Wednesday, April 21, 2021

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய (22 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:44-51)

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின், 'வாழ்வு தரும் உணவு நானே' பேருரை தொடர்கின்றது. 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என்னும் மேற்கோளைக் காட்டி, கடவுள் ஈர்த்தாலொழிய யாரும் தன்னிடம் வர இயலாது என்கிறார் இயேசு.

தியானம் மற்றும் செப வழிபாடுகளில், 'நாம் நன்றாகச் செபிக்க வேண்டும் என்பதற்காக இப்போது செபிப்போம்' என்று அருள்பணியாளர் அனைவரையும் அழைப்பதுண்டு. ஆக, இறைவேண்டல் செய்வதற்கும் இறைவேண்டல் தேவைப்படுகிறது. அல்லது நாம் இறைவேண்டலில் பெற்றுக்கொண்ட ஆவியாரின் துணைகொண்டே இறைவேண்டல் செய்கிறோம்.

கடவுளால் ஈர்க்கப்படுதல் என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

காந்தம் மற்றும் இரும்பு உருவகத்தை எடுத்துக்கொள்வோம்.

தனக்கு அருகே வரும் இரும்பைக் காந்தம் ஈர்த்துக்கொள்கிறது. இந்த வகை ஈர்ப்பில் என்ன நடக்கிறது. அந்த இரும்பு இன்னொரு காந்தமாக மாறி அதற்கு அருகில் உள்ள இன்னொரு இரும்பை ஈர்த்துக்கொள்கிறது. இதுதான் கடவுள் நம்மை ஈர்க்கும் முறை.

அலகை அல்லது சாத்தானும் நம்மை ஈர்க்கிறார். அவருடைய ஈர்ப்பு 'கருந்துளை ஈர்ப்பு' போன்றது. நமது பிரபஞ்சத்தில் 'கருந்துளை' (ப்ளேக் ஹோல்') என்று ஒன்று உண்டு. இதற்கு அருகில் செல்லும் எந்தப் பொருளும் மறைந்துவிடும். சூரியனும் கருந்துளைக்கு அருகில் சென்றால் மறைந்துவிடலாம் என்பது வானவியல் அறிஞர்களின் கூற்று. இவ்வகை ஈர்ப்பில் ஈர்க்கப்பட்ட பொருள் தன் இயல்பையும் தன்னையும் இழந்து மறைந்துவிடுகிறது. அலகை நம்மை ஈர்த்துவிட்டால் நாம் இல்லாமல் போய்விடுகிறோம். நம் இயல்பு மறைந்து தீய இயல்பு நம்மைப் பற்றிக்கொள்கிறது. அல்லது நாம் தீய இயல்பைப் பற்றிக் கொள்கிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி, கடவுளால் நான் ஈர்க்கப்படுமாறு என்னைத் தகுதியாக்கி உள்ளேனா? என் இரும்பு இயல்பை நான் தக்கவைத்துள்ளேனா?

அவரால் ஈர்க்கப்பெற்ற நான் ஒருவர் மற்றவரை என்னுடன் இணைத்துக்கொள்ளுமாறு என் கரத்தை நீட்டுகிறேனா?

இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் பிலிப்பின் நற்செய்தி கேட்டு திருநங்கை அமைச்சர் திருமுழுக்கு பெறுகிறார்.

இங்கே, கடவுளால் ஈர்க்கப்பெற்ற பிலிப்பு, திருநங்கை அமைச்சரைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார். மேலும், திருநங்கை அமைச்சரின் உள்ளத்தைக் கடவுள் தூண்டி எழுப்புகின்றார்.

தேரைச் செலுத்துவதும், தேரின் பின் பிலிப்பை ஓடச் செய்ததும், தேரில் பிலிப்பை ஏற்றியதும், மறைநூல்கள் பரிமாறப்பற உதவியதும் கடவுளே.

இவ்வாறாக, கடவுளே அனைத்தையும் தன் பக்கம் ஈர்க்கின்றார்.

இன்று நம்மைச் சுற்றி நிறைய ஈர்ப்புகள் இருக்கின்றன. பல ஈர்ப்புகள் போலியானவை. பல தீமையானவை. பலவற்றின் பின் நாம் செல்லும்போது நாம் மறைந்துவிடுகின்றோம்.

இறைஈர்ப்பே இனிய ஈர்ப்பு. அந்த ஈர்ப்பில் நாம் இயேசுவைக் காண்பதோடு நம்மையும் முழுமையாகக் காண்போம். அங்கே நம் இயல்பு இறையியல்பாக மாறும்.

1 comment:

  1. “ஈர்ப்பு.....இறை ஈர்ப்பு”....... இந்த வார்த்தைகளுக்கு விளக்கம் தர எத்தனை விஷயங்கள்! காந்தமென்றும்...கருந்துளை என்றும்..... ஒரு நாள் பொழுது விடிந்தால் என்னை ஈர்ப்பது எத்தனையோ விஷயங்கள். இதில் முதல் இடத்தை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்? என்னை உறக்கத்திலிருந்து எழுப்பி ஒரு புது நாளைக்காணச் செய்யும் இறைவனுக்கா? இல்லை காலை தோன்றி மாலை மங்கும் மண்ணுக்கு நிகரான விஷயங்களுக்கா? அவரிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்படக்கூட அவரே மனது வைக்க வேண்டுமென்கிறது இறைவார்த்தை.

    “ தேரைச் செலுத்துவதும், தேரின் பின் பிலிப்பை ஓடச்செய்ததும், தேரில் பிலிப்பை ஏற்றியதும்,மறைநூல்கள் பரிமாறப்பட உதவியதும் கடவுளே!”

    இன்று எனக்கு போலிக்கும்- இறை ஈர்ப்புக்குமிடையே உள்ள வேறுபாடு புரிகிறதா? புரிய வேண்டும். அது சாத்தியமானால் மட்டுமே இறை ஈர்ப்பு சாத்தியமாகும்.அதில் நான் இயேசுவைக் காண்பதோடு என்னையும் முழுமையாகக் காணமுடியும். நம் இயல்பும் இறையியல்பாக மாறும்.

    என்னை ஈர்ப்பது இறைவனா? போலிகளா? யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete