Wednesday, April 14, 2021

மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விட

இன்றைய (15 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 5:27-33)

மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விட

திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யோவான் எருசலேம் ஆலயத்தின் அழகுவாயிலில் செய்த வல்ல செயலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. வல்ல செயலைத் தொடர்ந்து பேதுரு சாலமோன் மண்டபத்தில் உரையாற்றுகின்றார். திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறையின் கதவுகள் திறக்கப்பட அவர்கள் எத்தீங்குமின்றி வெளியேறுகின்றனர். 

மீண்டும் அவர்களை அழைத்து விசாரிக்கின்றனர்.

'திருத்தூதர்கள் தலைமைச்சங்கத்தின் சொற்களுக்குக் கீழ்ப்படியவில்லை,' மற்றும் 'அவர்கள் இயேசுவின் இரத்தப் பழியை தலைமைச்சங்கத்தார் மேல் சுமத்தப் பார்க்கின்றனர்' என்னும் இரு குற்றச் சாட்டுகளை முன்வைக்கின்றது தலைமைச்சங்கம்.

எந்தவொரு சலனமுமின்றி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்ற திருத்தூதர்கள்,

'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?' எனக் கேட்கின்றனர்.

இவ்வாறு கேட்பதால், தலைமைச்சங்கத்தாரும் மனிதர்களே என்று அவர்களுடைய வரையறை என்னவென்று அவர்களுக்கு உணர்த்துகின்றனர்.

நாம் பல நேரங்களில் மனிதர் என்ற வரையறையை விடுத்துவிட்டு, நாமே கடவுள்போல பேசுகிறோம், அல்லது செயல்படுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 3:31-36), இயேசுவும் நிக்கதேமிடம் ஏறக்குறைய இதே கூறுகளைக் கொண்டே உரையாடுகின்றார். 'மேலிருந்து வந்தவர்', 'மண்ணுலகிலிருந்து உண்டானவர்' என்ற இருவகை குழுவினரைச் சுட்டிக்காட்டி, இவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள வரையறையைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

நம் வாழ்வின் வரையறைகளை நாம் உணர்வதற்கு நிறைய முதிர்ச்சி தேவை.

1 comment:

  1. ‘ மேலிருந்து வந்தவர்’, ‘ மண்ணுலகிலிருந்து உண்டானவர்’...... இந்த இரு வார்த்தைகளுக்குமுள்ள வித்தியாசத்தைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தங்கள் வாழ்வின் வரையறைகளை.....நமக்குள்ள எல்லைகளை உணர்ந்து செயலாற்ற முடியும், திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யோவான் போல.” மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” தலைமைச்சங்கத்தாரைப் பார்த்து இந்தக்கேள்வியைக் கேட்குமுன் அக்கேள்வி கொண்டுவரும் விளைவை....அதன் விபரீத த்தை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். ஆயினும் இறைவனுக்கே தாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்ற உண்மை அவர்களை பயத்தினின்று தள்ளியே வைத்திருந்தது.பயம் என்ற ஒன்று இல்லாதபோது மனத்தில் பிறப்பது தைரியம். அதுதான் திருத்தூதர்களை அப்படிப்பேச வைத்திருக்க வேண்டும். நாம் எப்படி? எங்கிருந்து வந்தவர்கள்? நம் வரையறை என்ன? சற்றே அமர்ந்து இக்கேள்விகளுக்கு நிதானமாக பதில் காணும்போது மட்டுமே நாம் முதிர்ச்சி பெறுகிறோம்.

    வரையறை....முதிர்ச்சி போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சற்றே அமர்ந்து யோசிக்க வைத்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete