் பணி வாழ்வின் தொடக்கத்தில், தான் ஆற்றுகின்ற உரையில், 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது. ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்' (லூக் 4:18) என அறிக்கையிடுகின்றார்.
சிம்சோன் ஆண்டவருடைய ஆவியை மீண்டும் மறந்துவிடுகின்றார்.
தன் வாழ்க்கை முழுவதும் ஓய்வுக்காக அலைந்து திரிகின்ற சிம்சோன் தெலீலாவின் மடியில் ஓய்ந்திருக்கின்றார். ஆனால், அதுவே அவருடைய இறுதி ஓய்வின் தொடக்கமாக இருக்கிறது.
விவிலிய ஆசிரியர் இந்நிகழ்வின் சோகத்தைப் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:
'அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து, 'முன்பு போல் இப்போதும் என்னை விடுவித்துக் கொண்டு வெளியே செல்வேன்' என்று சொன்னார். ஆனால், ஆண்டவர் அவரிடமிருந்து அகன்று விட்டார் என்பதை அவர் உணரவில்லை' (நீத 16:20).
'ஆண்டவர் தன்னிடமிருந்து அகன்று விட்டார்' என்பது, ஆண்டவரின் ஆவி தன்னைவிட்டு அகன்று விட்டது என்பதை அவர் அறியவில்லை. இதைவிட ஒரு மனிதருடைய வாழ்வில் சோகம் இருக்க முடியாது. நம் ஒட்டு, உறவு, நண்பர், நலவிரும்பிகள் நம்மை விட்டு அகன்றாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஆண்டவர் நம்மைவிட்டு அகன்றால் என்ன செய்வது?
இதே போன்ற நிகழ்வு இன்னொரு இடத்திலும் நடக்கிறது. இஸ்ரயேலின் முதல் அரசனாகக் கடவுள் தேர்ந்துகொண்ட சவுலின் வாழ்வில் நடக்கிறது: 'ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது' (காண். 1 சாமு 16:14). சிம்சோனை விட சவுலின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவி நீங்கியதோடல்லாமல், தீய ஆவி வந்து அவரைப் பற்றிக்கொள்கிறது.
சிம்சோன் தான் கடவுளுக்கான ஒரு நாசீர் என்பதை மறந்து, நாசீருக்கான மூன்று விதிகளையும் மீறுகின்றார்: (அ) இறந்த சிங்கத்தின் உடலைத் தொடுகின்றார், (ஆ) தேனை உட்கொள்கின்றார், (இ) தன் தலையை மழிக்குமாறு அனுமதிக்கின்றார். இருந்தாலும், ஆண்டவர் தான் தேர்ந்துகொண்டவரைத் தொடர்கிறார்.
'மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது' (காண். நீத 16:22) எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர். நிகழ்வின் இறுதியில், தாகோனின் ஆலயத்தில் மக்கள் கூடியிருந்தபோது, சிம்சோன் ஆண்டவரை நோக்கி, 'என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும்' (காண். நீத 16:28) என மன்றாடுகின்றார். ஆண்டவர் அவரை மறக்கவில்லை. சிம்சோன்தான் ஆண்டவரை மறந்துவிட்டார்.
சவுலின் வாழ்விலும் அதே நிலைதான். தன்னிடமிருந்த ஆண்டவரை மறந்துவிடுகிறார் சவுல்.
'தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்' எனச் சொல்கின்ற பவுல், அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்று சுட்டிக்காட்டி, ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் மற்றதை விட்டுவிடவும் அழைக்கின்றார்.
ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுதல் நம் வாழ்வில் மிக மிக அவசியம்.
சிம்சோனும் சவுலும் இதில் தவறிவிடுகிறார்கள்.
எல்லாவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது மனித உள்ளம். ஆனால், எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் பற்றிக்கொள்தல் நம்மால் இயலாது. ஒன்றை இழந்தால்தான் நான் இன்னொன்றைப் பெற முடியும். அல்லது இன்னொன்றைப் பெறுவதற்காக நான் ஒன்றை இழந்தே ஆக வேண்டும்.
