Monday, April 5, 2021

திரும்பிப் பார்த்து

இன்றைய (6 April 2021) நற்செய்தி (யோவான் 20:11-18)

திரும்பிப் பார்த்து

இன்றைய நற்செய்தி வாசகம் பற்றிய புனித அகுஸ்தினாரின் விளக்கத்தை நான் கடந்த வாரம் வாசித்தேன். நிகழ்வின்படி, மகதலா நாட்டு மரியா கல்லறைக்கு வெளியே நின்று, கல்லறையைப் பார்த்து அழுதுகொண்டிருக்கின்றார். அங்கிருந்த இரு வானதூதர்களிடம் பேசிவிட்டு, பின்னால் திரும்புகின்றார். அங்கே இயேசு நிற்பதைக் காண்கிறார். ஆனால், இயேசு அவருடைய கண்களுக்குத் தோட்டக்காரர் போலத் தெரிகிறார். அவருடன் உரையாடல் தொடங்குகிறது. உரையாடலின் இறுதியில், 'மரியா!' என்கிறார் இயேசு. உடனடியாக, 'ரபூனி' என அவரை அள்ளிக்கொள்கின்றார் மரியா. இந்த இடத்தில், 'மரியா திரும்பிப் பார்த்து' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஏற்கெனவே மரியா திரும்பித்தானே இருக்கிறார். மீண்டும் அவர் திரும்பினால் கல்லறை நோக்கி அல்லவா திரும்ப வேண்டும்?

புனித அகுஸ்தினார் இதற்கு மிக அழகான விளக்கம் தருகின்றார்: 'மரியா, தன் திசையைத் திருப்பவில்லை. மாறாக, தன் இதயத்தைத் திருப்புகிறாள்.' இவ்வளவு நேரம் மரியாவின் முகம் இயேசுவை நோக்கியதாக இருந்தாலும், இப்போதுதான் அவருடைய இதயம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது. அல்லது இவ்வளவு நேரம் அவருடைய இதயம் கல்லறை நோக்கியதாக இருந்தது. ஆக, முகம் இயேசுவை நோக்கியும், இதயம் கல்லறை நோக்கியும் இருந்தால், அவர் நம் கண்களுக்கும் தோட்டக்காரர் போலவே தெரிவார். முகமும் இதயமும் ஒருசேர அவரை நோக்கி இருந்தால் அவர் நம் ஆண்டவராகத் தெரிவார்.

மரியா இயேசுவைக் கண்டுகொள்வது நான்கு நிலைகளில் நடக்கிறது:

முதலில், அவர் இயேசுவைக் காணவில்லை.

இரண்டாவதாக, அவர் இயேசுவைத் தோட்டக்காரர் போலக் காண்கின்றார்.

மூன்றாவதாக, அவர் அவரை ரபூனி ('போதகர்', 'என் போதகர்') எனக் காண்கின்றார்.

இறுதியாக, அவர் அவரை ஆண்டவர் எனக் காண்கின்றார்.

'நீ என் சகோதரர்களிடம் போய் அவர்களிடம், 'என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு.

ஆனால், மகதலா மரியா எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்கிறார். மற்றதைப் பின்புதான் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'காணுதல்' என்பது 'நம்புதலுக்கான' அடையாளம். கிரேக்கர்கள் சிலர் பிலிப்பிடம், 'ஐயா! நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!' (காண். யோவா 12) என்கின்றனர். அங்கே, 'காணுதல்' நம்பிக்கைக்கான முதல் படியாக இருக்கிறது. 

மரியா அறிவித்த செய்தியே திருத்தூதர்களுக்கு நம்பிக்கையின் செய்தியாக மாறுகிறது.

'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற செய்தியை இந்த உலகுக்கு முதன்முதலாக அறிவித்தவர் மகதலா நாட்டு மரியாவே. 

நம் வாழ்வில் கல்லறை நோக்கி நம் முகமும் இதயமும் இருத்தல் வேண்டாம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அவர் நமக்குப் பின் நிற்கின்றார். சில நேரங்களில் தோட்டக்காரர் போல. சில நேரங்களில் போதகர் போல. சில நேரங்களில் ஆண்டவர் போல.

1 comment:

  1. கல்லறையில் “ திரும்பிப்பார்த்து” எனும் வார்த்தை குறித்த புனித அகுஸ்தினாரின் விளக்கம் அழகு.”முகமும்,இதயமும் ஒருசேர அவரை நோக்கி இருந்தால் மட்டுமே அவர் நமக்கு ‘ ஆண்டவராகத் தெரிவார்’ இல்லையேல் அவர் ஒரு தோட்டக்காரரே!” எனக்கு அவர் தெரிவது எப்படி? ஆண்டவராகவா? இல்லைத் தோட்டக்கார்ராகவா? என் பார்வையை சரி செய்யும் நேரமிது.” நான் ஆண்டவரைக்கண்டேன்” எனும் மரியாவின் செய்தியே திருத் தூதர்களுக்கு நம்பிக்கையின் செய்தி. ஏன்? நமக்கும் கூடத்தான்.
    ‘ கிறிஸ்து வாழ்கிறார்’ எனும் செய்தியை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த முதல் அப்போஸ்தலரும் இவரே என்பது இவரின் கூடுதல் பெருமை.

    நமக்குப்பின் நிற்கும் இயேசுவை நாம் பார்ப்பது எப்படி? தோட்டக்காரராகவா? போதகராகவா? இல்லை ஆண்டவராகவா? தந்தையின் கேள்வி என்னைக் கொஞ்சம் உசுப்பி விடுகிறது. எப்படி வேண்டுமானாலும் தெரியட்டும்...என் முகமும்,இதயமும் ஒருசேர அவரை நோக்கிக் குவியும் பட்சத்தில்.

    வெகுசில கதாபாத்திரங்களை வைத்து தந்தை நடத்திய ஒரு மேடை நாடகம்.அழகு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete