Sunday, April 11, 2021

நிக்கதேம்

இன்றைய (12 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 3:1-8)

நிக்கதேம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஓர் இரவில் இயேசுவைச் சந்திக்க வருகிறார் நிக்கதேம். இயேசுவை அடக்கம் செய்யும் நிகழ்விலும் இவர் வருகிறார். இவர் ஒரு பரிசேயர். நிறையக் கற்றவர். ஆளுநர் பிலாத்து வரை ஆள்களைத் தெரிந்தவர்.

இயேசுவிடம் ஓர் இரவில் வருகின்றார்.

யோவான் நற்செய்தியில் உரையாடல்கள் தொடங்கும் பகுதி இதுதான். மேலும், யோவான் நற்செய்தியில், இயேசு, யூதர்கள், புறவினத்தார், சமாரியர்கள், கிரேக்கர்கள், உரோமையர்கள் என்று ஒவ்வொரு வட்டமாக கடந்து செல்வதுபோல யோவான் தன்னுடைய நற்செய்தியைக் கட்டமைக்கிறார். அவ்வகையில், ஒட்டுமொத்த யூதப் பானையின் பதத்துக்கு ஒரு சோறாக வந்தவர்தான் நிக்கதேம்.

மேலும், யோவான் நற்செய்தியில் பொருள் இரண்டு நிலைகளில் நகரும். ஒன்று, மேலோட்டமான நிலை. இரண்டு, ஆழமான நிலை. கதைமாந்தர்கள் பேசும் அனைத்தும் மேலோட்டமான நிலையில் இருக்கும். இயேசு பேசும் அனைத்தும் ஆழமான நிலையில் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இயேசு சமாரியப் பெண்ணிடம், 'நான் வாழ்வுதரும் தண்ணீரை உமக்கு அளிப்பேன்' என்பார். ஆனால் பெண்ணோ, 'உம்மிடம் வாளி இல்லையே! கிணறு ரொம்ப ஆழமானதே!' என்பார்.

இயேசு பிலாத்துவிடம், 'உண்மையை அறிவிக்கவே வந்தேன்' என்பார். ஆனால் பிலாத்துவோ, 'உண்மையா அது என்ன?' என்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படி ஒன்று நடக்கிறது.

இயேசு நிக்கதேமிடம், 'மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது' என்கிறார்.

ஆனால், நிக்கதேம், 'வயதான பின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?' எனக் கேட்கின்றார்.

ஏன் இந்த முரண்பாட்டு இலக்கியக் கூற்றை யோவான் கையாளுகின்றார்?

நற்செய்தியை வாசிக்கும் வாசகர், இயேசுவின் வழிநடத்துதலால் மட்டுமே மேலோட்டமான பொருளிளிலிருந்து ஆழமான பொருளுக்குக் கடந்து செல்ல முடியும் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு கையாளுகின்றார்.

நிக்கதேம் மூன்று நிலைகளில் தனக்குத் தானே முரணாக இருக்கின்றார்:

அ. இயேசுவை, 'கடவுளிடமிருந்து வந்தவர்' என ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரை 'ரபி' அல்லது 'போதகர்' என அழைக்கின்றார்.

ஆ. இயேசுவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். ஆனால், மற்றவர்களுக்கு அஞ்சி இரவில் இயேசுவிடம் வருகின்றார்.
இ. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதை அறிந்துள்ளார். இருந்தாலும் புரியாதவர்போல கேள்வி கேட்கின்றார்.

முரண்கள் நம் வாழ்விலும் இருக்கக் கூடியவை.

முரண்களை நாம் முழுமையாக ஒழித்து ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டுவரவும் தேவையில்லை.

இதையே, சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்' (காண். சஉ 7:18) என்கிறார்.

ஆக, இன்று என் ஆன்மீக வாழ்வில் நான் எதிர்கொள்ளும் முரண்கள் எவை?

2 comments:

  1. இரவில் வரும் நிக்கதேம்...எப்பவுமே இவர் பெயரை இந்த “ இரவில்” எனும் அடைமொழி தாங்கி நிற்கிறது..... இன்றைய பதிவிலும் கூட. கூடவே முரண்பாடுகள் நிறைந்த யோவானின் எழுத்து நடை.ஏன் முரண்பாடு? காரணம் சொல்கிறார் தந்தை. “இயேசுவின் வழிநடத்துதலால் மட்டுமே மேலோட்டமான பொருளிலிருந்து ஆழமான பொருளுக்குக் கடந்து செல்ல முடியும் என்று காட்டுவதற்காகவே!” இதே முரண்பாடுகளை நிக்கதேமின் வாழ்க்கையில் மட்டுமல்ல...நம் வாழ்விலும் கொண்டுள்ளோம். முரண்களை அவற்றின் போக்கிலே விடுவதே நல்லது என உணர்த்தப்படுகிறோம். சபை உரையாளரின் வார்த்தைகளும் “ஒன்றைப்பற்றிக்கொண்டிருக்கையில் அதற்கு மாறானதையும் சேர்த்தே கையில் வைத்திருப்பது தவறல்ல” என்கிறார். கூடவே “கடவுளுக்கு அ்ஞ்சி நடக்கும் ஒருவர் அனைத்திலும் வெற்றி பெறுவார்.”......நம் வாழ்க்கையில் முரண்கள் வருவதும் தப்பில்லை...அவற்றில் தோற்பதும் தப்பில்லை. ஆனால் “ கடவுளிடம் கொள்ளும் அச்சமே நம்மை முன்னோக்கி நடத்திச் செல்லும்.” எனும் நேர்மறை வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete