இன்றைய (10 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 4:13-21)
இயேசுவோடு இருந்தவர்கள்
சாலமோன் மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் முன் பேதுரு உரையாற்றுகின்றார். அவரைத் தலைமைச் சங்கத்தார் கைது செய்கின்றனர். இயேசுவைக் கைது செய்தபோது உறுப்பினர்களாக இருந்தவர்களே இப்போதும் உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். மூன்று காரணங்களுக்காக அவர்கள் திருத்தூதர்களைக் கைது செய்கின்றனர்:
ஒன்று, 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்று திருத்தூதர்கள் அறிவித்தனர். இச்செய்தி பலருடைய மனமாற்றத்துக்கும், மதமாற்றத்துக்கும் காரணமாக இருந்தது. யூத நெறியிலிருந்து விலகிய பலர் இந்தப் புதிய நெறியைத் தழுவினர். இப்படியே அனைத்து யூதர்களும் போய்விட்டால் என்ன ஆவது? என்ற கவலையில், அவர்களுடைய போதனையை நிறுத்தும் முகத்தான் திருத்தூதர்களைக் கைது செய்கின்றனர் தலைமைச் சங்கத்தார்.
இரண்டு, 'இயேசுவின் இறப்புக்குக் காரணம் தலைமைச்சங்கத்தாரே' என்று அறிவிக்கின்றனர். இதனால், தலைமைச்சங்கத்தார் மக்கள் நடுவில் தங்கள் நன்மதிப்பை இழக்கத் தொடங்குகின்றனர். தங்களுடைய நன்மதிப்பின் பொருட்டும் திருத்தூதர்களைக் கைது செய்கின்றனர்.
மூன்று, இயேசுவின் பெயரால் திருத்தூதர்கள் வல்ல செயல்கள் செய்கின்றனர். இதனால், 'இயேசுவின் பெயர்' நாளுக்கு நாள் பரவ ஆரம்பிக்கின்றது. யாவேயின் பெயர் மட்டுமே குடிகொள்ளும் எருசலேம் நகரில், இயேசுவின் பெயர் குடிகொள்வது அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
மேற்காணும் மூன்று காரணங்களுக்காக திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யோவான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
இங்கே, திருத்தூதர்களைப் பற்றிய தலைமைச் சங்கத்தாரின் பார்வை அல்லது கண்ணோட்டத்தை மூன்று சொல்லாடல்களில் பதிவு செய்கின்றார் லூக்கா:
(அ) அவர்கள் (திருத்தூதர்கள்) கல்வியறிவு அற்றவர்கள்
(ஆ) அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்
(இ) அவர்கள் துணிவோடு சான்று பகர்ந்தவர்கள்
திருத்தூதர்களின் துணிச்சல்நிறை சான்று பகர்தல் திருத்தூதர்கள் நடுவே பெரிய ஆச்சரியத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. அவர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தாலும் இந்த அளவுக்கு பேசுகிறார்கள் என்று வியந்தார்கள். மேலும், 'அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்' என்று அவர்களை அறிந்துகொண்டனர்.
இன்று இந்த அடையாளமே நமக்குப் பெரும் பொறுப்புணர்வைத் தருகிறது.
நான் தினமும் திருப்பலி நிறைவேற்றுகிறேன் அல்லது திருப்பலியில் பங்கேற்கிறேன். அருளடையாளங்களைக் கொண்டாடுகிறேன். இறைவார்த்தையை வாசிக்கிறேன். ஆனால், என்னைக் காணும் மற்றவர்கள், 'இவரும் இயேசுவோடு இருந்தவரே!' என்று சொல்ல முடியுமா? என் வார்;த்தையும் வாழ்க்கையும் அதற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளதா?
நாம் யாராவது தங்கள் வாழ்வில் நன்றாக செயல்பட்டு உச்ச நிலைக்கு வந்தால், அவர் யார்? அவர்களுடைய பெற்றோர் யார்? அவர்களுடைய ஆசிரியர்கள் யார்? என்று கேட்கின்றோம்.
