Tuesday, April 20, 2021

பசியே இராது

இன்றைய (20 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:30-35)

பசியே இராது

அருணகிரிநாதர், முக்திநிலை என்பது மாற்றங்களைக் கடந்த நிலை என்கிறார்.

அது என்ன மாற்றங்களைக் கடந்த நிலை?

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதும், 'ஒரே ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது' என்பதும் வாழ்வியல் எதார்த்தம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

பகல்-இரவு, இன்பம்-துன்பம் என வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

நம் உடல் மாறுகிறது.

நம் உணர்வு மாறுகிறது.

நம் சிந்தனை மாறுகிறது.

நம் புரிதல் மாறுகிறது.

நம் அறிதல் மாறுகிறது.

ஆனால், மாற்றத்தை விட்டு கடக்கின்ற நிலையை அடைய முடியுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரை தொடர்கிறது.

'என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்கிறார்.

பசி-நிறைவு, தாகம்-நிறைவு என வாழ்க்கை மாறுகிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றம் என்ற எதார்த்திற்குள் சிக்கிக்கொள்கிறோம்.

இதைக் கடப்பதே முக்தி நிலை.

இதைக் கடப்பதே நிலை வாழ்வு.

பசியே இராது என்றால், எப்போதும் நிறைவு மட்டுமே இருக்கும்.

இதையே இயேசு முதல் ஏற்பாட்டோடு ஒப்பிட்டு, 'அவர்கள் மன்னா உண்டார்கள், ஆனால், அவர்களுக்கு மீண்டும் பசித்தது' என்று சொல்லி, தான் தருகின்ற உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.

எல்லா நேரமும் ஒரே மாதிரியான உணர்வைப் பெற நம்மால் இயலுமா?

நமக்கு நடக்கும் எதுவும் நம்மைப் பாதிக்காத வண்ணம் நாம் நம்முடைய மனநிலையை ஒரே உணர்வில் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

இறையனுபவம் பெற்றவர்களுக்கு முடியும்.

எடுத்துக்காட்டாக, பவுல் சொல்வதுபோல, 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும்' என்பது போல. வறுமை என்று பவுல் வாடுவதுமில்லை. வளமை என்று பவுல் கொண்டாடுவதுமில்லை.

இதுவே பசியற்ற, தாகமற்ற நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 7:51-8:13) ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகின்றார். இயேசுவுக்கான முதற்சாட்சியாக மாறுகின்றார். தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவருக்கு துணிச்சல் வரக் காரணம், அவர் தன் உயிரைக் கடந்தவராக இருப்பதால்தான். 

இந்த நிகழ்வில் ஸ்தேவான் மீது கல்லெறிந்தவர்களின் ஆடைகளைக் காவல் காக்கின்றார் சவுல். அந்நேரம் கடவுள் சவுலைக் காவல் காக்கின்றார். ஆண்டவரின் முக ஒளி ஸ்தேவானையும், சவுலையும் ஒரே நேரத்தில் புரட்டிப் போடுகிறது.

மாறாத இறைவனை அவர்கள் கண்டுகொள்கிறார்கள்.

2 comments:

  1. பசி- நிறைவு, தாகம்- நிறைவு,பகல்- இரவு,இன்பம்- துன்பம் என எல்லாமே மாறிவரும் சூழ்நிலையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதே மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. மாறுவதே வாழ்க்கை என்பதே மனித நியதி...இல்லையேல் நாம் உயிரற்ற ஜடமாகிவடுவோம்.

    நம் உணவுப்பசி போன்றே உணர்வுப்பசியும் மாறிமாறி வரக்கூடியதெனில் அதை நம் கட்டுக்குள் வைத்திருக்கும் விந்தை நமக்குத்தெரிந்திருக்க வேண்டும். அது இறையனுபவம் பெற்றவர்களுக்கு முடியுமெனில் நமக்கும் முடியவேண்டும்.” வறுமையில் வாடாமல்....வளமையில் கொண்டாடாமல் என்றும் ஒரே சீராக இருந்த இருந்த பவுல் நம் முன்னே தெரிகிறார். அதுமட்டுமா துணிச்சலோடு இயேசுவுக்காகத் தன் உயிரைமாய்த்த ஸ்தேவான்! ஸ்தேவான் மீது கல்லெறிந்தவர்களின் ஆடைகளை சவுல் காக்க, சவுலை ஆண்டவர் காக்கிறார்.ஆண்டவரின் ஒளி அவருக்கு வேண்டிய ஸ்தோவானையும்,சவுலையும் வெவ்வேறு விதமாகப் புரட்டிப்போடுகிறது. அதுவே மாறாத இறைவனை அவர்கள் கண்டுகொள்ள வழிசெய்கிறது.

    உடல்உணர்வுகளையும்,உபாதைகளையும் தன் கட்டுக்குள் வைக்கத்தெரிந்த ஒருவரை அவர் உயிர் பிரியும் நேரம் இறைவன் காக்கிறார். இது சாத்தியமாக “ மாறாத இறைவனை” கண்டுகொள்வது ஒன்றே நமக்கு விண்ணுலகைப்பெற்றுத்தரும் வழி.

    உணவையும்- உணர்வையும்,வறுமையையும்- வளமையையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனை இறைவனும் அவன் இறுதி மூச்சுவிடுகையில் தன் கட்டுக்குள் வைத்திருப்பார் என்ற ஆறுதலான...அழகான செய்தி தந்த தந்தைக்கு நன்றிகள்! இறைவன் நம்மைக்காப்பாராக!

    ReplyDelete