Monday, April 12, 2021

மறுபடியும் பிறத்தல்

இன்றைய (13 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 3:7-15)

மறுபடியும் பிறத்தல்

இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக, அதாவது, இயேசு-நிக்கதேம் உரையாடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இயேசுவா அல்லது நிக்கதேமா, யார் தூக்கக் கலக்கத்தில் இருந்தார் என்று தெரியவில்லை. இயேசு ஒன்றைச் சொல்ல, நிக்கதேம் வேறொன்றைச் சொல்ல, இயேசு இன்னொன்றைச் சொல்ல என, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நகர்கிறது நற்செய்தி வாசகம்.

இயேசு சொல்லும் ஓர் உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் சொல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்.'

நேரடியாக இந்த உருவகம் இயேசுவுக்குத்தான் பொருந்துகிறது. அதாவது, உரையாடலின் தொடக்கத்தில், நிக்கதேம் இயேசுவிடம், 'கடவுளிடமிருந்து வந்தாலன்றி', என்று இயேசு கடவுளிடமிருந்து வந்ததை அடிக்கோடிடுகின்றார். ஆனால், அவரின் வார்த்தைகளில் ஐயம் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இந்த ஐயத்தைப் போக்கும் முகத்தான், இயேசு தான் காற்றைப் போல இருப்பதாகவும், தான் விரும்பியதைச் செய்கிறார் எனவும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதும், தான் எங்கே செல்கிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறார். 

ஆனால், 'தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்' என்று சொல்வதன் வழியாக, தன்னைத் தவிர மற்றவர்களும் தூய ஆவியால் பிறக்க முடியும் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார் இயேசு.

இயேசு கொணர்கின்ற மீட்பு, கட்டின்மை அல்லது சுதந்திரம் என்ற பொருளில் தரப்படுகிறது.
காற்றின் தொடக்கம் யாருக்கும் தெரியாது. அதன் முடிவும் யாருக்கும் தெரியாது. அதை யாரும் வேலி போட்டு நிறுத்தவோ, அதன் போக்கை மாற்றவோ இயலாது. 

இந்தக் கட்டின்மைதான் மீட்பு.

இன்று நாம் நேரம் மற்றும் இடத்தால் வரையறுக்கப்படுகின்றோம். நேரத்தையும், இடத்தையும் தாண்டி நம்மால் செயல்பட முடிவதில்லை.

இரண்டு நாள்களுக்கு முன் திருச்சி பண்பலையில் சுவாசம் பற்றி ஒரு மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். பிராணயாமா (மூச்சுப் பயிற்சி) செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் அவர், நாம் மூச்சை உள்ளே இழுத்து, மூச்சை வெளியே விடுவதற்கும் என ஒரு சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் கவனம் செலுத்தும் ஒருவர் நேரத்தையும் இடத்தையும் கடக்க முடியும் என்கிறார்.

ஆக, நாம் எந்தவொரு விருப்பு மற்றும் வெறுப்பினால் கட்டப்படாமல், காற்று போல இருப்பதே இயேசு தரும் மீட்பு.

'மன்னிக்கின்ற இதயம் கோழி இறகு போல மாறிவிடும்' என்பது சந்தால் இன மக்களிடையே விளங்கும் ஒரு பழமொழி. அதாவது, பறக்க ஆரம்பிக்கும்.

பற்றுக்கள் குறையக் குறைய நாம் காற்று போல ஆகிறோம்.

எனக்கென சேர்த்து வைக்கும்போது அது கனமாக மாறுகிறது.

என் மையமாக வைக்கும் அன்பு இச்சை என்றும், எனக்கு நானே சேர்த்து வைக்கும் பணம் பேராசை என்றும், பகிர்ந்துகொள்ளாமல் சேகரிக்கப்படும் அறிவு தற்பெருமை என்றும் மாறிவிடுகிறது. ஏனெனில், இதில் நான் என்னோடு கட்டப்பட்டு என் எடை கூடிவிடுகிறது.

கட்டுக்கள் அவிழ அவிழ ஒருவர் உயரே எழுவார்.

இதுவே மறுபடியும் பிறத்தல்.

இன்று என்னைக் கீழே இழுக்கும் ஊனியல்பு எது? என்னை மேலே இழுக்கும் தூய ஆவியின் இயல்பு எது? முன்னது விடுத்து பின்னது பிடித்தல் சால்பு.

1 comment:

  1. “ மறுபடியும் பிறத்தலின்” வழிமுறைகளைச் சொல்லும் ஒரு பதிவு. பிறக்குமிடமும்,செல்லுமிடமும் தெரியா காற்றைப் போல, தான் யாருக்கும் கட்டுப்படாத ஒரு “ சுதந்திர மனிதன்” எனும் பொருள்படப் பேசுகிறார் இயேசு.தூய ஆவியின் துணையின்றி இது சாத்தியமில்லை எனவும் புரிகிறது.இந்த சுதந்திரம் அல்லது கட்டின்மையை நமக்கும் சொந்தமாக்கலாம்....நாம் விருப்பு வெறுப்பினால் கட்டப்படாமல் காற்றுபோல் இருந்தால். காற்றுபோல் இருப்பது சாத்தியமா என்ன? சாத்தியமே என்கிறார் தந்தை.....மன்னிக்கிற இதயமும்,பற்றற்ற மனமும் எனக்கிருந்தால்.

    பகிர்ந்துகொள்ளப்படாத எதுவுமே நம்மோடு கட்டப்பட்டு எடை கூடக் காரணமாகிறது. கட்டுக்கள் அவிழ...நாம் உயரே எழும்ப........அதுவே ‘மறுபடி பிறத்தல்’ என்கிறது விவிலியம். என்னைக் கீழே இழுக்கும் ஊனியலின் கிடுக்கிப்பிடியை விட,மேலே இழுக்கும் தூய ஆவியின் ஆற்றல் என்னில் வளர வழி சொல்லும் அழகான ஒரு ஆகமம் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!.

    ReplyDelete