கலாத்திய நகரத் திருஅவையினர் ஒரே நேரத்தில் பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றையும், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றையும் பற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை மறந்துவிட்டனர். காமவெறியும் களியாட்டமும் கொள்பவர் எப்படி அடுத்தவரை அன்பு செய்வார்? பொறாமை கொள்பவர் எப்படி மற்றவர் மேல் கனிவு காட்டுவார்? தன்னடக்கம் இல்லாதவர் தன்னையே பெரியவராகக் கருதி மற்றவர்களுக்கு அடையே பிரிவை வளர்ப்பார் அல்லவா?
ஆக, ஆண்டவருடைய ஆவியார் நம் வாழ்வின் இயக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறார்.
நாம்தான் பல நேரங்களில் அவரை மறந்துவிடுகின்றோம்.
இலவசமாக நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜன் போல, திருமுழுக்கின் போது நமக்கு இலவசமாகக் கிடைத்ததால் என்னவோ, ஆவியாரை நாம் மறந்துவிட்டோம்.
நாம் சுவாசிப்பதே காற்று இல்லாத போதுதான் நம் நினைவுக்கு வருகிறது.
நாம் ஊனியல்பின்படி நடக்கும்போதும், அதனால் நம் மனம் அமைதி இழக்கும்போதும்தான், ஆவியார் இல்லாதது நம் நினைவுக்கு வருகிறது. சில நேரங்களில் அப்போதும் ஆவியார் நம் நினைவுக்கு வருவதில்லை.
ஆக்ஸிஜன் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் அது இருக்கின்றது.
ஆவியாரைத் தேடி நாம் அருங்கொடை இல்லங்களுக்கு அலையத் தேவையில்லை. அவர் நம்முடன் நம் சுவாசமாக இருக்கின்றார். அதனால்தான், பவுல், 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' என்கிறார்.
இத்தூய ஆவியாரே நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்கிறார் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில்.
மறந்துபோன நம் சுவாசத்தை நினைவூட்ட வந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போல,
மறந்துபோன நம் ஆன்மிக சுவாசத்தை நினைவூட்ட வருகிறது இன்றைய திருநாள்.
இன்று ஆக்ஸிஜனுக்காக மன்றாடும் நாம், ஆவியாருக்காகவும் மன்றாடுவோம்.
திருப்பாடல் ஆசிரியர் போல,
'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
... ... ...
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படுகின்றன!' (திபா 104).
இன்று பெந்தகோஸ்தே பெருவிழாவில் இறங்கி வருகின்ற தூய ஆவியார், நம் இந்தியத் திருநாட்டின் முகத்தைப் புதுப்பிப்பாராக!
நம் அன்புக்குரியவர்களின் முகங்களிலிருந்து ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் விரைவில் அகலவும், அனைவரின் முகங்களும் ஆவியாரால் புதுப்பிக்கபடவும் மன்றாடுவோம்.
சுவாசிப்பது வேண்டுமானால் நாமாக இருக்கலாம். ஆனால், சுவாசம் அவரே!
'இறைவா! என்று திரும்பும் எங்கள் இயல்பு வாழ்க்கை?
என்று காண்போம் நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை?
பார்த்துப் பார்த்துப் பழகிய உறவுகளை
பாராத நிலைக்குத் தள்ளியது ஏனோ?
காகிதப் பூ எனக் கருதிப் பக்குவமாய் அன்பு செய்த எம் பெற்றோரை,
உடன் பிறந்தோரை, பிள்ளைகளை, கணவர்களை, மனைவியரை,
பிளாஸ்டிக் பைகளில் அள்ளிக் கொண்டு போடும் அவல நிலை ஏனோ?
எல்லாரும் கைகளை விரித்த நிலையில்,
எங்கள் கரங்கள் இன்று உம்மை நோக்கி!'
புதிய மொழிகள் பேச வேண்டாம் நாங்கள்!
எங்கள் மொழி பேச எங்கள் முகக்கவசங்களை அகற்ற எங்களுக்கு அருளும்!