Friday, April 30, 2021

இடமும் வழியும்

இன்றைய (30 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 14:1-6)

இடமும் வழியும்

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அறை தயாரிப்பது ஒரு கலை.

அறையைத் தயாரிக்க நாம் ஏன் அக்கறை காட்டுகிறோம்?

ஒன்று, தாராள உள்ளம். அதாவது, நம்மிடம் இடம் இருந்தாலும் அதை அடுத்தவரோடு பகிரத் தயாராக இருக்கும் தாராள உள்ளம்.

இரண்டு, துன்பங்கள் ஏற்றல். அறையை ஒதுக்குவது என்பது துன்பமானது. அங்கு உள்ளவற்றை வேறு ஒரு அறைக்கு மாற்ற வேண்டும். அந்த அறை அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். விருந்தினர் வந்து போகும் வரை சில அசௌகரியங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை வரும். அவர் லைட்டை அப்படியே போட்டுவிடவார். இப்படி நிறைய இருக்கும். இவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று, மதித்தல். நாம் மதிப்புக்குரியவர் அல்லது அன்புக்குரியவர் என்று கருதுபவருக்கே நம் வீட்டில் தங்க இடம் தருகிறோம். 

நான்கு, காத்திருத்தல். அறை தயாராகும் நேரம் தொடங்கி விருந்தினர் வரும்வரை நம் உள்ளத்தில் ஒரு காத்திருத்தலும் எதிர்நோக்கும் இருக்கும். வருபவருக்கு இந்த இடம் பிடிக்க வேண்டுமே என்று நாம் என்னவெல்லாமோ செய்வோம்.

இந்த நான்கு செயல்களையும் தான் தன் சீடர்களுக்குச் செய்வதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்கிறார் இயேசு: 'என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துச் செல்வேன்.' ஆக, முழுக்க முழுக்க ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யச் செல்கிறார் இயேசு. ஏன் இப்படிச் செய்கிறார்? தான் இருக்கும் இடத்தில் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்ற ஆசைதான். வேறொன்றுமில்லை. தான் தந்தையிடம் நெருக்கமாக இருப்பதுபோல தன்னுடன் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்று முனைகின்றார்.

இரண்டாவதாக, அந்த இடத்திற்குச் செல்லும் வழியுமாக தன்னையே முன்வைக்கிறார்: 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'

ஆக, அவரிடம் (தந்தையிடம்) செல்வதற்கு அவர் (மகன்) வழியாகவே செல்ல வேண்டும்.

இவ்வார்த்தைகளை நாம் எப்படி வாழ்வது?

'இடம் ஏற்பாடு செய்வது' என்று இயேசு சொல்வதை நாம் மோட்சம் அல்லது விண்ணகம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது வெறும் சாதாரணமாக அவர் நமக்குத் தயாரிக்கும் ஒரு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் அவரை வழியாக எடுத்துக்கொள்வது.

'வழி' என்பதை 'தீர்வு,' 'துணை' என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். நம் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் எல்லாம் வழியாக அவர் நின்றால் அவரின் உறைவிடத்திற்குள் நாமும் நுழையலாம்.

1 comment:

  1. தன் தந்தை வாழும் இடத்தில் உள்ள பல உறைவிடங்களைக் காலியாக வைக்காமல் அதில் உறைய ஆட்களைத் தேடுகிறார் இயேசு. அந்த உறைவிடங்களைச் சென்றடையும் படிக்கட்டுகளாக அவரே நிற்கிறார்.அவரின்றி வேற்று வழியில்லை. பல நேரங்களில் என் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் வழியாக....படியாக அவர் நின்றால் என் பயணமும் வெற்றியாகும் என்பதை உணர்த்தும் ஒரு பதிவு.

    இந்த விண்ணகச்செய்தியை நம் மனங்களில் ஆழமாக பதிய வைக்க தந்தை எடுத்திருக்கும் முயற்சி..... அவரும் பல உறைவிடங்களுக்குச் சொந்தக்காரரோ எனும் எண்ணத்தைத் தருகிறது. புது இடத்தில் எல்லாமே பொலிவோடு இருக்க தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! செபங்களும்!!!

    ReplyDelete