இயேசுவின் திருத்தூதர்களும் இயேசு என்னும் பள்ளியில் திருத்தூதுப்பணி பாடங்களைக் கற்றவர்களாக இருக்கின்றனர். இயேசுவின் பள்ளி அவர்கள்மேல் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களுடைய சமகாலத்தவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இயேசுவின் பள்ளியில் நான் இன்று கற்றுள்ள பாடங்கள் எவை? அவை என்னை எப்படி உருவாக்குகின்றன?
என்னைக் காணும் எவரும், 'இவரும் இயேசுவோடு இருந்தார்' என்று சொல்லும்படியாக என் வாழ்க்கை எப்படி மாற வேண்டும்?
இன்று என் குருத்துவப் பயிற்சியகத்திற்கு அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்றேன். 'நீங்க இங்க படிக்கிறீங்களா?' எனக் கேட்டார் கடைக்காரர். 'இல்லை! படிப்பை முடித்துவிட்டுப் பயிற்றுவிக்கிறேன்!' என்றேன். உடனே அவர் சொன்னார்: 'பெற்ற அனைவரும் கொடுக்க வேண்டும்! கொடுக்கும் போது தகுதியும் விருப்பமும் பார்த்துக் கொடுக்க வேண்டும்' என்றார்.
நம் வாழ்வில் பெறுதல் என்பது ஒரு நிலை என்றால், கொடுப்பது என்பது இன்னொரு நிலை.
இயேசுவின் சீடத்துவப் பள்ளியில் 'பெற்ற' அவர்கள், இன்று தலைமைச்சங்கத்தில் 'கொடுக்கின்றனர்.'
பெறுகிற யாவரும் கொடுக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
அவரிடமிருந்து மகிழ்ச்சி, அமைதி, அன்பு, நாணயம் ஆகியவற்றைப் பெற்ற நாம் மற்றவர்களுக்குக் கொடுத்தால், 'இவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்' என எல்லாரும் வியப்படைவர்.
‘யாவேயின்’ பெயர் மட்டுமே குடிகொள்ளும் நகரில் இயேசுவின் பெயர் குடிகொள்வது ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் இயேசு கைது செய்யப்படுகிறார்.கல்வியறிவு அற்ற திருத்தூதர்களின் துணிச்சல் தலைமை சங்கத்தாரைக் கிலியடையச் செய்ததால் திருத்தூதர்களும் கைது செய்யப்படுகின்றனர்.” இயேசுவோடு இருந்தவர்கள்” எனும் அடையாளம் அவர்களைத் தணித்துக்காட்டுகிறது. நம் உள்ளத்தை ஊடுறுவிப் பாயுமாறு கேள்வியை முன்வைக்கிறார் தந்தை. இன்று என்னைப் பார்ப்பவர்கள்” இவள் கிறிஸ்துவுடன் இருப்பவள்” என்று என்னை இனம் காண்பார்களா இல்லை வேறு பல அடையாளங்களாலா?
ReplyDelete“ பெற்ற அனைவரும் கொடுக்க வேண்டும்; கொடுக்கும்போது தகுதியும்,விருப்பமும் பார்த்துக்கொடுக்க வேண்டும்.”....” நம் வாழ்வில் பெறுதல் ஒரு நிலை என்றால் கொடுப்பது இன்னொரு நிலை.” தந்தைக்கு ஒரு சலாம்!
இயேசுவிடமிருந்து மட்டுமல்ல..... யார் நமக்கு என்ன கொடுப்பினும் ...அது மகிழ்ச்சி,அமைதி,அன்பு, நாணயம் போன்ற உள்ளத்தை வளர்க்கும் விஷயமானாலும் சரி...இல்லை உணவு,உடை, பணம் போன்ற உடலை வளர்க்கும் விஷயமானாலும் சரி.... நாம் ஒரு கையால் பெற்றதை மறு கையால் கொடுத்தேயாக வேண்டும்.அடுத்தவர்கள் நம்மைப்பார்த்து வியப்படையும் முன் நாமே நம்மைப்பார்த்து வியப்படையும் தருணம் அது.” கொடுப்பதின் இன்பம் பெறுவதில் இல்லை” என்று சும்மாவா எழுதி வைத்தார்கள்?
அழாகானதொரு....அன்றாடம் வாழ்வாக்கும் செய்திக்காகத் தந்தைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!
Super Yesu
ReplyDelete